Monthly Archives: ஒக்ரோபர் 2008

கலைவாணியே…

சகலகலா வல்லி வாணி நின் அடிபோற்றி வணங்கியே பாடிட ஓர் பாட்டு.
இராக தாள சந்தி சேர்த்து, தூய கானம் பாடிடவே, நீ அருள்வாயே, வேதரூபிணி, வித்யாதேவி.

“ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல்வாள் என்
உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் துடியிடையும்
அல்லும் பகலும் நவரத முந்ததித்தாற்
கல்லுஞ் சொல்லாதோ கவி”

குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையின் பத்து பாடல்களும், அவற்றின் பொருளும் படிக்க குமரன் அவர்களின் பதிவை இங்கே நாடிடவும்.

வாணி வாகதீஸ்வரி!
—————
பாடலை இயற்றியது : B.A.சிதம்பரநாத்
இராகம் : வாகதீஸ்வரி
பாடுபவர் : கே.ஜே.யேசுதாஸ்

எடுப்பு
வாணி வாகதீஸ்வரி
வரம் அருள்வாய், இசைவாய் நீ வாகதீஸ்வரி!
வரம் அருள்வாய், இசைவாய் கலைவாணி, வாகதீஸ்வரி!

தொடுப்பு
வேணி, வேத புத்தக பாணி
வினைகள் அகற்றும் வித்யாரூப
(வாணி வாகதீஸ்வரி)

முடிப்பு
எத்தனை ஜென்மம் நீ எனக்களித்தாலும்
இசைஞானமும் நல்லொழுக்கமும் வேணும்!
அத்தனையும் நீ எனக்களித்தாலும்
என்னருகில் இருந்து ஆண்டிட வேண்டும்!
(வாணி வாகதீஸ்வரி)
பாடலை இறக்கிக் கொள்ள:
வாணி வாகதீஸ்வரி

Advertisements

1 பின்னூட்டம்

Filed under இசை, இசையன்னை, வாகதீஸ்வரி

தங்கமழை பொழி திருமகள்

ஹிரண்மயிம் லக்ஷிமீம் பஜாமி எனத் தொடங்கும் முத்துசாமி தீக்ஷிதரின் கிருதி ஏற்பட்ட கதை இது:

ஒருமுறை தீக்ஷிதரின் சிஷ்யர் ஒருவர், அவரிடம் வந்து, ஐயா, நீங்கள் மகாராஜாவைப் போய் சந்திக்கலாமே, உங்கள் வரவுக்காக காத்திருக்கிறார் அவர். நீங்கள் போய் சந்தித்தாலே போதும், உங்களுக்கு அவர் பொன்னும் பொருளும் வாரி வழங்கிடுவார் என்று. அந்த சிஷ்யருக்குத் தெரியும் தீக்ஷிதரைப் பற்றி. இருப்பினும் தீக்ஷிதரின் மனைவியார் சில தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டாராம். அப்போது, அந்த சமயத்தில் குறிப்பாக, மகாராஜாவைப்பற்றிய செய்தியை காதில் போட்டு வைக்கலாமே என நினைத்தார் போலும்.

தீக்ஷிதரோ, இந்த ஆசைக்கு வளைந்தாரில்லை. ஸ்ரீவித்யா உபாசகரான அவர், சாட்சாத் இறைவனைப் பாடும் இந்த நாவால், சாமன்யர்களைத் துதிப்பதா, இயலாது என மறுத்துவிட்டார். அப்போது, தங்க விக்ரகமாக மஹாலஷ்மியே தன் இருதயத்தில் நிறைந்திருக்க, அவளே இதுபோன்ற நிலையில்லா உலகில் இருந்தென்னைக் காப்பாள், என்று பாடுகிறார். நிலையான செல்வம், இறையருள் மட்டுமே என்கிறார். அன்றிரவே, அவரது துணைவியாரின் கனவில் மஹாலஷ்மி தோன்றி, தங்க மழையாய் கனவில் பொழிவது போலவும், இது போதுமா, எனக் கேட்பது போலவும் கனாக் கண்டாராம். அப்போதுதான் அவருக்கு, சாட்சாத் திருமகளே அருள் பாலித்திடும்போது, இதைவிடவும் செல்வம் வேறுண்டோ என உணர்ந்தாராம்.

