Monthly Archives: ஓகஸ்ட் 2008

அம்புஜம் கிருஷ்ணா : குருவாயூரப்பனே அப்பன்

மக்கு மிக சமீப காலத்தில் நல்ல தமிழிசைப் பாடல்களை வழங்கிய பெருமை பெற்றவர் திருமதி. அம்புஜம் கிருஷ்ணா (1917 -1989) அவர்களாவர். அவரது பாடல் ஒன்றை இங்கே கேட்கப்போகிறோம். அதற்கு முன்னால் அவரைப்பற்றி சில வரிகள் வாசிப்போமா?

1951 இல் இவர் திருவையாறு வந்து சென்றபின் ஏற்பட்ட மாற்றத்தின் பின் பாடல்கள் பலவற்றை இயற்றினார் எனச் சொல்லப்படுகிறது. இவரது முதல் பாடலான ‘உன்னை அல்லால் உற்ற துணை வேறுண்டோ…’, தேவி மீனாட்சி அம்மனைப் பாடுகிறது. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இயற்கையாக பாடல்களை இயற்றி இருக்கிறார். இவர் அறுநூறுக்கும் மேலான பாடல்களையும் இயற்றி இருந்தாலும், அவற்றுக்கான உரிமையைக் கொண்டாடாத எளியவர். பாடல்களுக்கான இராகங்களை அமைத்தாலும், அவை தன் சிறிய இசை ஞானத்தால் அமைக்கப்பட்டவை எனச்சொல்லி, அவற்றை வாசிக்கும் இசை கலைஞரின் விருப்பதிற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம் எனச் சொன்னவர். கண்ணன் பாடல்களை பெரிதும் இயற்றிய இவர் கணவரின் பெயரும் ‘கிருஷ்ணா’ என அமைந்தது என்ன பொருத்தம்!.

இவர் இயற்றிய பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவை:
மனநிலை அறியேனடி மனங்கவர் – பாக்யஸ்ரீ
ஓடோடி வந்தேன் கண்ணா – தர்மவதி
என்ன சொல்லி அழைத்தால் – கானடா
பொழுது மிகவாச்சுதே – ரேவதி
காண்பதெப்போது – பிலஹரி
குருவாயூரப்பனே அப்பன் – ரீதிகௌளை

இந்த இடுகையில் ‘குருவாயூரப்பனே அப்பன்’ பாடலை திரு.உன்னி கிருஷ்ணன் பாடிடக் கேட்கலாம்: (ரீதிகௌளையில் அருமையான ஆலாபனை முடிந்தபின் பாடலைக் கேட்கலாம்)
(இப்பாடல் சென்ற வருடம் அகஸ்டா,ஜார்ஜியாவில் நடைபெற்றக் கச்சேரியல் பாடியது: நன்றி திரு.மஞ்சுநாத்)

குருவாயூரப்பனே அப்பன்


எடுப்பு
குருவாயூரப்பனே அப்பன்
ஸ்ரீ கிருஷ்ணன்
குருவாயூரப்பனே அப்பன்

தொடுப்பு
நாராயணா என நாவாற அழைப்போர்க்கு
வருமிடர் தவிர்த்து வாஞ்சையுடன் காக்கும்
(குருவாயூரப்பனே அப்பன்)

முடிப்பு
விழிகட்கு அமுதூட்டும் எழில் திருமேனி
தழுவக் கரம் துடிக்கும் பாலத் திருவுருவம்
முழுமதி முகம் திகழ் அருள்விழிச் சுடர்கள்
அழைக்கும் அன்பர்க்கு அருளும் அடிமலர் இணையும்

முன்னம் யசோதை மைந்தனாய் வந்தவன்
இன்று நமக்கிரங்கி இங்கு(/எங்கும்) எழுந்தருளி
பாலனாய் யுவனாய்ப் பாலிக்கும் தெய்வமாய்
பரவச நிலைகாட்டும் பரம புருஷன்

(குருவாயூரப்பனே அப்பன்)

* திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.
* திருமதி. சௌம்யா பாடிட இங்கு கேட்கலாம்.
* இந்த பாடலுக்கான ஸ்வரக் குறிப்புகளை இந்த PDF மென் இதழில் பார்க்கலாம் – நன்றி திரு. சிவ்குமார்
* அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இயற்றிய பாடல்களின் பட்டியல் இங்கே. – நன்றி திரு. லக்ஷ்மணன்
* அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் நிழற்படம் – நன்றி தி ஹிந்து நாளிதழ் தளம்

Advertisements

1 பின்னூட்டம்

Filed under இசை, ரீதிகௌளை

தமிழிசை : நால்வரில் இருவர்

ந்த இடுகையில் தமிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் மூவரில் ஒருவர், மாரிமுத்தாப்பிள்ளை அவர்களின் பாடலில் ஒன்று பார்க்கவிருக்கிறோம். ‘தமிழ் மூவர்’ என்றும் ‘தமிழிசை மும்மூர்த்திகள்’ என்றும் வழங்கப்படுவோர் :
முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் – ஆகியோராவர். இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து ‘தமிழிசை நால்வர்’ எனவும் வழங்குவதுண்டு.

முத்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் ‘பல்லவி – அனுபல்லவி – சரணம்’, என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே ‘கிருதி’ முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான ‘சீர்காழி’ யில் வாழ்ந்தவர் இவர்.

முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் – ஆந்தோளிகா
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை – மாயாமாளவகௌளை
ஈசனே கோடி சூரிய பிராகசனே – நளினகாந்தி

மாரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் ‘புலியூர் வெண்பா’ ஆகும்.

இவர் இயற்றிய பாடல்களில் சில:
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – யதுகுல காம்போஜி
தரிசித்தளவில் – லதாங்கி
இன்னமும் ஒரு தலம் இருக்கும் – சுருட்டி

இந்த இடுகையில் நாம் கேட்கப்போகும் ‘இன்னமும் ஒரு தலம்’ பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.

விருத்தம்:
கற்பூரமும்….

உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே…!

அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ…?

எடுப்பு:
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,

ஏன் மலைக்கிறாய் மனமே?


தொடுப்பு:

சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்

(இன்னமும் ஒரு தலம்…)

முடிப்பு:
விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்

வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது

தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்

ஒருதாமரைக்கு ஒவ்வாது

மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி

மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது

புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்

புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
(இன்னமும் ஒரு தலம்…)

இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:

அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது! Hats off Sanjay!
*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!

உசாத்துணை:
* திரு. வி. சுப்ரமணியம் – சுருதி இதழ்
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் – சென்னை ஆன்லைன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை