Monthly Archives: ஜூலை 2010

மார்கழி : அரங்கர் வரார் பராக் பராக்!

பராக்! பராக்! என்கிற கூக்குரலைக் கேட்டு மக்கள் அனைவரும் அக்குரல் வந்த திசையினில் திரும்பிப் பார்க்கின்றனர்! கட்டியங்காரர்களின் குரல் வந்த திசையில் பார்த்தால், ஆகா, அங்கே, அழகானதொரு பரிமேல் என்ன கம்பீரத்தோடு அமர்ந்திருக்கிறார் அழகர் அரங்க நாதர்! தகிக்கும் தங்கக் குதிரையில், தனக்கே உரிய தோரணையோடு அல்லவா வீற்றிருக்கிறார்! வீதிஉலா இதமாய் இருக்க, காவிரிக் காற்று, அவருக்கு சாமரமாய் வீசுகிறது போலும்!

நாதஸ்வரம் முதலான மங்கள வாத்தியங்கள் முழங்க, அரங்கநாதர் அசைந்தாடி வரும் இந்த அழகான திருவீதி உலாக் காட்சியை, தெற்கு சித்திரை வீதியில் இருந்து, மகான் ஒருவர் கண்டு தரிசித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறாருமில்லை, சாட்சாத் தியாகராஜரே. அரங்கனின் திருபவனி வீதி வழி வர, ஒவ்வொரு வீட்டிலும் நின்று உபசாரங்களைப் பெற்றுக்கொண்டும், கற்பூர ஆரத்தியினை வழங்கிக்கொண்டும், நடந்தேறிக் கொண்டிருந்தது அவ்வுலா.

தீவட்டிகளின் ஒளியில், தியாகராஜர், தான் காணும் கண்கொளாக் காட்சியை, தித்திக்கும் இறையனுபவத்தினை, அழகான தோடி இராகக் கீர்த்தனையாய் வடிக்கிறார். அப்பாடலினின் பல்லவி ‘ராஜு வெடலெ ஜூதாமு ராரே கஸ்தூரி ரங்க’ என்பதாகும். பாடலின் சாகித்ய வரிகளுக்கு இங்கே அணுகவும்.

இப்போ, இந்தப் பாடலை தமிழில் மொழி பெயர்த்துப் பார்க்கலாமா!

பல்லவி:
கஸ்தூரி ரங்கனின் களையான பவனியைக் கண்டு களிப்போமே!

அனுபல்லவி:
திகழும் நவரத்தினங்கள் மின்ன,
திருவரங்க நாதன் பவனி கண்நிறைய,
பரிமேல் அமர்ந்த சுகந்தனை
பாருலக வேந்தரும் சேவிக்க,
(கஸ்தூரி ரங்கனின்..)

சரணம்:
காவிரிக் கரையில் புண்ணியபுரி திருவரங்கமதில்
சீரார்ந்த சித்திரை வீதிதனில் அலங்காரங்களுடன்
அரங்கனின் பவனி அற்புதக் காட்சியன்றோ!
விண்ணுலகத் தேவரும் மலர்த்தூவி வழிபட,
தியாகராஜனும் பாடிப்பரவசம் கொள்ள
(கஸ்தூரி ரங்கனின்…)

கன்னியர்கள் பலரும், தங்களை ஆண்டாளாக பாவித்துக் கொண்டு, அரங்கனை சூழ்ந்து நிற்கிறார்கள். கன்னியர்கள் மட்டுமா, இதர பெண்டிரும், அரங்கனை தங்கள் வீட்டுப்பையனாகவே தரித்துக் கொண்டு, அவனது வீதிஉலாவினை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் தொலைவில் இருந்து மட்டுமே தியாகராஜரால் காண முடிகிறது. கூட்டத்தைத் தாண்டி, அருகில் சென்று சடாரியினையும், துளசி பிரசாதத்தினையும் பெற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை. வருத்தத்துடன், அந்த இடத்திலேயெ நின்றுகொண்டு இருக்க, திடீரென வீதிஉலாவும் நின்று விடுகிறது. வாகனத்தை தூக்குபவர்களாலோ ஒரு அடிகூட மேலும் எடுத்து வைக்க இயலவில்லை. திசைதோஷம் ஏதும் உள்ளதோ என்றெண்ணி, அர்சகர்கள் கோயில் தேவதாசிகளை அழைத்து ஆகம சாஸ்திரங்களில் உள்ளபடி அந்த திசைக்கான நடனத்தினை ஆடச் சொல்கிறார்கள். அதனால் ஒரு மாற்றமும் இல்லை. திடீரென, அர்ச்சகர் ஒருவருக்கு ஆவேசம் ஏற்பட, அவர் தியாகராஜர் இருந்த இடத்தைக் காட்டி, ஸ்ரீரங்கநாதரின் சிறந்த பக்தன் ஒருவன், அருகில் வர இயலாமல் தவிப்பதை எடுத்தியம்ப, மற்றவர்கள் அவரை அருகில் அழைத்து வந்து, அவருக்கு பிரசாதங்களை வழங்கிட, பின்னரே திருபவனி தொடர்ந்ததாம். இச்சம்பவத்தினை ‘வினராதா நா மனவி…’ என்கிற தேவகாந்தாரி இராகப் பாடலில் தியாகராஜர் குறிப்பிடுவதைக் காணலம். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

இவ்வாறாக, அரங்கநாதன், தன்னை தரிசிக்க திருவையாற்றில் இருந்து தியாகராஜர் வந்திருக்கின்றார் என்பதனை அந்த ராஜவீதியில் குழுமியிருந்த அனைவருக்கும் அறிவித்ததாகக் கொள்ளலாம். அன்று மாலை, சிறப்பு முத்தாங்கி சேவையில் கலந்துகொள்ள, கோயில் அதிகாரிகள், தியாகராஜரை அழைத்துவர, அங்கே தியாகராஜர், சந்நிதியில் பாடிய பாடல், காம்போதி இராகக் கிருதி ‘ஓ ரங்கசாயி..’, மிகவும் பிரபலமான பாடல். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

ஓ ரங்கசாயி பாடலை, எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிட, ராகா.காமில் கேட்டிட சுட்டி இங்கே. சபாஷ் சொல்லவைக்கும் சங்கதிகளில் காம்போதியின் அழகை இன்னும் இனிமையாக யாரேனும் தரக்கூடுமோ? ஓ என்ற ஒற்றைச் சொல்தான் எத்தனை விதமான ஸ்வரங்களில் வலம் வருகிறது!


இந்த பாடலை, தமிழிலும் பார்க்கலாமா?

பல்லவி:
ஓ ரங்க விமான சயனா – நான் அழைத்தால்
ஓ என நீயும் வாராயோ?

அனுபல்லவி:

சாரங்கம் தரித்தவனும் உனைக்கண்டு
கைலாயபதி ஆனானோ,
(ஓ ரங்க விமான சயனா…)

சரணம்:
பூலோக வைகுண்டமே திருவரங்கமென
பெருமிதமும் நீயே கொண்டு, ஸ்ரீதேவியுடன்
குலவிக்கொண்டிருந்தால், எம்
குறைகளைக் களைவது எப்போது?

மற்றவர் உயர்வை பொறுக்கா
மானிடரிடை துயர்பல பெற்றநான்
நின்திருஉருவினையும் முத்துமார்பினையும்
காண வந்தேனே, தியாகராஜனின்
இதயமெங்கும் அலங்கரித்தவனே,
(ஓ ரங்க விமான சயனா…)

பின்னர் மேலும் இரண்டு கிருதிகளையும் அவர் இயற்றிட, அவையானவை: சூதாமு ராரே எனும் ஆரபி இராகக் கிருதி மற்றும், கருண ஜூடவய்ய என்கிற சாரங்கா இராகப்பாடல். இந்த ஐந்து பாடல்களையும் சேர்த்து, “ஸ்ரீரங்க பஞ்சரத்தினம்” என்று வழங்குவர்.

இந்த ஸ்ரீரங்க பஞ்சரத்தின கீர்த்தனைகளை கேட்கையில், ஆதி சங்கரர் இயற்றிய ரங்கநாத அஷ்டகம் தனையும் நினைவு கூறாமல இருக்க இயலாது. பாடகர் பலரும் ரங்கநாத அஷ்டகத்தின் ஒரிரண்டு சுலோகங்களை விருத்தமாக பாடிப்பின், ஓ ரங்க சாயி பல்லவியினைத் துவங்குவார். தியகராஜரும் ‘ரங்க சாயி’ எனச்சொல்வது மட்டுமல்ல. ‘காவேரி தீரே, கருணா விலோலே…’ போன்ற அஷ்டக வரிகளையும் தியாகராஜரின் சாகித்யத்தோடு ஒப்பு நோக்கலாம்.

ரங்கநாத அஷ்டகத்தில் இருந்து சில சுலோகங்களை இங்கு விருத்தமாகப் பாடக் கேட்கலாம்:
(அருணா சாய்ராம் அவர்கள் பாடிட)

Advertisements

1 பின்னூட்டம்

Filed under இசை, தியாகராஜர்

கான ரசிகன் கந்தன்

இசை ரசனை எல்லோருக்கும் உண்டு.
உங்களுக்கும், எனக்கும், ஏன் என்னப்பன் குமரக்கடவுளுக்கும் கூடத்தான்!
குமாரசாமியின் இசை ரசனைக்கு, ‘ரசிகசிகாமணி’ என்றொடு பட்டம் கொடுத்த பாடல் ஒன்று உள்ளது. நாம் இங்கே பார்க்கவிருக்கும் அப்பாடல் கோடீஸ்வரஐயரால் இயற்றப்பட்டது. இவர் 72 மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களைப் புனைந்த பெருமை பெற்றவர். இவரைப் பற்றிய குறிப்புகளை முன்பொருமுறை பார்த்திருக்கிறோம் இங்கே. இப்பாடல், 62வது மேளகர்த்தா இராகமாகிய ரிஷபப்பிரியா இராகத்தில் அமைந்துள்ளது. இவரது மற்ற பாடல்களைப் போலவே, இந்த பாடலிலும் இராக முத்திரையினைக் காணலாம். மேலும் ‘கவி குஞ்சரதாசன்’ எனப்பாடல் இயற்றியவர் முத்திரையினையும் காணலாம்.

