Monthly Archives: ஜூலை 2008

இரசிகப்பிரியா

ந்த இடுகையில் நாம் பார்க்கப்போகிற பாடலில் ஆசிரியர் மிகவும் இசைப்புலமை வாய்ந்தவர். 72 மேளகர்த்தா இராகங்களிலும் இவர் பாடல்கள் இயற்றியிருக்கிறார் என்பதே இவரது இசைப்புலமையை பறை சாற்றும். நீதிமதி இராகத்தில் இவர் இயற்றிய ‘மோகன கர முத்துக்குமரா’ பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல். முருகன் மீதும், மயிலை கற்பகாம்பாள் மீதும் இவருக்கு அளவு கடந்த பக்தி. அவர்கள் மீது எண்ணற்ற பாடல்களை இயற்றியுள்ளார்.

இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட இவர் யார்? கோடீஸ்வர ஐயர் (1870-1936), என்பது இவரது பெயர்.
“கவி குஞ்சர பாரதி” என்றொரு பெரும் புலமை வாய்ந்த கவியின் பேரன். “கவிகுஞ்சரதாசன்” என்று தன் தாத்தாவின் பெயரோடு ‘தாசன்’ என சேர்த்துக் கொண்டார், இவரது சாகித்ய முத்திரைகளில்.

இவரது படைப்புகளின் பட்டியலைப் பார்த்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது:
* சித்தி விநாயகர் பதிகம்
* சண்முக மாலை
* சுந்தரேஸ்வர பதிகம்
* கயற்கண்ணி பதிற்றுப்பத்து
* மீனாட்சி அந்தாதி

இங்கு பார்க்கப்போகிற பாடலின் இராகம் இரசிகப்பிரியா. 72 மேளகர்த்தா இராகங்களில் கடைசி இராகமாகிய இந்த இராகம், மிகவும் சுவையானது. இது, விறுவிறுப்பான பாடல்களை அமைப்பதற்கு ஏற்ற இராகம். முன்பொருமுறை திரு.சிமுலேஷன் அவர்கள் இந்த இராகத்தைப்பற்றி எழுதி இருந்தார். இதோ அதன் சுட்டி. இரசிகப்பிரியாவில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் சித்ரவீணை இரவிகிரண் அவர்கள் இயற்றிய ‘இரசிகப்பிரிய, இராக இரசிகப்பிரியே!. அந்தப்பாடலை இங்கு கேட்கலாம். அந்தப் பாடல் போலவே, இந்த இடுகையில் நாம் பார்க்கப்போகும் இந்தப் பாடல் வரியிலும் இராகத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பது, தற்செயலோ, தவச்செயலோ!

இராகம்: இரசிகப்பிரியா
(72வது மேளம்)
இயற்றியவர் : கோடீஸ்வர ஐயர்
பாடுபவர் : டி.எம்.கிருஷ்ணா

எடுப்பு
அருள் செய்ய வேண்டும் அய்யா – அரசே முருகய்யா
அருள் செய்ய வேண்டும் அய்யா!

தொடுப்பு
மருளுரவே என்னை மயக்கிடும்
மாய வல் இருள் அறவே ஞான
சூரியன் என வந்தோர் சொல்
அருள் செய்ய வேண்டும் அய்யா!

முடிப்பு
நிலையா காயம் இலையே இதனை
நிலையென்று
எண்ணுவதென்ன மாயம்?
நிலையென்று உனையே
நினைந்து நான் உய்ய

நேச கவி குஞ்சரதாச ரசிகப்பிரியா
அருள் செய்ய வேண்டும் அய்யா!

arulseyya_vEndum_i…

பாடலைக் கேட்டீர்களா, எப்படி விறுவிறுப்பாக அமைந்துள்ளதல்லவா!. பாடல் வரிகளில் நான் வியந்தது என்னவென்றால், பல சொற்கள், மிகச்சிரிய சொற்கள் – மருள் உர, இருள் அற, மாய, வல், ஞான, நேச, கவி என இப்படியாக!
விறுவிறுப்பில், அருணகிரியாரை அல்லவா நினைவு படுத்துகிறது!

