Monthly Archives: செப்ரெம்பர் 2008

தனித்தனி முக்கனி

ரணி உய்ய அருட்பெரும்ஜோதியின் தனிப்பெரும் கருணையில் செய்ததொரு இனிப்பொன்று இருக்கு!

அது, இப்போதுதான் இளஞ்சூட்டில், இதமாக செய்திருக்கு!

நாவில் வைத்ததும் நற்சுவையில் இளகிடுமாம்,

சுவைக்க வாரும், மெய்யன்பர்களே!

சுருதி சேர்த்து இசைக்க வாரும், இசையன்பர்களே!
சங்கீத கலாநிதி திரு.மதுரை மணி ஐயர் அவர்களின் குரலில்:

தனித்தனி முக்கனி

எண்சீர் ஆசிரிய விருத்தம்:

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே

தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனிதிடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே!

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே.

– இராமலிங்க வள்ளலார்

இப்படி யெல்லாம் எடுத்துச் சேர்த்துச் சேர்த்துச் செய்த இனிப்பைக் காட்டிலும் பன்மடங்கில் பெரிதாய் இனித்திடும் இனிப்பாய், பேரின்பப் பெரும்பேறாய் விளைந்திருக்கு, எங்கும் நிறைந்திருக்கு, எல்லாமுமாய் தெரிந்தும் தெரியாமல் மறைந்தும் நிறைந்திருக்கு. இப்பெரும் விந்தையை வள்ளல் வள்ளலாரைப்போல் உரை செய்தார் வெகு சிலரே. இவ்வுரையில் இவர் சொல்லும், தெள்ளமுதை, ஈசன் எனப்படும் பேரமுதை, அவனைப் பருகி இன்புற்று உரை செய்ததை, யாம் கேட்பதே என்ன இன்பம்! இதற்கனவே எம் யாக்கை இம்மை பெற்றதுவோ?

தெள்ளமுதே… தெள்….அமுதே… திகட்டா பேரமுதே…
சிற்சபையாம் பொற்சபையில் உலகம் உய்ய பொதுவில் நடம் ஆடும் பொன்னம்பலனே,
என் மயக்கம் அகல, உன் அடி மலரில் என் சொல்லாம், இக்கவியை அணியாய் அணிவித்தே அலங்காரம் செய்து பார்க்கின்றேனே, ஈதே பேரின்பம் தரும் இனிப்புக் கட்டி!

———————————————
இப்போ ஒரு கூடுதல் இனிப்புக் கட்டியும் கிட்டியிருக்கு!
நம்ம கே.ஆர்.எஸ் அவர்கள் பாட்டின் வரிகளுக்கு வரி வரியாய், விளக்கம் உரைத்திருக்கிறார், நன்றி கே.ஆர்.எஸ்.

தனித்தனி முக்கனி பிழிந்து
=அதாச்சும் முக்கனிச் சாறையும் பிழிந்து, உடனே ஒன்னாச் சேத்துறக் கூடாதாம்!

வடித்தொன்றாக் கூட்டிச்
=தனித்தனியாக வடிக்கணும்! வடித்த பின் தான் ஒன்னாச் சேக்கணும்!

மாம்பழத்தில் நார் மிதக்கும், பலாவில் பிசின், இதோடு வாழையை எப்படிக் கலப்பது? நார் ஒட்டிக்கிட்டா உண்ணும் போது நல்லா இருக்காது! உறுத்தும்! அதனால் தனித்தனியா வடித்து, வடிகட்டி, பின்னர் மூனுத்தையும் கூட்டணும்! அதே போல முக்குணங்களையும் தனித்தனியா வடித்துத் தான் இறையருள் கூட்டணும்! ராஜசத்தோடு சத்வம் சேர்த்தால் போரில் வெல்ல முடியாது! அதான் தனித்தனி வடித்தல்!

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
=நாட்டுச் சர்க்கரை, வெல்லம் காய்ச்சும் போது எடுப்பது! கற்கண்டு பொடி = தூள் சர்க்கரை

தனித்த நறுந் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின்
=தனித்த தேன்=கொம்பத் தேன்=இது இனிப்பு மட்டுமல்ல! ருசியின்மை நீக்கும் மருந்தும் கூட, அதோடு கறந்த பசும்பால், தேங்காய்ப்பால்…

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
=தேங்காய்ப் பால்-ன்ன உடனே அம்மா ஞாபகம் வந்திருச்சி! அம்மா சுடும் அப்பம்/தேங்காய்ப் பால்
பருப்பிடி=இடித்த பாசிப்பருப்பு

இனித்தநறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
=இவை எல்லாம் சேர்த்துக் காய்ச்சி, நெய் அளையணும்! சொல்லைக் கவனிங்க! அளையணும்! ஊத்தக் கூடாது!
தீய விடாமல் இளஞ்சூட்டில் இறக்கினால் தான் ஆறின பின் கெட்டிப்படும்! (மைசூர்பா புகழ் ஷைலஜா அக்கா கிட்ட எதுக்கு இளஞ்சூடு-ன்னு மேல் விளக்கம் கேளுங்க!)

