Monthly Archives: செப்ரெம்பர் 2009

திருவேங்கட விருத்தம்

ன்றா இரண்டா, ஓராயிரம் விருத்தங்கள் பாடிக் கொண்டே இருக்கலாம்.
அதுவும், எழில்மலை வேங்கடவனை தீந்தமிழில் பாடிடுதல் என்பது, சொல்லில் அடங்கா சுகம் தருவது…
சமீபத்துல, அரங்கனா, வேங்கடவனா, என்றெல்லாம் இங்கே கேட்டாங்க. வேங்கடரங்கன் அப்படீன்னும் சொன்னாங்க.

“அமலன் ஆதிப் பிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர் கோன், விரை
யார் பொழில் “வேங்கடவன்”,
நிமலன் நிர்மலன் நீதி வானவன்,
நீள்மதில் “அரங்கத்து அம்மான்”

என திருப்பணாழ்வார் பாசுரத்தை எடுத்து விட்டு, அரங்கநாதனை பார்கையில், முதல்லே, வேங்கடவனும், அடுத்து, அரங்கனும் தெரியறாங்கன்னு சொன்னாங்க.
ஒருவேளே, எழுந்து நின்றால் முழுதும், எழில் பொழில் நிறை மலையான், ஏழுமலையானாய்த் தெரிவானோ!
வேங்கடவன், அவன் அலர்மேல் மங்கை மனாளன், அம்புஜ நாபன்,
தயா கரன், மலைமேல் உறைபவன், பாற்கடல் மேல் துயில்பவன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மன்னன் குலசேகரன் 8ஆம் நூற்றாண்டில், சேர நாட்டு மன்னன். வேங்கடவன் மீதும், அரங்கன் மீதும் அளவிலா அன்பு கொண்டவர். குலசேகரப்பெருமாள் என ஆழ்வார்களில் ஒருவனானவர். ‘இராகவனே தாலேலோ’, என தாலாட்டுப் பாடல்களை பாடியவர். திவ்யப் பிரபந்தத்தில், இவரது, 105 பாசுரங்களுக்கு, ‘பெருமாள் திருமொழி’ எனப்பெயர். அவற்றுள், 11 பாசுரங்கள், வேங்கடாசலன் மீது இயற்றப்பட்டவை. அவற்றில் மூன்றினை இங்கே பார்ப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவத்தில், ரஞ்சனி&காயத்ரி அவர்கள் இப்படித் தான் அழகான ஆழ்வார் பாசுரங்களைப் பாடி நம் மனதை உருக்கினர். இங்கே நீங்களும் கேளுங்கள்:

குலசேகரப் பெருமாள் திருமொழி (நாலயிர திவ்யப் பிரபந்தம்)

பாசுரம் 1:
இராகம் : ஷண்முகப்பிரியா

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!

பி.கு: இந்தப் பாடலை, அமரர் கல்கி அவர்கள், மிகவும் பொருத்தமாக பொன்னியின் செல்வனின் பயன்படுத்தி இருப்பார். தன்னைப் பார்த்து, பரிகாசம் செய்யும், ஆழ்வார்க்கடியனிடம், பூங்குழலி “மண்ணரசு வேண்டேன்” எனச் சொல்ல, உடனே “ஆகா, நல்ல தீர்மானம் செய்தீர்கள்” எனச் சொல்லி, இந்தப் பாசுரத்தை பாடிக் காட்டுவார், ஆழ்வார்க்கடியான்!

பாசுரம் 2:
இராகம் : மோகனம்

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே.

பாசுரம் 3:
இராகம் : ஹம்சாநந்தி

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

எளிதான இப்பாசுரங்களுக்கு பொருள் சொல்ல வேண்டியிருக்காது. எனினும் இனிதானதை எத்தனை முறை வேண்டுமென்றாலும் படிக்கலாம் அல்லவா. கூடலார் குமரன் பதிவில் படித்து மகிழவும்!

மேலே ரஞ்சனி&காயத்ரி பாடுவது தான் உருக்கம் என்றால், இங்கு அருணா சாய்ராம் அவர்கள் பாடுவதை என்னவென்று சொல்வது? சொல்ல வார்த்தைகள் இல்லை. சே, இந்த பதிவு எழுதறதை விட, ‘சும்மா’ இருக்கலாம்! விருத்தம் பாடி முடித்தபின்: மீனாய்ப் பிறந்தாலும், படியாய்க் கிடந்தாலும், குலசேகரன் படியாய் உன் பவள வாயை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தாலும் எல்லாமும் ஒன்றுதான் – மீனாய்ப் பிறந்தாலும், படியாய் கிடந்தாலும், குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா…’ அடுத்த கிருதியினை தொடங்கிய விதமும் அருமை!

ம்பெருமானின் திருவடியில் அபயம் பெறும் பேறன்றி வேறென்ன வேண்டும். அபயம் என வந்தோர்க்கு அருள் தரும் தீன சரண்யன், விபீடனன் போல என்னையும் காப்பான் எனத் திண்ணமாய் இருப்பேன். திகழொளி தருவன். அவன் திருமேனிக்குத் திருமங்கள நீராட்டுப் பாடிட, செங்கமலக் கண்ணன், செம்மை சேர்ப்பான்.

பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்
சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கிப்
பிறப்பறுக்கும் பிரானிடம்
வாசமாமலர் நாறுவார் பொழில்
சூழ் தரும் உலகுக்கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம் அடை நெஞ்சமே
– திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி.

திரு நீராட்டு முடிந்து, அடுத்து அலங்காரம் செய்யலாமா. நம்ம தமிழ்த்தியாகய்யா, பாபநாசம் சிவன் ஹம்சாநந்தியில் அழகான கீர்த்தனை வடிச்சிருக்காரே, அதைக் கேட்டவாரு, அலங்காரப் பிரியனை, அலங்கரித்து, அகமகிழ்வோமா!

முன்னம், இங்கு ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பாடிட, குலசேகர ஆழ்வார் திருமொழிகளில் இருந்து மூன்று பாசுரங்களைக் கேட்டோம் அல்லவா, அதில் மூன்றாவது பாசுரம் ஹம்சாநந்தி இராகமாக அமைந்திருந்தது. விருத்தம் பாடிய பின்னர், தொடர்ந்து இந்தக் கிருதியினை, அதே ஹம்சாநந்தி இராகத்தில் இங்கே தொடருகிறார்கள், கேட்கவும்:

எடுப்பு
ஸ்ரீநிவாச திருவேங்கடம் உடையாய்
ஜெய கோவிந்த முகுந்த அனந்த
(ஸ்ரீநிவாச…)

தொடுப்பு:
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்
தீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்

(ஸ்ரீநிவாச…)

முடிப்பு:
ஜகம் புகழும் ஏழு மலை மாயவனே
திருமகள் அலர்மேல்மங்கை மனாளனே

ஜகன்நாதா……..
ஜகன்நாதா, சங்கு சக்ர தரனே

திருவடிக்கு அபயம்… – உன்
திருவடிக்கு அபயம், அபயம் ஐயா!

(ஸ்ரீநிவாச…)

இங்கே திருமதி.சௌம்யா அவர்கள் பாடிட இப்பாடலைக் கேட்கலாம்.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, பாபநாசம் சிவன்

இராகம் தானம் பல்லவி

“இராகம்,தானம்,பல்லவி”, என்பது நமது பாரம்பரிய இசை வழக்கங்களில் ஒன்று. என்னதான் அது என்று கொஞ்சம் அலசிப் பார்க்கலாமா? இராகம் மற்றும் தானம் பகுதிகளில் பாடல் வரிகள் இருக்காது. பொதுவான ஆலாபனை தான் இருக்கும். இது என்ன ‘ததரினஅஆஆஅ..’ ன்னு பாடிக்கிட்டு இருக்காங்களேன்னு, முதலில் கேட்பவர்களுக்கு இருப்பவர்களுக்குத் தோன்றும். நானும் அப்படி நினைத்தது உண்டு. ஆனால், நிறையக் கேட்க கேட்க, இந்த இராகம், தானம் பல்லவியில், இராகத்தினை ஆழ்ந்து இரசிக்க லயிக்க இயலும், என்பது புரிகிறது.

RTP – என வழங்கப்படும், “இராகம்,தானம்,பல்லவி” யில்
இராகம் பகுதி :- இராக ஆலாபனை செய்வது போன்றது. ஆனால், சற்றே விரிவாக ஆலாபனை செய்வது. திரு.ஜி.என்.பாலசுப்ரமணியம், இதைச் சிறப்பாகச் செய்து, அதில் முத்திரை பதித்தவர். அவர் RTP பாடுகையில், முதலில் இராகத்தின் சாயலைக் காட்டும் ஆலாபனை, தொடர்ந்து வயலின், பின்னர் நீண்ட, ஆழ்ந்த ஆலாபனை, மீண்டும் வயலின் – எனப் பகுதி பகுதியாக இராகம் பகுதியினை சுவையாகத் தருவார். இப்போதெல்லாம், அதைக் காண்பது அரிது, பாடகர் ஆலாபனையை முழு மூச்சில் முடித்துவிட, வயலினார் ஆலாபனையைத் தொடருவார். இரண்டு அல்லது மூன்று வேகங்களிலும் பாடுவது உண்டு.

தானம் பகுதி :- தாளம் + ஆலாபனை = தானம். தாளத்தோடு சேர்த்த ஆலாபனையான இதை, பொதுவாக மத்தியம காலத்தில் பாடுவார்கள், இந்தப் பகுதியில். இதில் குறிப்பாக ‘தா’, ‘னம்’, ‘தோம்’, ‘நொம்’ போன்ற சொற்கட்டுக்களால் நிறைந்திருக்கும். பொதுவாக, பாடுபவரும், வயலின் இசைப்பவரும் மாற்றி மாற்றி இசைப்பார்கள். மிருதங்கம் சில சமயங்களில் சேர்ப்பதும் உண்டு.

பல்லவி பகுதி :- இறுதியாக, பல்லவி பகுதியில் தான், பாடலின் வரிகளையும் சேர்த்து பாடப்படும். அதுவும், பொதுவாக ஒரே ஒரு வரிதான் இருக்கும். அந்த ஒரு வரியினையே தங்கள் கற்பனைக்கேற்ப, விரிவாக பலவாறு விரித்துப் பாடுவார்கள். இப்பகுதியினை ‘நிரவல்’ என அழைப்பர். அதன் பின், பல்லவியை மூன்று முறைப் பாடும், திஸ்ரம் அல்லது திரிகாலம் என்பதைப் பாடுவர். அதன் பின், பல்லவியை, நான்கு முறை பாடுவர். நடையையோ அல்லது தாளத்தையோ வெவ்வேறாக மாற்றி, பல்லவி்யைப் பாடிட, பாடலுக்கு ‘வேகம்’ சேர்க்கும் அழகினைப் பார்க்கலாம். ஒரு இராகத்தோடு நிற்காமல், பல்லவியை, இராகமாலிகையாகவும் பாடுவர்.

பல்லவி முடிந்தபின், மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் வாசிப்பது வழக்கம்.

பெரும் பாடகர்கள் அனைவரும், தங்களுக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிப்பதும் வழக்கம். ஜி.என்.பி அவர்களுக்கு, ஆலாபனையில் கவனம் என்றால், அரியக்குடியாரும், செம்மங்குடியாரும் தானம் பகுதியில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். டி.என்.சேஷகோபாலன் அவர்கள் ஒன்றரை மணி நேரம் வரை கூட, ஒரே ராகம் தானம் பல்லவியைப் பாடியிருக்கிறார். அந்த அளவிற்கு, பாடகர் தனது கற்பனைத் திறனை பயன்படுத்தி, விதவிதமான கணக்குகளில் சஞ்சரிக்கும் சங்கதிகளைப் பாடுவதற்கான தளமாக இந்த இராகம்-தானம்-பல்லவி அமைகிறது. இசையின் சுரங்களின் கணக்கில் அமையும் அறிவியலும், அவ்வறிவியலுக்கு அப்பால், அங்கே அது கலையாக பரிமாணிப்பதும், என்ன அழகு, எத்தனை அழகு!

இங்கே, ஒரு இராகம், தானம், பல்லவியினைக் கேட்கலாமா?

இயற்றியவர்: மகா வைத்யநாத சிவன்
பாடுபவர் : செம்பை வைத்யநாத பாகவதர்
இராகம் : தோடி
பல்லவி வரி : உனது பாதம் துணையே, ஓராறு முகனே, உனது பாதம் துணையே!

Ragam Thanam Palla…


(படத்தில் : செம்பை வைத்யநாத பாகவதரும், செம்மங்குடி அவர்களும்; வயலினில் இருப்பது பிடில் சௌதய்யா அவர்கள்)

மேலும், மதுரை மணிஐயர் அவர்கள் பாடிட, பல்லவி பகுதியினை மட்டும் இங்கே கேட்கலாம்:
MaduraiManiIyer-RTP
மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அவர்கள் பாடிட, இராகம் (தானம்) பல்லவியினை இங்கு கேட்கலாம்:
Maharajapuram-RTP
மேலே எப்படி மூன்று இசை விற்பன்னர்கள், மூன்று விதமாக பாடியுள்ளார்கள் என்பதைக் கேட்கையில், நமது பாரம்பரிய இசையிலும் கற்பனைக்கேற்ப பாடுவதற்கு இடமும், கட்டமைப்பும் இருக்கத்தான் செய்கிறது என்பது தெளிவாகிறது. சமீபத்தில், டி.எம்.கிருஷ்ணா அவர்கள், மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில், சற்றே மாறுதலாக, ராகம், தானம் முடிந்தபின், பல்லவிக்கு பதிலாக, வர்ணம் பாடி, வர்ணத்தின் வரிகளைக் கொண்டு நிரவல், திரிகாலம் மற்றும் ஸ்வரம் ஆகியவற்றைப் பாடினார். இதுபோல், அவ்வப்போது, பாரம்பரியத்திற்கு இழுக்கு வராமல், அதே சமயம், புதுமைகளையும் படைத்தவாறு வீறுநடை போடும் இசைக் கலைஞர்களைப் பார்க்கையில் வியப்பாகவும், இருக்கிறது!

1 பின்னூட்டம்

Filed under Ragam