இவ்வளவு எளிய பாட்டில் எவ்வளவு உயர்ந்த தத்துவமும் அடங்கி இருக்கு! இப்பாடலில், முருகனின் அழகைப்பற்றிப் பாடவில்லை. அவன் அணிந்திருக்கும் வேல், மயில் அல்லது சேவல் பற்றிக் குறிப்பில்லை. அவன் சிவன் சுதன் என்றோ அவனே சிவனே எனவோ சொல்லவில்லை. அவன் முகுந்தன் மருகன் எனச் சொல்லவில்லை. வேறு எதைப்பற்றித்தான் இருக்கு? எதைப்பற்ற வேண்டும் என்றிருக்கு! எதைப்பற்ற வேண்டும்? நிலையானதைப் பற்ற வேண்டும். நிலையிலா உடலைப்பற்றி என்ன பயன்? மிஞ்சுவது மாயை தரும் மருள் மட்டுமே. தொடக்கமில்லா மாயை, இங்கே இப்போதே முடிவு பெற, முடிவில்லா, நிலையான, முருகனை நினைக்க, அதுவே துன்பங்களில் இருந்து மீள்வதற்கான வழி. உன்னைப் பற்றிட அருள் செய்ய வேண்டும் முருகய்யா!

ஓவியரும் இசைக்கலைஞருமான திரு.S.ராஜம் அவர்கள் கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள் என்பது கேள்வி. இதுபோன்ற தமிழ் கீர்த்தனைகளை மக்களிடையே பரவிடச் செய்திடல் வேண்டும். இசைக் கலைஞர்களும் தங்களின் கச்சேரிகளில் நிறைய தமிழ் கீர்த்தனைகளைக் கொடுத்து, தமிழிசையை வளர்க்க வேண்டும்.

பி.கு: இந்தப் பாடலை இன்னும் சில பாடகர்கள் பாடிக் கேட்கையில், பாடல் வரிகளில் சற்றே மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. நீங்களும் சற்றே மாற்றத்துடன் இந்தப் பாடலைக் கேட்டிருக்கலாம்!

உசாத்துணை:
* கர்நாடிகா.நெட்
* வித்வன்.காம்

Advertisements

1 பின்னூட்டம்

Filed under இசை, இரசிகப்பிரியா

எங்கு நான் செல்வேன் ஐயா?: பெ.தூரன்

தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.

இந்த வருடம் பிறந்தநாள் நூற்றாண்டு காணும் அமரர் தூரன் அவர்களைப் “பல்கலைச் செம்மல்” எனவே சொல்லலாம். பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்தது முதல் – விடுதலைப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.
மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர். திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது ‘முருகா, முருகா’ பாடலும் இடம்பெற்றது.
இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:

1. இசைமணி மஞ்சரி (1970இல்)
2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)
3. கீர்த்தனை அமுதம் (1974இல்)
4. நவமணி இசைமாலை (19880இல்)

வடநாட்டினர் தமக்கு அருகிலுள்ள கர்நாடக நாட்டைப்பார்த்து அங்கும் அதற்கு தெற்கிலும் உள்ள இசைக்கு கர்நாடக இசை என்று பெயரிட்டு அழைத்தனர்.

எனத் தூரன் ஒரு சொற்பொழிவில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் இசைச்சங்கம் தூரன் அவர்களில் இசைப் பங்களிப்புகளை பெருமைப்படுத்தும் விதம், 1972இல், ‘இசைப் பேரறிஞர்’ பட்டத்தினை வழங்கியது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1970இல், ‘கலைமாமணி’ பட்டம் வழங்கியது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்(Fetna) இந்த வருடம் ஒர்லாண்டோ,ஃப்ளோரிடாவில் பெரியசாமித்தூரன் அவர்கள் பிறந்த நூற்றாண்டினை விமர்சையாக கொண்டாடுகிறது, மூன்று நாட்களுக்கு, ஜூலை நான்கு முதல்!. அந்தப் பக்கத்தில் நீங்கள் இருந்தால், விழாவில் கலந்து கொள்ளலாமே?

தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்! “தமிழ் கலைக் களஞ்சியம்” என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார். பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் ‘பாரதியின் நூல்கள் – ஒரு திறனாய்வு’ என்கிற தலைப்பில்! “கம்பனுக்கு விருத்தம் போல், பாரதிக்குச் சிந்து” எனத் தெளிவாக இனங்கண்டு சொல்கிறார்.

தூரன் அவர்கள் இயற்றிய இசைப்பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:

Thooran_Keerthanigal
Thooran_Keerthanig…
Hosted by eSnips

தூரன் அவர்கள் இயற்றிய பாடல்களில், நான் கேட்டு மெய்மறந்த பாடல்கள்:
* முருகா முருகா என்றால் உருகாதோ (சாவேரி)
* கொஞ்சிக் கொஞ்சி வா முருகா (கமாஸ்)
* கலியுகவரதன் கண்கண்ட தெய்வமாய் (ப்ருந்தாவன சாரங்கா)
* இன்னமும் அவர் மனம் (சஹானா)
* எங்கு நான் செல்வேன் ஐயா (த்வஜவந்தி)
* தொட்டு தொட்டு பேச வரான் (பேஹாக்)

இந்த எல்லாப் பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், இந்த இடுகைக்கு அவற்றில் ஒன்றினைப் பார்ப்போம்.