எடுத்த சுவைக் கட்டியினும்
இனிதிடும் தெள் ளமுதே
= இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்ச இனிப்பை, கொஞ்சம் பிசகினாலும் சுவை மாறி, கடினப்பட்டுப் போகும் இனிப்பை..போல் இல்லாமல்

எளியோர்க்கு எளியனாய், அடைய எளியனாய், செய்ய எளிதாய் இருக்கிறான்! இருந்தாலும் அதை விட இனிப்பாயும் இருக்கிறான் இறைவன்!

அனித்தம் அறத் திருப் பொதுவில் விளங்கு நடத் தரசே!
=என் நிலையில்லாப் பிறவிச் சுழலை அறுப்பதற்கு என்றே பொதுவில் நடமிடும் அம்பலவாணப் பெருமான்!

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே
=அவன் ஆடும் குஞ்சிதபாதத்துக்கு, திருவடி மலருக்கே, மலர் சூட்டுகிறேன்! சொல்லால் புனைந்த அலங்கல் மாலையை அணிந்து, அநித்யமான பிறவி நீக்கி அருளே!

அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை!
திருச்சிற்றம்பலம்!
ஹரி ஓம்!

——————————-

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, வள்ளலார்

தஞ்சம் – நெஞ்சம் – வஞ்சம் – வன்மம்

மிழ் தியாகராஜர் எனப்போற்றப்படும் திரு. பாபநாசம் சிவன் அவர்களின் ஆபோகி இராக வர்ணம் தனை இங்கே பார்க்கப்போகிறோம்.

வர்ணம் : இதனை கச்சேரியின் துவக்கத்தில் பாடுவது வழக்கம். வர்ணத்தில் பல்லவி, அனுபல்லவியினைத் தொடர்ந்து முக்தாயி ஸ்வரங்கள் இருக்கும். அதைத் தொடர்ந்து சரணம் இரண்டு அல்லது மூன்று கால அளவில் வாசிக்கப்படும். இவற்றுடன் சிட்டாயி ஸ்வரங்களும் இருக்கும். சரணத்தில் ஒரே ஒரு வரி தான் இருக்கும். அதனையே வெவ்வேறு கால அளவிலும் வாசிக்க வேண்டும். இசைக் கலைஞருக்கு, அது நல்லதொரு பயிற்சியினைத் தருவதற்காக வர்ணத்துடன் கச்சேரியினைத் துவங்குவதை வழக்கமாக கொண்டார்கள் போலும்.

இந்தப் பாடலில் வரிகளின் வர்ணங்களும் மிகப் பொலிவு. நீங்களே பாருங்களேன், வார்த்தைகள் வர்ண ஜாலங்கள் புரிகின்றன:

இராகம்: ஆபோகி
தாளம் : ஆதி

பல்லவி
தஞ்சம் என்றாலே
நெஞ்சம் அருள் சுரந்தே வலிய
தண்முகில் போல வந்து
அஞ்சேல் என்று உவந்தருளும் அய்யா,

அனுபல்லவி
வஞ்சம் கொண்டோர்போல
வன்மம் கொண்டே
மிகமனம் வருந்தும் என்மேல்
அருள் சிறிதும் இன்றி
மறந்த விந்தை என்னென்பேன் அய்யா?

முக்தாயி ஸ்வரம்

தா ஸ் ஸ் த ம கா ம
க ம க ரீ க ம க ரீ ஸ் ரீ த ஸ் ரீ
……

(தஞ்சம்…)

சரணம்

உயர் மாதவர்பணி கபாலி,
ஆள மனமும் உண்டோ
இலையோ சொல்?

(தஞ்சம்…)

திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கே கேட்கலாம்.

90 களில் இறுதியில் நான் பணியில் சேர்ந்தபின் மும்பையில் ஆடியோ கேசட் கடைக்கு தேடிப்போய் வாங்கிக் கேட்ட ஒலித்தொகுப்பான ‘குறிஞ்சி’ யில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்று இது. இந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்த அத்தனை பாடல்களும் அற்புதமான நித்தலங்கள். நித்யஸ்ரீ அவர்களின் குரலோ கேட்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் இனிமை நிறைந்தது. இதற்குப்பின் எத்தனையோ பாடல்களைக் கேட்டிருந்தாலும், அப்போது முதன் முதலில் கேட்டதின் நினைவுகள் என்றும் பசுமையாய் நிறைந்துள்ளது!. அதை மீண்டும் நினைவு படுத்துகையிலும் இனிமை!. இந்நாள் வரை இனித்திடும் இசை ரசனைக்கு இப்பாடல் தொகுப்பு ஒர் அடித்தளமாய் அமைந்தது என்பேன்!.

தொடர்புடைய முந்தைய இடுகை : ஆபோகியில் அகமுருகி

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆபோகி ராகம், இசை, பாபநாசம் சிவன், Music