இராகம் தானம் பல்லவி

“இராகம்,தானம்,பல்லவி”, என்பது நமது பாரம்பரிய இசை வழக்கங்களில் ஒன்று. என்னதான் அது என்று கொஞ்சம் அலசிப் பார்க்கலாமா? இராகம் மற்றும் தானம் பகுதிகளில் பாடல் வரிகள் இருக்காது. பொதுவான ஆலாபனை தான் இருக்கும். இது என்ன ‘ததரினஅஆஆஅ..’ ன்னு பாடிக்கிட்டு இருக்காங்களேன்னு, முதலில் கேட்பவர்களுக்கு இருப்பவர்களுக்குத் தோன்றும். நானும் அப்படி நினைத்தது உண்டு. ஆனால், நிறையக் கேட்க கேட்க, இந்த இராகம், தானம் பல்லவியில், இராகத்தினை ஆழ்ந்து இரசிக்க லயிக்க இயலும், என்பது புரிகிறது.

RTP – என வழங்கப்படும், “இராகம்,தானம்,பல்லவி” யில்
இராகம் பகுதி :- இராக ஆலாபனை செய்வது போன்றது. ஆனால், சற்றே விரிவாக ஆலாபனை செய்வது. திரு.ஜி.என்.பாலசுப்ரமணியம், இதைச் சிறப்பாகச் செய்து, அதில் முத்திரை பதித்தவர். அவர் RTP பாடுகையில், முதலில் இராகத்தின் சாயலைக் காட்டும் ஆலாபனை, தொடர்ந்து வயலின், பின்னர் நீண்ட, ஆழ்ந்த ஆலாபனை, மீண்டும் வயலின் – எனப் பகுதி பகுதியாக இராகம் பகுதியினை சுவையாகத் தருவார். இப்போதெல்லாம், அதைக் காண்பது அரிது, பாடகர் ஆலாபனையை முழு மூச்சில் முடித்துவிட, வயலினார் ஆலாபனையைத் தொடருவார். இரண்டு அல்லது மூன்று வேகங்களிலும் பாடுவது உண்டு.

தானம் பகுதி :- தாளம் + ஆலாபனை = தானம். தாளத்தோடு சேர்த்த ஆலாபனையான இதை, பொதுவாக மத்தியம காலத்தில் பாடுவார்கள், இந்தப் பகுதியில். இதில் குறிப்பாக ‘தா’, ‘னம்’, ‘தோம்’, ‘நொம்’ போன்ற சொற்கட்டுக்களால் நிறைந்திருக்கும். பொதுவாக, பாடுபவரும், வயலின் இசைப்பவரும் மாற்றி மாற்றி இசைப்பார்கள். மிருதங்கம் சில சமயங்களில் சேர்ப்பதும் உண்டு.

பல்லவி பகுதி :- இறுதியாக, பல்லவி பகுதியில் தான், பாடலின் வரிகளையும் சேர்த்து பாடப்படும். அதுவும், பொதுவாக ஒரே ஒரு வரிதான் இருக்கும். அந்த ஒரு வரியினையே தங்கள் கற்பனைக்கேற்ப, விரிவாக பலவாறு விரித்துப் பாடுவார்கள். இப்பகுதியினை ‘நிரவல்’ என அழைப்பர். அதன் பின், பல்லவியை மூன்று முறைப் பாடும், திஸ்ரம் அல்லது திரிகாலம் என்பதைப் பாடுவர். அதன் பின், பல்லவியை, நான்கு முறை பாடுவர். நடையையோ அல்லது தாளத்தையோ வெவ்வேறாக மாற்றி, பல்லவி்யைப் பாடிட, பாடலுக்கு ‘வேகம்’ சேர்க்கும் அழகினைப் பார்க்கலாம். ஒரு இராகத்தோடு நிற்காமல், பல்லவியை, இராகமாலிகையாகவும் பாடுவர்.

பல்லவி முடிந்தபின், மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் வாசிப்பது வழக்கம்.

பெரும் பாடகர்கள் அனைவரும், தங்களுக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிப்பதும் வழக்கம். ஜி.என்.பி அவர்களுக்கு, ஆலாபனையில் கவனம் என்றால், அரியக்குடியாரும், செம்மங்குடியாரும் தானம் பகுதியில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். டி.என்.சேஷகோபாலன் அவர்கள் ஒன்றரை மணி நேரம் வரை கூட, ஒரே ராகம் தானம் பல்லவியைப் பாடியிருக்கிறார். அந்த அளவிற்கு, பாடகர் தனது கற்பனைத் திறனை பயன்படுத்தி, விதவிதமான கணக்குகளில் சஞ்சரிக்கும் சங்கதிகளைப் பாடுவதற்கான தளமாக இந்த இராகம்-தானம்-பல்லவி அமைகிறது. இசையின் சுரங்களின் கணக்கில் அமையும் அறிவியலும், அவ்வறிவியலுக்கு அப்பால், அங்கே அது கலையாக பரிமாணிப்பதும், என்ன அழகு, எத்தனை அழகு!

இங்கே, ஒரு இராகம், தானம், பல்லவியினைக் கேட்கலாமா?

இயற்றியவர்: மகா வைத்யநாத சிவன்
பாடுபவர் : செம்பை வைத்யநாத பாகவதர்
இராகம் : தோடி
பல்லவி வரி : உனது பாதம் துணையே, ஓராறு முகனே, உனது பாதம் துணையே!

Ragam Thanam Palla…


(படத்தில் : செம்பை வைத்யநாத பாகவதரும், செம்மங்குடி அவர்களும்; வயலினில் இருப்பது பிடில் சௌதய்யா அவர்கள்)

மேலும், மதுரை மணிஐயர் அவர்கள் பாடிட, பல்லவி பகுதியினை மட்டும் இங்கே கேட்கலாம்:
MaduraiManiIyer-RTP
மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அவர்கள் பாடிட, இராகம் (தானம்) பல்லவியினை இங்கு கேட்கலாம்:
Maharajapuram-RTP
மேலே எப்படி மூன்று இசை விற்பன்னர்கள், மூன்று விதமாக பாடியுள்ளார்கள் என்பதைக் கேட்கையில், நமது பாரம்பரிய இசையிலும் கற்பனைக்கேற்ப பாடுவதற்கு இடமும், கட்டமைப்பும் இருக்கத்தான் செய்கிறது என்பது தெளிவாகிறது. சமீபத்தில், டி.எம்.கிருஷ்ணா அவர்கள், மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில், சற்றே மாறுதலாக, ராகம், தானம் முடிந்தபின், பல்லவிக்கு பதிலாக, வர்ணம் பாடி, வர்ணத்தின் வரிகளைக் கொண்டு நிரவல், திரிகாலம் மற்றும் ஸ்வரம் ஆகியவற்றைப் பாடினார். இதுபோல், அவ்வப்போது, பாரம்பரியத்திற்கு இழுக்கு வராமல், அதே சமயம், புதுமைகளையும் படைத்தவாறு வீறுநடை போடும் இசைக் கலைஞர்களைப் பார்க்கையில் வியப்பாகவும், இருக்கிறது!

1 பின்னூட்டம்

Filed under Ragam

One response to “இராகம் தானம் பல்லவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s