எங்கு நான்…

எங்கு நான் செல்வேன் ஐயா
இராகம் : த்வஜவந்தி
பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

எடுப்பு
எங்கு நான் செல்வேன் ஐயா – நீர் தள்ளினால்
எங்கு நான் செல்வேன் ஐயா?

தொடுப்பு
திங்கள் வெண் பிஞ்சினை செஞ்சடை
தாங்கிடும் சங்கராம்பிகை தாய் வளர்மேனியா!

முடிப்பு
அஞ்சினோர் இடரெல்லாம் அழிய ஓர் கையினால்
அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே!
நஞ்சினை உண்டுமே, வானுளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே!

என்ன அருமையாக, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு பாருங்க!.
வெண்மதியாம் வெண் அம்புலிதனை தன் செஞ்சடைதனில் அணிந்த சங்கரன்,
(சுருளார்ந்த செஞ்சடை என திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார்.)
தன்னைப் பணிபவர் தீவினைதனை சங்காரம் செய்யும் சங்கரனைப் பாடுகிறார் தூரனார்.
அப்படிப்பட்ட சங்கரன், தன் மேனியில் அம்பிகையை, தாயை தன்னொரு பாகத்தில் தரித்திருக்கிறானாம்.
அஞ்சியவர் இடரெல்லாம் தவிடுபொடியாய் தகர்த்திட தனது கையினால்,
அபயம் காட்டிடும் அருட்பெரும் அண்ணல் இவனாம்.
(சிவனுக்கு ‘கறை மிடறு அண்ணல்’ என்றொரு பெயரும் உண்டு)
நான்மறைகளால் போற்றப்படும் நாதன், வானுளோர் நலம்பெற
நஞ்சினை உண்ட ‘விடமுண்-கண்டனை’ நாடிடுவார்களாம்.

அப்படிப்பட்ட அண்ணல், என்னைப்பாராது புறம் தள்ளினால், நான் வேறெங்கு செல்வேன்?
எனக்கு வேறென்ன வழி? எல்லாமும் அவனாய் இருக்கும்போது?
அவன் இன்றி எதுவும் இல்லை எனப்படும் போது,
அவனே சரணம் என அவன் தாள் பணிவதன்றி வேறென்ன செய்வேன் யான்?

பெ.தூரன் பற்றி மேலும் அறிய தொடர்புடைய சுட்டிகள்:
* தூரன் வாழ்க்கைக்குறிப்புகள்
* தென்றல் இதழில் திரு.மதுசூதனன்
* சென்னை ஆன்லைன் தளம்

3 பின்னூட்டங்கள்

Filed under இசை

சாந்தி நிலவ வேண்டும்

அந்த துயரச் சம்பவ அறிவிப்பும், பின்னணியில், “வைஷ்ணவ ஜனதோ..” பாடலும்:

சாந்தி நிலவ வேண்டும்.
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்,
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்.
காந்தி மகாத்மா கட்டளை அதுவே
கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி
சாந்தி நிலவ வேண்டும்!
உலகில் சாந்தி நிலவ வேண்டும்
கொடுமை செய் தீயோர், மனமது திருந்த
நற்குணம் அது புகட்டிடுவோம்!
மடமை அச்சம் அறுப்போம் – மக்களின்
மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்!
திடம் தரும் அகிம்சாயோகி நம்
தந்தை ஆத்மானந்தம் பெறவே
கடமை மறவோம், அவர் கடன் தீர்ப்போம்
களங்கமின்றி அறம் வளர்ப்போம்!
(சாந்தி நிலவ வேண்டும்)
எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி!

சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்களின் அன்பான குரலில் கேட்கலாம் இந்த பாடலை.
கூடவே, அவரது பேட்டியையும் கேட்கலாம்:

பாடலை எழுதியது – மிருதங்க வித்வான், சேதுமாதவ ராவ் அவர்கள். மகாத்மா உயிர் நீர்த்தபோது இந்தப் பாடலை எழுட, திருமதி DKP அவர்கள் பாடி, மிகவும் புகழ்பெற்ற பாடல் இது.
இராகம் : திலாங் (ஹரிகாம்போஜி ஜன்யம்)

பேட்டியின் முதல் பகுதி இங்கே.

எங்கு அமைதி நிலவுகிறதோ

எங்கு போர் மடிகிறதோ

எங்கு அன்பே ஆள்கிறதோ

அவ்விடமே புண்ணிய பூமி!

ஆம், சாந்தி நிலவ வேண்டும்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை