Monthly Archives: திசெம்பர் 2008

பாலமுரளி சார் பாட்டு!

இந்த இடுகையில் நாம பார்க்கப்போகிற பாடல், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களால் பாடப்பட்டு பிரபலமான பாடல். அவரது சொந்த சாகித்யம் எனச் சொல்லப்படுகிறது(…?!).

அன்பர் ஒருவர், இந்தப் பாடலை இங்கு தரும்படி கேட்டிருந்தார். அவர் கேட்டபின்புதான், அவர் உதவியால் இந்த பாடலை அறிந்து கொண்டேன். ஆகையால், அவருக்கு முதற்கண் நன்றிகள்.

இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி

எடுப்பு
துணை நீயே, என்றும் துணை நீயே குமரா – என்
வினை தீர்த்தருள்வாயே முருகா.

தொடுப்பு
பார்தனில் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்தனையே
கார்முகில் வண்ணன் மருகோனே, கந்தனே, கருணைக் கடலே.

முடிப்பு
கன்னித்தமிழ் கண்ட ஆண்டவனே, தணிகையில் மணக்கோலம் கொண்டவனே
துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ?

பாடல் வரிகள் அழகாக இருக்கிறதல்லவா!
இப்போ பாடலை, பாலமுரளி சார் பாடிக் கேட்கலாம்:
துணை நீயே : இங்கே கேட்கலாம் : [play]
(Pop-Up window needs to be opened)

இராமா வர்மா அவர்கள் பாடிட யூ-ட்யூபில் இங்கு கேட்கலாம்.

பாலமுரளி சாரின் நடை அப்படியே பாடலில் தொனிக்கிறது. மெதுவாக பாடிடும் நடையை, இப்பாடலை வேகமாகப் பாடினால், எப்படி இருக்கும் என வியக்க வைத்தாலும், இந்நடையும் நன்றாகத் தான் இருக்கிறது. இப்போ, வரிகளைப் பார்ப்போம்.

துணை நீயே குமரா, வினை தீர்ப்பாய் முருகா – என அட்டகாசமானதொரு எடுப்பு!

தொடுப்பில் – பார்தனில் என்ற இடத்தில் – அவர் பாடுவதைக் கேட்டால், சில சமயம் – ‘பார்த்தனின்’ என்று பாடுவது போல் இருக்கிறது.
அதனால், சற்றே வரிகளை இப்படியாக மாற்றிப் பார்க்கிறேன்!:
பார்த்தனின் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்த
கார்முகில் வண்ணன் மருகோன் கந்தனே, கருணைக் கடலே.
ஏனெனில், விந்தைகள் புரிந்தது கண்ணனுக்கே மிகவும் பொருந்துவதால். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

முடிப்பில் – துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ? என்ற வரிகளுக்கு என்ன பொருள்? முரளி (குழலின்) கானத்தில் எப்போது முருகன் தன்னை மறந்தார்? நமக்குத் தெரியாமல் ஏதேனும் புராணம் இருக்குமோ. இருந்தாலும் இருக்கும், நம்ம ஊரில் புரணாக்கதைகளுக்குத் தான் பஞ்சமே இல்லையே!
அப்படி ஏதும் இல்லையென்றால், இப்படி இருக்குமோ?. ‘முரளி’ என்று, பாலமுரளியான தன்னைச் சொல்கிறாரோ?. ஏனெனில் ‘முரளி’ என்பது இவருடைய முத்திரை போல இருக்கிறது. அப்படியென்றால், இவரோட இசையைக் கேட்டு, கந்தன் தன்னை மறந்து விட்டான் என்கிறாரோ?
அல்லது தன்னடக்கமாக இப்படிச் சொல்கிறாரோ?:
குமரா, உன்னை இதுநாள் வரை கானங்களால் துதித்து வந்தேன். என் துன்பங்களும் அதனால் மறைந்து வந்தன… ஆனால் இன்று, என்ன ஆயிற்று உனக்கு?
என் கானத்தில் தான் ஒருவேளே நீ மயங்கி விட்டாயோ?
கானத்தில் மயங்கி, என் குறைகளை தீர்ப்பதையெல்லாம் மறந்துவிட்டாயோ?
இருப்பினும், என்றும் துணை நீயே, குமரா.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, Music

மார்கழி மகா உற்சவம் 2008

இந்த வருடம் ஜெயா டி.வி யில் மார்கழி மகா உற்சவம் நிகழ்ச்சியில் இடம் பெறப் போகும் கச்சேரிகளின் நிகழ்ச்சிப் பட்டியல்:

கச்சேரிகள் நிகழும் தினங்கள் இங்கே: (ஜெயா டி.வியில் இந்நிகழ்சிகள் டிசம்பர் 15க்கு மேல் ஒளிபரப்பாகும்.)

டிசம்பர் 1 : கதரி கோபால்நாத் – சேக்ஸ்
டிசம்பர் 2 : வி.சங்கரநாரயணன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 3 : எஸ். சௌம்யா – வாய்ப்பாட்டு
டிசம்பர் 4 : ரஞ்சனி & காயத்ரி – வாய்ப்பாட்டு
டிசம்பர் 5 : சஞ்சய் சுப்ரமணியம் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 6 : சுதா ரகுநாதன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 7 : அருணா சாய்ராம் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 8 : நெய்வேலி சந்தானகோபாலன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 9 : விஜய் சிவா – வாய்ப்பாட்டு
டிசம்பர் 10: ஓ.எஸ். அருண் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 11: நித்யஸ்ரீ மஹாதேவன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 12: கணேஷ் & குமரேஷ் – வயலின்
டிசம்பர் 13: உன்னி கிருஷ்ணன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 14: டி.எம். கிருஷ்ணா – வாய்ப்பாட்டு
டிசம்பர் 15: விசாகா ஹரி – வாய்ப்பாட்டு

இந்நிகழ்சிகள் நடைபெறும் அரங்கம் :
குமரராஜா முத்தைய்யா அரங்கம்,
செட்டிநாடு வித்யாசரமம்,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.
(நிகழ்சிகள் மாலை 5 மணிக்கு துவக்கம்)

மேலும் விவரங்களுக்கு : மேக்ஸிமா மீடியா – தொலைபேசி # : 23723336

பிற்சேர்க்கை:
சௌம்யா அவர்கள், ‘சிலப்பதிகாரம் முதல் சிவன்’ வரை என்ற தலைப்பில் இந்த வருடம் தனது நிகழ்சியினைத் தந்திருக்கிறார்.
சஞ்சய் சுப்ரமணியம் அவர்களோ, ‘M.M.தண்டாபாணி தேசிகர்’ அவர்களின் பாடல்களை பாடியிருக்கிறார்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, ஜெயா டி.வி, jaya tv, Music