இராகம் : லலிதா
தாளம் : ரூபகம்
பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
பாடலை இங்கு கேட்கலாம்.

பல்லவி
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஸதா3 ப4ஜாமி
ஹீன மானவாஸ்1ரயம் த்யஜாமி

அனுபல்லவி
சிர-தர ஸம்பத்ப்ரதா3ம்
க்ஷீராம்பு3தி4 தனயாம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஹரி வக்ஷ:ஸ்த2லாலயாம்
ஹரிணீம் சரண கிஸலயாம்
கர கமல த்4ரு2த குவலயாம்
மரகத மணி-மய வலயாம்

சரணம்
ஸ்1வேத த்3வீப வாஸினீம்
ஸ்ரீ கமலாம்பி3காம் பராம்
பூ4த ப4வ்ய விலாஸினீம்
பூ4-ஸுர பூஜிதாம் வராம்
மாதரம் அப்3ஜ மாலினீம்
மாணிக்யாப4ரண த4ராம்
கீ3த வாத்3ய வினோதி3னீம்
கி3ரிஜாம் தாம் இந்தி3ராம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஸீ1த கிரண நிப4 வத3னாம்
ஸ்1ரித சிந்தாமணி ஸத3னாம்
பீத வஸனாம் கு3ரு கு3ஹ –
மாதுல காந்தாம் லலிதாம்

பொருள்:
பல்லவி:
எப்போதும் என் இதயத்தில் கொலுவிருக்கும் தங்கமே, திருமகளே,
துணை நீ தானே, நிலையிலா மானிடர் தொடர்பினை அறுப்பாயே.

அனுபல்லவி:
நிலையான செல்வமாம், வீடுபேறுதனை வழங்குவாயே, பாற்கடலின் குமாரியே.
ஹரியின் ஹிருதயத்திலுருப்பாயே – மான் போலும், இளம்பாதம் கொண்டவளே.
தாமரை போன்ற கரங்களில் அல்லி மலரைத் தரித்தவளே,
மரகத வளை அணிந்தவளே.

சரணம் :
வெள்ளைத் தீவினில் வசிப்பவளே, கமலாம்பாள் நீதானே.
கணங்களும் தேவரும் தொழுதிட, தாமரைமாலை அணிந்தவளே.
நவரத்தின ஆபரணம் சூடி, ஒளி விடுபவளே.
இசைக் கருவிகளின் நாத இன்பத்தை இரசிப்பவளே.
குளிர் நிலவின் பொலிவே.
ஸ்ரீசக்ர சிந்தாமணியில் வீற்றிருந்து,
பக்தர்க்கு வேண்டியதை அளிக்கும் தேவ லோகத்து இரத்தினமே.
பட்டு பீதாம்பரம் அணிந்தவளே.
குருகுஹனின் மாமன் மனைவியே, லலிதாம்.

(குருகுஹ என்பது, தீக்ஷிதரின் முத்திரை; குஹன் என்பது இங்கு முருகனையும் குறிக்கிறது!. ‘லலிதா’ என இராக முத்திரையும் வருகிறது.)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, இசையன்னை, லலிதா

அம்பா, என்ன சொல்லிப் பாடுவேன்?

அம்பா, அடிமை நான், உனை என்ன சொல்லிப் பாடுவேன்?
பாபநாசம் சிவன் அவர்களைப்போல்,

அம்பா எனது அறிவு வந்த நாள் முதலாய்
அகமகிழ்ந்து, ஆலயம்தோறும் வந்து
செம்பொன் அடிவணங்கி…
அம்பா உனது பாத மலரே தஞ்சம்
என்று கேதார இராக கிருதியில்,
சிவராஜதானி நகர் வாழும் நாயகியை இராஜேஸ்வரி, பரமேஸ்வரி என்கிற பெயர்களால் அழைத்துப் பாடுவேனோ!

