Monthly Archives: ஓகஸ்ட் 2006

திரைஇசையில் கீரவாணி

கீரவாணி 21வது மேளகர்த்தா ராகம்.
ஆரோஹணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ்
அவரோஹணம்: ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ

கீரவாணி இளையராஜாவிற்கு மிக மிக பரிச்சையமான ராகங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பல பாடல்களுக்கு கீரவாணியை தேர்ந்தெடுத்திருப்பாரா?. இளையாராஜா பற்பல ராகங்களில் இசையமைத்திருந்தாலும், கீரவாணிப் பாடல்களில் பல பாடல்கள் மிகவும் பிரபலமான பாடல்களாக இருக்கின்றன.

இதோ கீரவாணி ராகத்தில் அமைந்த திரைப்பட பாடல்களின் தொகுப்பு:
(எந்த ஒரு குறிப்பான வரிசையிலும் இல்லை)

1. கீரவாணி இரவிலே கனவிலே / S.P.B, ஜானகி /பாடும் பறவைகள்
இந்தப்பாடலில் ஸ்வர வரிசைகளைப் பாடுதல் மிக இனிதாக இருக்கும்.
ஸ்அ நி ஸ் ரி ஸ் நி
ஸ் அ நி ஸ் ம் க் ம் ரி எனத்தொடங்கும்!

S.P.B வரிக்குவரி பாவத்தை மாற்றுவதைக்காணலாம்!
புலி வேட்டைக்கு வந்தவன் …. (பெருமிதம்)
குயில் வேட்டைதான் ஆடினேன்… (மகிழ்வு)
புயல் போலவே வந்தவன்… (அமைதி)
பூந்தென்றலாய் மாறினேன்…. (மகிழ்வு)

2. காற்றே எந்தன் கீதம் / S.ஜானகி / ஜானி
மிகப்பிரபலமான இந்தப்பாடல் இசைக்கருவிகளின் இனிதான சங்கமம் மட்டுமல்ல. ஜானகியின் குரல் இன்னுமொரு இசைக்கருவியைப்போல், மிகச்சீராகப் பாடியிருப்பார். இந்த பாடலின் பி்ன்ணணியில் ரஜினி மழையில் ஓடிவருவதையும், அதற்குத் தகுந்தாற்போல் வயலின்கள் வாசிப்பதும், பாட்டுக்கும் காட்சிக்கும் என்னதொரு பொருத்தம் என வியக்க வைக்கும்.

3. நெஞ்சுக்குள்ளே/S.P.B, S.ஜானகி /பொன்னுமணி
S.P.B பாடும்போதும்போது ஜானகி அந்த வரிகளை அகாரத்தில் பாடுவதும் பின்னர் ஜானகி பாரும்போது, S.P.B அகாரத்தில் பாடுவதும் நல்லதொரு கலவையாக இருக்கும். பல்லவி முடிந்தபின் புல்லாங்குழல் வாசித்தும் பின்னர் வயலின்கள் வாசித்து, அதிலிருத்து சீராக தொடர்த்து மறுபடி அடுத்த சரணம் தொடர்வது, ‘இயற்கையாக’ இருக்கும்.

4. மண்ணில் இந்த/ S.P.B / கேளடி கண்மனி
சரணங்களில் S.P.B மூச்சுவிடாமல் பாடியதாக சொல்லப்பட்டு பிரபலமான பாடல். அதை மறுத்தும், சாதகமாகவும் பல வாதங்கள் நடந்திருக்கின்றன. இந்த பாடலிலும் புல்லாங்குழலின் இனிமையை ரசிக்கலாம்.

5. முன்னம் செய்த தவம்/ S.ஜானகி , S.P.B / வனஜா கிரிஜா
புல்லாங்குழலில் ‘கூக்கு…கூக்கு…கூஊக்கு’ என்று கூவுவது புல்லாங்குழலை வாசிப்பது குயிலோ எனத் தோன்றச் செய்யும். மேலும் பாடலில் பின்குரல்கள் ஹம் செய்வதும் நன்றாக இருக்கும்.

மண்ணில் வானம் பந்தல் போல தோணுதே…
விண்ணில் மீன்கள் கண்கள் சிமிட்டி காணுதே…

எங்கும் எங்கும் ஓம்கார நாதம்,
வந்து வந்து நல்லாசி கூறும் .

6. போவோமா ஊர்கோலம்/S.ஜானகி , S.P.B/சின்னத்தம்பி
ஒருகாலத்தில் இது கேட்டு கேட்டு தெவிட்டிப்போன பாடலானாலும், இந்த பாடலின் interlude கள் நன்றாக இருக்கும்.

7. உன்னை நான் அறிவேன் /S.ஜானகி / குணா
இது இதமாக நெஞ்சைத்துவட்டும் பாடல். பாடலின் நடுவே ஹிந்துஸ்தானி கஸல் ஆலாபனையும் அமைத்திருப்பார் இளையராஜா. அது முடிந்த்து அதுவே ஒரு தெலுங்கு கூத்துப்் பாடலாகவும் மாறும்!. முடிவில் வரலட்சுமியையும் பல்லவியை முடிக்குமாறும் செய்திருப்பார்!

யார் இவர்கள் மாயும் மானிடர்கள்
ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள்

8. நடந்தால் இரண்டடி / S.P.B /செம்பருத்தி
இது கனமில்லாத சாதாரணமனிதனின் தத்துவப்பாடல். S.P.B அனயாசமாக பாடியிருப்பதைக் காணலாம்.

9. தங்கச்சங்கிலி / S.ஜானகி , மலேஷியா வாசுதேவன்/தூறல் நின்னு போச்சு
எல்லோருக்கும் பிடித்த சிறந்ததொரு பாடல். மாலேஷியா வாசுதேவனின் சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.

10. மலையோரம் வீசும் / S.P.B / பாடு நிலாவே
இந்த பாடலிலும் புல்லாங்்குழலின் இனிமையைக் காணலாம். சற்றே சோகமான பாடலாக பாடியிருப்பார் S.P.B.

11. எவனோ ஒருவன் / ஸ்வர்ணலதா / அலைபாயுதே
கீரவாணியில் இன்னுமொரு சோகப்பாடல். இந்த முறை ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து.
வைரமுத்துவின் வைர வார்த்தைகள் பாடலில் பிரகாசிக்கும்.

அந்த குழலைப்போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே…

12. பாடி பறந்த கிளி / S.P.B / கிழக்கு வாசல்
நாட்டுப்புறப் பாடலைப்போல, இருக்கும். ஆனாலும் intelude களில் வயலின் மற்றும் புல்லாங்குழல் பயன்படுத்தி இருப்பார் இளையராஜா. மற்றும்மொரு சோகப்பாடல்.

13. என்னுள்ளே / ஸ்வர்ணலதா / வள்ளி
மற்றுமொரு இதமான பாடல். வேலை செய்துகொண்டே பின்னோட்டமாக ஓடிகொண்டு இருக்க சிறந்த பாடல்.

14. குயிலுக்கு கூ கூ / S.P.B, ஹரிஹரன், சங்கர் மஹாதேவன் / ஃபிரண்ட்ஸ்
மூன்று புகழ்பெற்ற ஆண் பாடகர்கள் ஒரே பாடலின் இடம்பெறுவது அவ்வளவு வழக்கமான நிகழ்வல்ல. இந்த பாடலுக்கு அந்த பெருமை உண்டு. கோரஸ்ஸாக மூன்றுபேரும் பாடும் இடங்கள் பாடலில் வியப்பைத்தரும்.

15. கண்ணே கலைமானே/ஜேசுதாஸ்/மூன்றாம் பிறை
கேட்டவர் யாரலும் மறக்கமுடியாத அமரத்துவம் வாய்ந்த பாடல். கமல்-ஸ்ரீதேவி என்று சொல்லும்போது, இந்தப்பாடல் நினவிற்கு வராமல் இருக்க முடியாது.

16. பாட்டுப் பாடவா / ஏ.எம்.ராஜா / தேன்நிலவு
மற்றொரு புகழ்பெற்ற இந்த பாடலும் கீரவாணி ராகம் தான்.

17. பூவே செம்பூவே/ஜேசுதாஸ் / சொல்லத்துடிக்குது மனசு
இந்த பாடலும் மிகவும் பிரபலமான பாடல். இரண்டாவது interlude-இல் வயலின்கள் வேகமாக வாசித்து, நமது மனத்துடிப்பை அதிகரித்து, பின்னர் சரணம் பாடும்போது மீண்டும் சாதாரணமாவது, மனதுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல இருக்கும்!

18. ராஜ ராஜ சோழன் நான் /ஜேசுதாஸ்/ இரட்டைவால் குருவி
ஜேசுதாஸ் இந்த பாடலையும் மிக அழகாக பாடி இருப்பார். சரணங்களில் ஒரு வரியை முடிக்குமிடத்தில், அதை ‘ம்ம்ம்’ என்று இழுத்து, அதிலிருந்து அடுத்த வரியைத் தொடங்குவார்!

19. உன்னை நினச்சேன் பாட்டு / S.P.B / அபூர்வ சகோதரர்கள்
இரண்டாவது interlude-இல் வரும் வயலின்களும், புல்லாங்குழலும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். காட்சியில் கமல் சர்கஸ் ஜோக்கர் போல வேடமிட்டு ஆடுவதற்கு தோதாக வயலின்கள் இருக்கும்.

கண்ணிரண்டில் நான் தான் காதலெனும் கோட்டை
கட்டிவைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை!

20. எங்கே எனது கவிதை /K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ் / கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மற்றுமொரு சிறந்த பாடல், சின்னக்குயில் சித்ராவின் குரலில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்.

Advertisements

10 பின்னூட்டங்கள்

Filed under இசை, Music

தாயே என் சரஸ்வதி

ஜேசுதாஸ் பாடி முதல் முறை கேட்ட பாடல்.
அவள் அருள் வேண்டி நின்று பாடிடத் தோணுது.

தாயே என் சரஸ்வதி – கலை
ஞானம் அருள்வாயே…
(தாயே…)

மாயே என் கலைவாணி – சேய்
என்பால் கனிவாய்…
(தாயே…)

தாயே என் குறை தீர – நாவில்
நீ அமர வேண்டும் – நாவால்
உன் புகழ் பாடி – பாமாலை
சூட்ட வேண்டும்…
(தாயே…)

ஆகமங்கள் கூறுகின்ற ஆத்ம
சுகம் நான் பெறவே…
இராக தாள சந்தி சேர்த்து
தூய கானம் பாடிடவே…
யேக நாத ரூபிணி…
நாசிகாபூஷிணி…
தாகம் தீர்ப்பாய் கலைமகளே
வரம் யாவும் தருவாயே…
(தாயே…)

2 பின்னூட்டங்கள்

Filed under இசை, Music