Monthly Archives: ஜூன் 2008

என்ன வரம் கேட்பேன் நானே?

இறைவனை பிரார்த்திப்பது நமது மனித இனத்திற்கே கிடைத்த பெரும் பேறு. அந்தப் பேறு கிட்டி இருப்பினும், அவனை என்ன கேட்பது? ஒரு வரம் கேட்பின், அவன் வேறெதையும் எதிர்பார்ப்போனோ? துன்பம் நேருங்கால் அதைத் துடைக்குமாறு கிடைக்கலாம். நல்ல பண்பு பெற்று நல்வாழ்வு வாழும்போது, நாதன் அருள் இருந்து, நற்செயல்களேயே செய்யும் போது, வேறெந்த துன்பமும் அண்டாதபோது வேறென்ன கேட்கலாம்? நம் அருகில் இருப்பவர்கள் நலமுடன் வாழ வேண்டலாம். ஏன் இந்த உலகமே நலமாக வாழப் பிரார்த்தனை செய்யலாம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரிகளில்:

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

இங்கே ஒருவர் சபரி ஐயப்பனை என்ன வரம் கேட்கிறார் பாருங்கள்:

எடுப்பு

என்ன வரம் கேட்பேன் நானே

என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,

என்ன வரம் கேட்பேன் நானே?

புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,

நல்ல பண்பை நான் வேண்டவா,

இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!

என்ன வரம், வேறென்ன கேட்பேன் நானே,

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே…!

தொடுப்பு

வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகணும்

சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியணும்

கடலுக்குள் நான் பிறந்தால் முத்துக்கள் சேர்க்கணும்

முத்துக்கள் கோர்த்து வந்து ஐயனுக்கு சூட்டணும்,

மனிதனாகப் பிறந்து விட்டேன், எப்படி நான் வாழணும்?

இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கணும்.

மதங்கள் எனும் மலைகள், ஆதி எனும் தடைகள் கடந்திட

ஐயன் உன் அருளினை நான் பெறணும்.

(என்ன வரம், வேறென்ன வரம் …)

முடிப்பு
பறவையாக நான் பிறந்தால், கருடனாக ஆகணும்

திருவாபரணப்பெட்டி மேலே காவலுக்குப் போகணும்

மலராக நான் பிறந்தால், கமலமாகப் பூக்கணும்

ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டணும்

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடணும்

பேரசை என்றபோதும் ஐயன் இதை நிறைவேற்றணும்:

மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்

தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணமே!

(என்ன வரம், வேறென்ன வரம் …)

என்ன வரம் கேட்பேன் நானே?

சாமியே சரணம் ஐயப்பா!

இன்னொரு விஷயம்:
சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒக்கேனக்கல் பிரச்சனை சூடாகி, விஷமிகளின் வன்மச் செயலால் நம் மனம் புண்பட்டபோது, ஜேசுதாஸ் அவர்களுக்கு பங்களூர் ராம் சேவா மண்டலியில் கச்சேரி. கச்சேரியில் கன்னடர்களுக்கு மிகவும் விருப்பமான கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலைப் பாடி முடித்த கையோடு, அவர்களுக்கு நல்லதொரு அறிவுரையும் வழங்கினாரே பார்க்கலாம்! நீங்களே கேளுங்கள்:

ஜேசுதாஸ்-அறிவுரை
Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை

தில்லானா

நமது இந்திய இசையில் பல்வேறு பரிணாமங்களைப் பார்க்கலாம். நடனஇசை, அந்த பல்வேறு பரிணாமங்களுள் ஒன்றாகும். ஒன்றுதானே என்று ஓரமிடாமல், ஓங்கி வளர்ந்த நடனஇசை. நமது பாரம்பரிய மணம் கமழும் அற்புதக் கலையான பரத நாட்டியத்தின் பக்கபலமான இசையும் அதன் மாண்புகளும் தான் என்னே! பல்வேறு “அடவு”களை கைகளில் காட்டி, இசையின் வளைவுகளுக்கு ஏற்ப உடலை வளைத்து, அனைத்து ரசங்களையும் முகத்தில், குறிப்பாக கண்களில் காட்டி, அபிநயம் செய்யும் பரதக் கலைஞரின் பெருமைகள்தான் என்னே!