அல்லது,

பக்தர்கோடிகளை பரிந்து காக்கும் பரதேவதையும் நீயன்றோ, உனக்கு பாரபட்சம், ஓரவஞ்சனையும் உண்டோ, நான் என் செய்வேன்
முக்திமுக்தி சகல போகபாக்கியமும் பரிந்தருளும்
புவனேஸ்வரி
பூமகள், நாமகள் பணி
மயிலாபுரி கற்பகமே,
எளிய இராமதாசன் என்னைக் காத்தருள் அம்மா

என, ‘என்னைக் காத்தருள்வாய் அம்மா‘ என்கிற சரஸ்வதி இராகக் கிருதியில் பாடுவேனோ!

——————————————————————
தண்டபாணி தேசிகரைப் போல்,

அருள வேண்டும் தாயே
என்னும் சாரமதி இராகக் கிருதியில் சொல்லுவது போல்
பொருளும், புகழும் பொருந்தி வாழ
புவியின் நாதனை நினைந்து வாழ
கலைகள் கற்கவும் கற்பனை செய்யவும்
காலம் கடவாமல் கருத்தை திரட்டவும்
உலகிலே நல்ல உண்மைகள் பேசவும் உனை நினைக்கவும், உறுதியாய் வாழவும்
அருள வேண்டும் தாயே,
அங்கயர்கண்ணி
நீயே!

என பட்டியல் வைத்திட இயலுமோ!

———————————————————————
பெரியசாமித் தூரனைப்போல்,

தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வள்ளி – ஜகமெல்லாம் படைத்த
தாயே திரிபுரசுந்தரி,
உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி, உன் தாளிணை மலரே சரணம்!

என்ற சுத்த சாவேரி இராகப் பாடலைப் பாடி உன்னை நாடிட வேண்டுமோ!

—————————————————————
கனம் கிருஷ்ணயரைப்போல,

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
சுக ஸ்வரூபணி மதுர வாணி
சொக்கநாதர் மனம் மகிழும்
மீனாட்சி

என்ற ரதிபதிப்ரியா இராகக் கிருதியில் பாடி மகிழ்வேனோ!
பாடலின் சுட்டி இங்கே.
————————————————————————-
மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் போலத்தான்,
ஷ்யாம கிருஷ்ண சகோதரி,
சிவசங்கரி, பரமேஸ்வரி,
காமாக்ஷி அம்பா,
அனுதினமும் மறவேனே என்கிற பைரவி இராக ஸ்வரஜதியில்தான் பாடிட இயலுமோ!
இப்பாடலை இங்கு கேட்கலாம்.
———————————————————————–
அன்ன பூர்ணே விசாலாட்சி அகில புவன சாட்சி, கடாக்ஷி!

எனும் மும்மூர்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதரின் சாமா கிருதியைத் தான் பாடி உன் அருளை நாடிட வேண்டிடுவேனோ! : பாடலின் சுட்டி இங்கே.
———————————————————————-
கும்பிட்ட நேரமும் “சக்தி”யென்றால்
உனைக் கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!

என்று மகாகவி சுப்ரமணிய பாரதி போல், பராசக்தியே உனை வேண்டி ஓம்கார சக்தி முழக்கமிடுவேனோ!
——————————————————————
அடியேன், எளியேன், இப்பெரிய மகான்களெல்லாம் உன்னை உபாசித்தது போல், என்னால் இயலுமா எனத் தெரியவில்லை. இவ்வடியார்களின் அடியனாய், நின் கடைக்கண் பார்வைக்கு காத்திருக்கும், என்னையும் நீ காத்து ரட்சி!. அருட்பிச்சை இட்டு என்னை ஆதரி!

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, இசையன்னை

முகாரி : என்றைக்கு சிவ கிருபை…

ளிதாகச் சொல்லி விடுவோம், முகாரி இராகத்தைப் பற்றி – அது சோக உணர்வினைத் தருவதற்கு ஏற்ற இராகம் என்று. ஆம் என்றாலும், மிகவும் உருக்கமான வேண்டுதலுக்காகவும் இந்த இராகத்தினை பயன்படுத்துவதுண்டு. திரு. நீலகண்ட சிவன், இயற்றிய இந்தப் பாடலில் முகாரியைப் பார்க்கலாமா. இவர் இயற்றிய ‘தேறுவதெப்போ நெஞ்சே’ பாடலை முன்பொரு இடுகையில் பார்த்திருக்கிறோம் என்பதையும் நினைவு கூர்கிறேன் இங்கே. இவரைப் பற்றி சுவையான கதைகளும் இருக்கு, அவற்றை இன்னொரு இடுகையில் பார்க்கலாம்.

இராகம் : முகாரி
தாளம் : மிஸ்ர சாபு
இயற்றியவர் : திரு.நீலகண்ட சிவன்
பாடுபவர்: ரஞ்சனி & காயத்ரி

என்றைக்கு சிவ கிருபை…

எடுப்பு
என்றைக்கு சிவ கிருபை வருமோ? – ஏழைக்கு
என்றைக்கு சிவ கிருபை வருமோ? – ஏழை,
என் மன சங்கடம்(/சஞ்சலம்) அறுமோ?

தொடுப்பு
கன்றின் குரலைக்கேட்டு கனிந்து வரும் பசுபோல்
ஒன்றுக்கும் அஞ்சாத என் உளத் துயரம் தீர்க்க
(என்றைக்கு சிவ கிருபை வருமோ?)

முடிப்பு
உண்டானபோது கோடி உற(வு)முறையோர்கள் வந்து
கொண்டாடி கொண்டாடிக் கொள்வார் – தனம்
உண்டானபோது கோடி உற(வு)முறையோர்கள் வந்து
கொண்டாடி தொண்டாடிக் கொள்வார் – தனம் குறைந்தால்
கண்டாலும் பேசார் – இந்த கைத்தவமான பொல்லாச்
சண்டாள உலகத்தை தள்ளி நற்கதி செல்ல
(என்றைக்கு சிவ கிருபை வருமோ?)

பாடல் முழுதும், என்னமாய் எதுகை வந்து, அழகாய் வடித்திருக்கு, இந்தப் பாடலை, என்று வியக்காமலிருக்க முடியவில்லை. தொடுப்பில் இவர் சொல்லும் வரிகளை கவனிக்க. ‘இளங்கன்று பயமறியாது’ என்பதுபோல, ஒன்றுக்கும் அஞ்சாமல் நான் உன் பின்னே தொடர்ந்தாலும், என்னுள்ளே துயரம் தீர்ந்த பாடில்லை என்கிறார்.

சில நாத்தீக நண்பர்கள் கேட்பார்கள், கிண்டலாக. நீங்கள் தான் ஆன்மீகவாதியே – உங்களுக்கு துயரமே இருக்கக் கூடாதே என்று. துயரம் இல்லாமல் இருப்பதற்கல்ல ஆன்மீகம். துயரை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினை அளிப்பது ஆன்மீகம். துயர் முடிவது, தான் என்பதே இல்லாமல் இருக்கும்போதுதான். இதனை உணர்த்துவதுதான் ஆன்மீகம். அந்த துயரம், எப்போதைக்குமாக, முடிவாக, முடிவது எப்போதென்றால், சிவ கிருபை வந்தென்னை தடுத்தாட்கொளும்போது. அந்த நிலை வருவது எப்போது என்கிறார், சிவன் இப்பாடலில்.

இப்பேதை உலகில், பொருளுக்காக பொல்லாத செயலை எல்லாம் செய்து, பெரும் பாதகப் பழிகளில் உழன்று வரும் மனித உலகத்தைப் பார்த்து, சண்டாள உலகம் என வெறுப்பதினை, சரண அடிகளில் காணலாம். உறவு என்று சொல்லி, ஓடி வரும் மனிதர்கள் நம்மை போற்றிக் கொண்டாடுவர், பலப்பல தொண்டாற்றுவர். ஆனால், நம் கையில் இருக்கும் செல்வம் குறைந்து போனாலோ, முகமெடுத்துக்கூடப் பார்க்க மாட்டார் என்பதனைக் கவிஞர் அழகாகச் சொல்கிறார்.

நற்கதி என்னும் பேறினை அடைய என்றைக்கு சிவ கிருபை வருமோ?

உசாத்துணை:
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் @ சென்னை ஆன்லைன்.காம் தளம்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, முகாரி

கிரிதாரி – உபகாரி – சக்ரதாரி

என்னவோ போங்க, இவரை இப்படியெல்லாம் சொல்லறாங்க, யாரு இவரு? கிரிதாரியாமே, பெரிய உபகாரியாமே, அப்புறம் சக்ரதாரியமே, அப்படிப்படவரு யாருங்க?