எடுப்பு
கன நய தேசிக கானரசிக சிகாமணி நீயே கந்தா
எனக்கருள் நீயே தினம்

தொடுப்பு
கனிநய சொல்பொருள் கனகம்பீரம்
இனிய சுருதியோடு இயை லய தீர

முடிப்பு
ஸட்ஜ ரிஷபப்பிரிய காந்தார மத்யம
பஞ்சம தைவத நிஷாத வித
சப்தஸ்வர சங்கீத கவி குஞ்சரதாசன்
அனவரதம் தரும் நின்னருள் மய
—————————–
* பாடலை M.L.வசந்தகுமாரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
* சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
—————————–
“கன, நய, தேசிக” என்பது மூன்று விதமான இராகப் பிரிவுகளைக் குறிப்பதாகும்.
இதுபோன்ற மூன்று விதமான இராகப் பிரிவுகளையும் ரசிக்கும் ரசிகசிகாமணியாம் கந்தன்! கலைமாமணி பட்டத்திற்கு ஏங்கும் கலைஞர்கள் ஒருபுறமிருக்க, கந்தன் மட்டும் இசை விரும்பும் ரசிகனாகவே இருக்கிறான்!!!:-)

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தினைச் சொல்லும் பாடலிது!

என்னவெல்லாம் இருக்கும்?:
சொல்
பொருள்
சுருதி

எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?
சொல்லிலும் பொருளிலும் – கனிநயம் நிறைந்திருக்க வேண்டும்.
அது கேட்போரை இழுக்கும் வகையில் கம்பீரமாக இருக்க வேண்டும்.
இனிமையான சுருதியினைக் கொண்டிருக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று இயல்பாக கலந்திருக்க வேண்டும்.

சப்த சுரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் மற்றும் நிஷாதம் – ஆகியவற்றின் சஞ்சாரங்களில் அமையப்பெற்ற இசையென்னும் இனிமை ததும்பும் சங்கமத்தில், குஞ்சரகவி’யின் தாசனாகிய அடியேன் ‘குஞ்சரதாசன்’, எப்பொழுதும் பாடிப்புகழுவது யாதெனில், குன்று தோறும் வளரும் குமரக் கடவுளின் குன்றா அருள்தனையேயாம்.

“கனிநயம்”:
சொல்லும் சொல்லதில் *கனி*யிருத்தி, காய் விலக்கிடுவீர் என்பார் வள்ளுவர்.
கனிவான சொற்புழக்கம் கனியான சொல்லினைத் தரும்.
அக்கனியோடு சேரும் நயம், பூவோடு சேரும் நார் போல. பூவினைத் தாங்கித் திகழச் செய்யும் மறைபொருள் போலே.
நயமெனில் யாது?
நன்மை பயக்கும் யாதும் நயமென இயம்பும் நாலடியார்.
கனிவான சொல்லினை புழங்கும் பாங்கினை கனிநயம் என்போம்.
கனிநயத்தில் அன்பும், அருளும் மிளிரட்டும். அது குமரனருளைப் பாடட்டும்.

————————————————–
இந்தப் பாடலைப் பார்க்கும்போது, தியாகராஜரின் ஆரபி இராக ‘நாதசுதாரசம்’ கிருதியும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாதது. அப்பாடலில் அவர் சொல்லுவதாவது:

வேத புராண ஆகம சாஸ்திரங்களுக்கு ஆதாரமான
நாதமே இராமன் என்ற பெயரில் மனித உருவானது.

“சுரங்கள் ஏழும் இராமனின் திருமேனியில் மணிகளாகவும்
இராகம் அவனது கோதண்டமாகவும்
கன, நய, தேசிகம் ஆகிய பிரிவுகள் நாணின் முப்பிரிகளாகவும், ரஜஸ், தமஸ், சத்வம் எனும் முக்குணங்களாகவும்,
கதிகள் அம்புகளாகவும் அமையப்பெற்றுள்ளது”
என்றெலாம் இசையின் அங்கங்களை, தனது மனம் விரும்பும் மகாபுருஷனிடம் கண்டு களிக்கிறார்.
—————

கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸபோனில் இப்பாடலிசை தவழ்வதை இந்த பாடல் தொகுதியில் இருந்துகேட்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, ரிஷபப்பிரியா