பத்மினி / சிவ பக்தா / 1954

பாடல்களுக்கு ராகமும் தாளமும் இரு பரிணாமம் என்றால், இன்னொன்றும் இருக்கிறது. அதுவே பாவம் (Bhavam). நமது பாடல்களை பாவபூர்வமாக பார்ப்பதும் சிறப்பானதாகும். மதுரை T.N சேஷகோபாலன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் பாவபூர்வமாக பாடிக்கேட்டுத் திளைத்ததுண்டு. தில்லானா பாடல்கள் இந்த வகையைச் சார்ந்தவை. விறுவிறுப்பும், உணர்ச்சி மயமும் நிறைந்த தில்லானா பாடல்களின் என்ன விசேஷம் என்றால், பாடலில் பாடல் வரிகள் குறைவாக இருக்கும். ஆனால், ஜதி எனப்படும் சொற்கட்டுக்கள் நிறைந்து இருக்கும். அவற்றில் சில : திரனா, தில்லில்லானா, தொந்திரனா, தனம் போன்றவை. பாடல் வரிகளுடன் சேர்ந்த தில்லானாக்களை, கச்சேரிகளிலும் தனியான பாடல் உருப்படியாகவே பாடும் வழக்கமும் உள்ளது. அப்படிப்பட்டவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

பாம்பே ஜெயஸ்ரீ பாடிடும் இந்த தில்லானாவில் பாடல் வரிகள் இவ்வளவுதான்:

நின்னையே எண்ணி நிதம் ஏங்கிடும்

என்னை ஆளவந்த மன்னா, மணிவண்ணா

மனம் கொள்ளை கொண்ட கண்ணா – இனியுன்னை

கனவிலும் நனவிலும் நான் பிரியேனே!

என்ன ராகம்? மதுவந்தி
யார் இசையமைத்தது? வேற யாரு, தில்லானா என்றவுடன் நினைவுக்கு வரும் நம்ம லால்குடி சார் தான்.
தமிழகம் தந்த தன்னிகரில்லாத இசை மேதை அல்லவா பத்மஸ்ரீ திரு.லால்குடி ஜெயராமன்!
நிறைய தில்லானாக்களை அவர் இசையமைத்திருக்கிறார். பட்டியலுக்கு விக்கிபீடியாவில் இங்கு பார்க்கலாம்.

இதே தில்லானாவை சிதாரில் வாசித்துக் கேட்கலாமா? இங்கே.

இங்கே கேளுங்கள் லால்குடி சாரின் இன்னொரு தில்லானா – ரேவதி ராகத்தில்:
திருமதி.விசாகா ஹரி பாடிட:

கோலமுருகனை காண எண்ணி

காலமெல்லாம் காத்திருந்தேன்

வேலனோ என்னை ஏனோ மறந்தான்

ஜாலமோ, என் காலமோ அறியேன்!

லால்குடி சார், தில்லானாக்களைக் கொண்ட இசைத்தொகுப்புகளையும் இசையமைத்து வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று “The Dance of Sound” (1980 இல்) என்கிற தலைப்பில். அந்த தொகுப்பில் தேஷ், த்வஜாவந்தி, ஹமீர் கல்யாணி, கானடா, காபி, கதன குதூகலம், மோகனகல்யாணி, பகடி ஆகிய ராகங்களில் அமைந்த தில்லானாக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கான சுட்டிகள்:

1. மோகனகல்யாணி (ஆரோகணத்தில் மோகனமும், அவரோகணத்தில் கல்யாணியும் அமையப்பெற்ற ராகம்!)
2. த்வஜாவந்தி
3. ஹமீர் கல்யாணி
4. தேஷ்
5. கதனகுதூகலம்
6. கானடா
7. காபி
8. பகடி

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை

கண்ணனுக்கு தமிழிசைத் தாலாட்டு

விருத்தம் பாடி பின்னர் தொடர்ந்து கிருதியினைப் பாடுவது நமது இசையில் ஒரு மரபு.
அதன்படி இங்கொரு விருத்தமும், பாடலும் பார்ப்போமா?
விருத்தம் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க, தொடர்ந்து வரும் உருப்படியோ இன்னொருவரால் இயற்றப்பட்டிருக்கும். இரண்டுக்கும் இடையே பாடகரால் நெய்யப்படும் தொடர்புதான் இருக்கிறதே, அது இயற்கையானது போலவே அமைந்திருப்பின், அது கேட்பவரை வியப்பின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும்!

அப்படிப்பட்ட ஒரு பாடலை இங்கு திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிடக் கேட்கலாம். முதலில் பாடும் விருத்தமானது, திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்டது. இந்த செய்யுள் உட்பட, பாணரின் பத்து செய்யுள்கள் நாலயிர திவ்ய பிரபந்தத்தினில் அடங்கும். “கொண்டல் வண்ணனை, கோவலனை, வெண்ணை உண்ட வாயனை” என கண்ணனை விளித்த பெருந்தகையாளார் இவர்.

கண்ணன் வெண்ணை உண்பான் சரி, ஆனால், அவன் ஏழு உலகங்களையும் உண்டது எப்போது?
ஆகா, பரம்பொருளாய் எங்கெங்கும் நிறைந்திருப்பதைத் தான் அன்று கண்டாளோ அன்னை யசோதை.
எழில் நிறை நீல மேனியனின் வடிவழகு எல்லையில்லாமல் எங்கும் நிறைந்து பரம்பொருளாக நிரவி இருக்கிறது.
இப்போது இந்த ஆலமரத்திலை பாலகன் அழகில் லயித்திட, என் நெஞ்சமெல்லாம் அவன் நீலமேனி அழகும் நிறைந்திட,
ஐயோ, அண்ட சாரசரங்களெல்லாம் அதே கருநீல நிறத்தினில் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திடுதே!,
அம்மம்மா, விண்மீன்களெல்லாம் என்னுள்ளே மின்னிடுதே. இந்த விந்தையை என்னென்று சொல்ல!

விருத்தம்:

இயற்றியவர் : திருப்பாணாழ்வார்

ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும்
எழில் நீல மேனி…முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ…
எழில் நீல மேனி அம்மா…
நிறை கொண்டதென்
நெஞ்சினையே…நெஞ்சினையே… நெஞ்சினையே…
கண்ணா…கண்ணா…
தாலேலோ…
தா லே லோ…
தாலேலோ…

இப்படி ஒரு உணர்ச்சி வெள்ளத்தில் நிறைத்திட்ட இந்த பாலகனை, தாலேலோ என தாலாட்டுப் பாடி தூங்கச் செய்யும் பேறினையும் பெறாதா நெஞ்சென்ன நெஞ்சே?

கண்ணே என் கண்மணியே!

(ஒலிப்பதிவில், ஒலி அளவு குறைவாக உள்ளது, கணிணியில் ஒலியினைக் அதிகரித்துக் கேட்கவும்)

இப்போது தொடரும் கிருதி விருத்தத்தோடு, எப்படி அருமையாக இணைகிறது பாருங்கள்!. தமிழ்த் தியாகராஜர் என தமிழ் இசை ரசிகர்களால் போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. குறிஞ்சி ராகம் என்ன அழகாய் பொருந்துகிறது, தாலாட்டுப் பாடல்களுக்கு!

பாடல்:

ராகம்: குறிஞ்சி
தாளம்: திச்ரஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய்
மண்ணுலகில் என் வாழ்வு வளம் பெற வந்துதித்த (கண்ணே)

தொடுப்பு
குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக் கிணையாமோ
கொண்ட மன சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே
தாலோ தாலேலோ….

முடிப்பு
தேடாத என் நிதியே திகட்டாத் தெள்ளமுதே
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே
தாலோ தாலேலோ….

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, குறிஞ்சி

நீலகண்ட சிவன் : தேறுவதெப்போ நெஞ்சே?

தமிழிசை தழைத்திட தமிழ்ப்பாடல்களை இயற்றித் தொண்டு செய்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் திரு.நீலகண்ட சிவன் (1839-1900). 2000 க்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார் இவர். தமிழ் மூவர் இயற்றிய பாடல்களை படித்து வளர்ந்த கன்னியாகுமரிக்காரரான இவர், சிவ-பார்வதி தரிசனம் கிடைக்கப் பேறு பெற்றவர். இவருடைய மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாபநாசம் சிவன் அவர்கள்!

நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய “தேறுவதெப்போ நெஞ்சே…” பாடலை இங்கு பார்க்கலாம். நீந்திக் கரை ஏற இயலாத பெருங்கடலென பிறவியினைச் சொல்வார்கள் பெரியோர்கள். பிறந்த முதலே, புலன்கள் சொல்லித்தரும் ஈர்ப்புகளில் நம்மை இழந்து விடுகிறோம். இந்த உலகில் சேர்க்கும் செல்வத்தோடும், சொந்த பந்தங்களுடனும், இன்ன பிற விருப்பங்களுடனும் இருக்கமானதொரு இணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த இணைப்பில் தவறேதும் இல்லை. ஆனால் அவையெல்லாம் நிலையில்லாதவை என்பதினை நாம் நமது சுயலாபத்திற்காக எளிதாக மறந்து விடுகிறோம். நிலையில்லா உலகில் நிலைப்பதெப்போ? நீந்திக் கரை ஏறுவதெப்போ? எல்லா இணைப்புகளையும் அறிந்திடும் அதே புத்தியில் ஒரு ஓரத்திலாவது, நிலையான நீலகண்டனின் நினைப்பிருந்தாலே போதுமே. அகந்தை அழிந்திட, சித்தினை அறிந்திடும் புத்தியினை நெஞ்சில் வார்க்கும் அவன் கருணையைத் தேடிட, கடைத்தேறாதோ பிறவி?
வேதம் நான்கும் சொல்லிடும் நாதன் நாமமே மெய்ப்பொருளாக இருக்கையில், வேறேன்ன வேண்டும்?

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது

வேதநான் கினும் மெய்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயமே.

(மூன்றாம் திருமுறை – திருஞான சம்பந்தர் தேவாரம்).

இப்போது திரு.நீலகண்ட சிவனின் பாடலைப் பார்ப்போம்:
——————————————————————————————
இராகம் : கமாஸ்
தாளம் : ஆதி

எடுப்பு
தேறுவதெப்போ நெஞ்சே தெளிந்து கரை
ஏறுவதெப்போ நெஞ்சே

தொடுப்பு
கூறும் வேதத்தின் உண்மை குறியாமலே அஞ்ஞான
காரிருளில் கவிழ்ந்து கலங்கி மயங்கி நின்றால்
(தேறுவதெப்போ நெஞ்சே…)

முடிப்பு
மண்ணே பொருளே யெந்தன் மனைவி மக்களேசொந்த
கண்ணே நீங்களே அல்லால் கதியில்லை என்றிருந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே…)

உடலை நிலையென் றெண்ணி உலகவாழ்விதை நம்பி
மடமை பெருக நின்று வனமிருகம் போல் அலைந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே…)

அண்டம் அளந்த மாலும்அயனும் அளவா நீல
கண்டம் கருணைதேடும் கருத்துணராராகில் ஜன்மம்
(தேறுவதெப்போ நெஞ்சே…)

சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட, இந்தப் பாடலை கேட்கலாம்:

தேறுவதெப்போ நேஞ்சே?

——————————————————————-
நீலகண்ட சிவன் இயற்றிய பாடல்களில் இதர புகழ் பெற்ற பாடல்கள்:
சம்போ மகாதேவா,
உமைக்குரிய திருமைந்தா,
ஆனந்த நடம் ஆடுவார் தில்லை

2 பின்னூட்டங்கள்

Filed under இசை, காமாஸ்

அபங்கம் : சந்த் துக்காராம்


பக்திமான் சந்த் துக்காராமின் இந்த அபங்கம், வஞ்சகப் புகழ்ச்சியில் கண்ணனைப் பாடுகிறது.

விட்டல் உறையும் பண்டரிபுரம் போக வேண்டாம், போக வேண்டாம் என்று சொல்வார்கள்.

ஆம், அங்கே செல்ல வேண்டாம், தயவு செய்து செல்ல வேண்டாம்.

அங்கே பெரியதொரு பூதம் இருக்கிறது.

பண்டரிபுரம் சென்றவர்கள் திரும்பியதே இல்லை. அந்த பூதம் அவர்களை அப்படியே சாப்பிட்டு விடுகிறதாம்!.

துக்காராம், இதையெல்லாம் கேட்பவரா என்ன, அவரது கிருஷ்ண ப்ரேமைதான் அளவிடற்கரியதே!

துக்காராம், துணிந்து பண்டரிபுரம் சென்றார்.

எல்லோரும் பயந்தது போலவே, துக்காராமும் திரும்பவில்லை.

ஆனால், என்ன, துக்காராம் இந்த நிலையில்லா உலகுக்கு திரும்பிடவில்லை.

பாண்டுரங்கன் பதமெனும் உயர்நிலையை அடைந்தபின்,

இந்த உலகும் ஒரு பொருட்டோ?

—————————————————–

பாடல் : பண்டரிசே பூத மோடே
மொழி : மராத்தி
ராகம் : சந்ரகௌன்ஸ்
பாடுபவர் : ரஞ்சனி, காயத்ரி

பண்டரி சே பூத மோடே

ஆல்யா கேல்யா தடபி வாடே

பஹூ கேதலிச ராணா

பகஹே வேடே ஹோய மானா

தீதே சவுனகா கோணி

கேலே நஹி ஆலே பரதோணி

துக்கா பண்டரி சே கேலா

புண்ஹ ஜன்ம நஹி ஆலா

—————————-
தொடர்புடைய சுட்டிகள்:
துக்காரம்.காம்
ரஞ்சனி-காயத்ரி.காம்
விட்டல விட்டல: தி.ரா.ச அவர்களின் பதிவு

2 பின்னூட்டங்கள்

Filed under அபங்கம், இசை