கிராமத்து அதிகாரி சரி, அது என்ன கிரிதாரி? கிரின்னா மலையாமே. மலைக்கு அதிகாரியா?, அல்லது மலையை தூக்கியவரா? ஓ, தன் சுண்டு விரலில், கோவர்த்தன மலையைத் தூக்கி நிறுத்தி, அங்கே இருக்கிற கிராமம், குளிர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படாம, மலையையே குடையா பிடிச்சவாரா! ஓகோ!

அப்புறம் என்ன சொல்லறாங்க, உபகாரி?, பெரிய உபகாரம் செஞ்சவராமே – அப்படி என்ன செஞ்சாரு? ஓ, கதறி அழைத்த பெண்ணின் மானத்தைக் காத்தவராமே. ஆமாங்க அது பெரிய உபகாரம் தான்.

இன்னமும் சொல்லறாங்க என்னவோ, சக்ரதாரி என்று. சக்கரம் கொண்டவரு என்ன செஞ்சாரு?. பிளிரு கேட்டபோது, பதறிப்போய் காப்பதினாராமே. அது என்ன பிளிறு, ஓ அதுவா, இந்த யானைகள் கத்துமே, அந்த சப்தம் தானே பிளிறு.
அட, களிறுனா யானை இல்லையா. களிறு – அதன் சப்தம் – பிளிறு : என்ன சொற்பொருத்தம்!.
அட, ஆமாம், அன்று, முதலை தன் காலைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்தபோது, அக்களிறின் பிளிரிடும் சப்தம் கேட்டு ஓடி வந்து, தன் சக்கரம் விட்டு, அந்தக் களிறைக் காப்பாற்றினாராமே!

இப்பேர்பட்டவரு, யாருங்க, கொஞ்சம் படம் போட்டுக் காட்டுங்களேன்?

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி:

துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி:

பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி:

ஓ, அப்படியா, இவரு கிட்ட நாம என்ன கேட்கலாம்?,

வளர்த்தென்னை இங்கு பரிபாலி. என்னை உன்பால் மிகுந்த அன்பு காட்டுமாறு வளர்த்து விடு.
உன் நாமம் அதைப்பாடி, நற்கதி பெறும் வழிகாட்டு.
களிறு மீட்டதுபோல், களபம் என் அறியாமை போக்கிடு.
துகில் மீட்டியதுபோல், என் அறிவினை மீட்டிடு.
கூக்குரல் கேட்டிட, வந்து காத்திடு.

குடை பிடித்த கிரிதாரி, துகில் மீட்டிய உபகாரி, களிறு மீட்ட சக்ரதாரி என்னை இங்கு பரிபாலி!. நம்ம தமிழ் மறை என்ன சொல்லுது பார்ப்போமா:

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.
– நம்மாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (3042)


எண்ணிலா வூழி யூழி
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
களைகணாக் கருது மாறே.
– தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (915)

ஆமாங்க, நீந்திக் கடக்க முடியாத, பிறவிக் கடலைக் கடக்க இவர் உதவியை நாடினால், கடக்க முடியுமாமே.
அலோ, சாரு,
கிரிதாரி – உபகாரி – சக்ரதாரி,
நேரா வந்து இங்கே என்ன பரிபாலிக்கணுமுங்க!

விருத்தம்
இராகங்கள் : ஷண்முகப்ரியா, வலஜி, கானடா
குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி,
துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி,
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி,
கிரிதாரி – உபகாரி – சக்ரதாரி,
வளர்த்தென்னை இங்கு பரிபாலி.


பாடுபவர்: ரஞ்சனி & காயத்ரி

குளிர் மழை காக்க …

3 பின்னூட்டங்கள்

Filed under இசை

குன்னக்குடி – அஞ்சலி

குன்னக்குடி, குன்னக்குடி எனச் சொல்லி, குன்றக்குடியில் பிறந்தவருக்கு, அவர் பெயரே குன்னக்குடியாகி விட்டது!

இசை மேதை குன்னக்குடி வைத்யநாதன், வயலின் வாத்தியத்தில் கோலோச்சி உயர் நிலையில் வீற்றிருந்தார் என்பது நாமெல்லாம் அறிந்திருந்தது.

