இராம நாமம் நல்ல நாமம்!

ஸ்ரீராமஜெயம்!

சிறப்புகள் எல்லாம் சிறப்புற, சிறப்புகளின் மகுடமாய் சீர் பெற்று ஓங்கும் நாமம் இராம நாமம்.

இந்த இராம நாமத்தின் சிறப்புகளை இப்படியாக ஒரு வரியில் சொல்லி முடித்துவிட முடியாது. அதுக்குத்தான் இந்த பதிவு!

தியாகராஜ சுவாமிகள் முதல் பதிவர் திரு.ரமேஷ் சதாசிவம் வரை பலரும் இரசித்துப் பருகிய நாமம் இராம நாமம்.

சதாசிவ பிரம்மேந்திரரும், பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்களும் பாடித் துதித்த இராம நாமம்.

இப்படி எத்தனையோ மகான்கள், பாடிப் பேரின்பம் பெற்ற நாமம் இராம நாமம்.

இராகம் : ஜன சம்மோதினி

எடுப்பு
இராம நாமம் நல்ல நாமம்
நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும்
இராம நாமம் நல்ல நாமம்

தொடுப்பு
தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம்
தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட
இராம நாமம் நல்ல நாமம்

முடிப்பு
ஜனன மரண பயம் தீர்க்கும் இராம நாமம்
ஜனகாதி முனிவர்கள் ஜபித்திடும் நாமம்
மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம்
மாதா பிதா குருவை மதித்த மன்னன்
இராம நாமம் நல்ல நாமம்

இராமன் பரமன். அவன் நாமத்தை தியானித்தல் என்பது சகலகோடி தேவதைகளையும், தெய்வங்களையும் தியானிப்பது ஆகும். இராமன் கையில் இருக்கும் கோதண்டமே ப்ரணவம். அதன் இலக்கே, பரமானந்த பேரின்ப நிலை. அவனது சாரங்கத்தில் தரித்து ஏவப்படும் அம்பெனும் பாணமே, ஜீவன். ஜீவன், இராமானந்த நிலையினை அடைய வழி வகுக்கும் சாதனமாய், விளங்குகிறது இராமனின் வில்! அது போலவே இராம நாமமும், அப்பேரின்பத்தினை அடைய வழி வகுக்கும் சாதனம்!

தியாகராஜரின் தோடி இராகப் பாடல் ஒன்றுண்டு. ‘கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக…’ எனத் துவங்கும் அப்பாடலில், தியாகப் பிரம்மம் சொல்லுகிறார்: ‘நீலமேக ஷ்யாமளன் ஆன சுந்திர மூர்த்தியான இராமனை தியானம் செய்து, இதயக் கமலத்தில், காணப்பெற்றவர்கள், பாக்கியசாலிகள். அவர்கள் மகாராஜாவைப் போன்றாவர்கள்’ என்று.

ப்ரணவம் == பரப்பிரம்மத்தின் சக்தி == கோதண்டம் == இராம நாமம்!
~~~
அடுத்து வருவது:
இராகம் : தேஷ்
இயற்றியவர்: தஞ்சை சங்கரய்யர்

எடுப்பு:
இராம நாமமே துதி மனமே!
க்ஷேமம் உறவே, நீ தினமே,
சீதாராம நாமமே துதி மனமே!

தொடுப்பு:

பூமியை, பொன்னை, பூவையரையும், நீ,
பூஜித்து பின் புண்ணாகாமலே
சீதாராம நாமமே துதி மனமே!

முடிப்பு:

சோதனைகள் பல, வாதனைகள் யாவும்,
நாதனை நினைந்திடில் நாடுமோ?
சீதாராம நாமமே துதி மனமே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூன்றாவதாக, புரந்திரதாசரின் ‘ராமா ராமா’ பாடலை, திருமதி.MLV அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை

பின்னூட்டமொன்றை இடுக