அது மட்டுமல்லாமல் திரை இசையிலும் அவர் பங்கேற்று பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
இது அவர் இசை அமைத்த ஒரு பாடல்: படம்: திருமலை தேன்குமரி (1970)

அவரது பன்னிரெண்டு வயதினிலேயே, அரியக்குடி இராமானுஜ ஐய்யங்கார், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம் போன்ற புகழ்பெற்ற இசை விற்பன்னர்களுக்கு, பக்க வாத்தியமாக வயலின் வாசித்த பெருமை, இவரைச் சாரும். பின்னாளில் வயலினை முதன்மையாகக் கொண்டு, வயலின் கச்சேரிகளை பெரிதும் நடத்தி, தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். அந்த தனி இடத்தில் அவரது தனி பாணியும், தனித்தன்மையுடன் பிரகாசிக்கும். திரு.ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாயன வித்தவான்களுடன் சேர்ந்தும், திரு.வளையப்பட்டி சுப்ரமணியன் போன்ற தவில் வித்வான்களுடன் சேர்ந்தும் கச்சேரிகளை நடத்தி, இசைக் கருவிகளில் இசை மழைகளை பொழிந்திருக்கிறார். பண்டிட் ஜாகீர் ஹூசைன் போன்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுடன் இணைந்து ஜுகல்பந்தி நிகழ்சிகளையும் தந்திருக்கிறார். தர்பாரி கானடாவில், இவர் இசையமைத்த ‘மருதமலை மாமணியே முருகய்யா’ பாடல், பாரெங்கும் பிரசிதம். இசையின் மருத்துவ குணங்களில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.

இசையில் தனிப் பெருமையுடன் திகழ்ந்த பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவுக்குப் பின்னர், அவரைப்போல் அந்த வயலினை எடுத்து யார் வாசிப்பார்கள் என்று கேட்கிறார், திரு.சுப்புரத்தினம் ஐயா: துன்பம் நேர்கையில்….

திரு. குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவுக்கு நம் இதய அஞ்சலிகள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, Music

அருணாசலக் கவிராயர்

மிழ் மூவர் என்று நம் இசை அறிஞர்களால் போற்றப்படும் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் அவர்களைப் பற்றி இந்த இடுகையில் பார்க்கப்போகிறோம். தமிழில் கீர்த்தனைகள் உருவாக்கிய முன்னோடிகளான இம்மூவரில், மற்ற இருவரான முத்துத்தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை பற்றி ஏற்கனேவே முன்பொரு இடுகையில் பார்த்தோம்.

அருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, ‘இராம நாடகக் கீர்த்தனம்‘ எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற ‘ஏன் பள்ளி கொண்டீரய்யா’ பாடல். ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்‘ போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.

முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் ‘அனுமன் விஜயம்’ என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, ‘அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?’ என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
‘அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?’
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
ராமசாமியின் தூதன் நானடா ராவணா!”, என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், ‘பாய்ந்தானே அனுமான்’, என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.

சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.

இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:

 • ஏன் பள்ளி கொண்டீர் ஐயா – ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
  இராகம் : மோகனம், தாளம் : ஆதி
  பாடுபவர் : சுதா ரகுநாதன்
  பாடலை இங்கு கேட்கலாம்.

 • ஆரோ இவர் ஆரோ – என்ன பேரோ அறியேனே
  இராகம் : பைரவி, தாளம் : ஆதி
  பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி
  பாடலை இங்கு கேட்கலாம்.

 • கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா
  இராகம் : வசந்தா, தாளம் : ஆதி
  பாடுபவர் : சௌம்யா
  பாடலை இங்கு கேட்கலாம்.

 • இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே
  இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி
  பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
  பாடலை இங்கு கேட்கலாம்.

 • எப்படி மனம் துணிந்ததோ என் சுவாமி
  இராகம் : ஹூசைனி, தாளம் : கண்ட சாபு
  பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

  பாடலை இங்கு கேட்கலாம்:

  Eppadi Manam .mp3

பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக ‘நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்’ அல்லது ‘பவமான சுதடு படு பாதார விந்த முலகு’ பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

முடிப்பு
(சஹானா சரணம்)
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை