Daily Archives: ஜனவரி 11, 2009

கோபாலகிருஷ்ண பாரதி பாடல்

கோபாலகிருஷ்ண பாரதியின், நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் புகழ் பெற்றவை. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை ஒரு தொடராகவே தந்திட நெடுநாளாகவே விருப்பம் இருப்பினும், அப்பெரிய சாதகத்திற்கு தயார் செய்து கொள்ளவே இன்னும் பல காலம் செல்ல வேண்டியிருப்பதால், அவற்றை பின்னர் தருகிறேன். அவற்றைத் தவிர, தனிப்பாடல்களையும், கோபாலகிருஷ்ண பாரதி இயற்றி இருக்கிறார்.
அவற்றில் ஒன்றான ‘திருவடி சரணம்’ பாடலை இங்கு பார்க்கப்போகிறோம்.

கோபால கிருஷ்ண பாரதியின் அனைத்து பாடல்களுக்குமான வரிகளை இங்கு காணலாம்.

இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல். குறிஞ்சி எனும் பாடல் தொகுப்பில் நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடி முதலில் கேட்டது. முசிரி சுப்ரமணிய ஐயர், எம்.எஸ் அம்மா, மதுரை மணி ஐயர் போன்றோரின் கச்சேரிகளில் இடம்பெற்ற பாடல். வயலின் வாசிக்க கற்றுக்கொள்ளும் போது, வர்ணத்தினை தொடும் பொழுதே, இந்தக் கீர்த்தனையை சொல்லிக் கொடுக்கும் படி எனது ஆசிரியரிடம் கேட்டிட, அவரும் என் ஆர்வத்திற்கு அணை போடாமல், சொல்லிக் கொடுக்க முயன்றார். ஆனால், என்னிடம் போதிய பயிற்சி இன்மையால், அனுபல்லவியிலேயே நின்றுவிட்டது! (இந்தப் பாடல் அனுபல்லவியில் தொடங்கி, அதற்கு அப்புறம் பல்லவியில் தொடர்வது வழக்கம்)

இராகமோ, காம்போதி. 28ஆவது மேளம் ஹரிகாம்போதியின் ஜன்யம். இங்கு நிஷாதம், ககாலி நிஷாதம் (நி2). ஆகையால், சதுஸ்ருதி த்வைதம்(த2) ஸ்வரஸ்தானத்திற்கும், ககாலி நிஷாதம் ஸ்வரஸ்தானத்திற்கும் இடைவெளி அதிகம்.
ஆரோகணத்தில், நிஷாதம் இல்லை, ஆனால் அவரோகணத்தில் உண்டு. ஆகவே பத (ப-ஸ்த), நித (நி-நித) சஞ்சாரங்களில் நிறைந்திருக்கும் கமகங்கள் இசைக்கு செழுமை சேர்ப்பவை.

மா – கா – பா – தா – ஸ்அ ; – ஸ் ரீகா | ரிஸ்ஸ்த – ரீஸ்நீ – தா – பா ; தா ||
ம – று – ப – டி – யும் – கருவ | டையும் – கு.ழி – யில் – தள்.ளி ||

பா – தா – ஸ்அ – ஸ்நி – தா – பம – பா ; | தா ; ; பா – ; ; ப நி தா ||
வ – ரு – த்த – ப – டு – த்த – வேண் – | டா – ம் . . . . என்.னை ||

நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இந்த சுட்டியில் கேட்கலாம்.

பல்லவி
திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்,
தேவாதி தேவா நின் (திருவடி சரணம்…)

அனுபல்லவி
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் – என்னை
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம்
பொன்னம்பலவா நின் (திருவடி சரணம்…)

சரணம்
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர்
வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம்
வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே!!

அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!!
தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன்
சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி சரணம்…)

(அடுத்து வருதல் : இடையறாது, தொடர்ந்து வருதல்)
பொன்னம்பலம் தன்னில் பொதுநடம் ஆடும் சபேசனே, உன் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்.
என்னை இதற்கு மேல், மீண்டும் மீண்டும் கருவடையும் கருங்குழியில் தள்ளி, வருத்தப்படுத்த வேண்டாம், ஐயா.
இப்பிறப்புக்கு மேல், இனி ஒரு பிறப்பில்லை எனும் பேறினைத் தாரும் ஐயா. அதற்காகவே, உங்கள் திருவடியே சரணம், என நான் நம்பி வந்தேன்.

புல்லாகி, பூண்டாகி, இன்னும் என்னவெல்லாம் என கணக்கெழுத முடியாத அளவிற்கு பிறப்பெல்லாம் பிறந்திளைத்தேன். தேவரீர், உம்மை இறைஞ்சிக் கேட்டு, இம்மானிட ஜன்மம் தனைப் பெற்றேன்.
அரிதாய் கிடைத்த இம்மானிடப் பிறப்பு நாளொரு வண்ணம், வீணாகி அல்லவோ போகின்றது.
எனினும், ஐயா, என் குறை இம்மியளவும், தீர்வதாகத் தெரியவில்லையே.
பிறந்த பிறப்பறுக்கும் பெம்மானே, என் பிறவிச் சுழலைதனை உடைத்திடுவாயே.

உன்னை இடையறாது, தொடர்ந்து வந்திடும், என்னை நீ ஒதுக்கித் தள்ளலாகாது.
உன்னை அரஹர வென சொன்னாலே, போதுமல்லவா.
சொல்கிறேன் நானும், அரகர, ஹரஹர, அரஹர.
ஜெய ஜெய சங்கர, ஹரஹர சங்கர.
ஐயா, என்னை தடுத்தாட்கொள்ள, நீயும் வந்தருள நற்சமயம் ஈதய்யா.
கோபாலகிருஷ்ணன், உன்னை எப்போதும்,
புகழ்ந்து, பணிந்து, போற்றி, திருவடி சரணம் என,
உன் திருவடிகளில், உன் திருவருளுக்காக இறைஞ்சிப் பணிகிறேன் ஐயா.

திருமந்திரம்:
அரகர என்ன அரியதொன்றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பன்றோ.
(அரகர எனச்சொல்ல, அடைய அரிதானது ஏதுமில்லை. எனினும், அதைச்சொல்ல அறியாரே. அரகர எனச் சொல்ல, அமரராய் ஆவாரே, ஏனெனில், பிறப்பறுக்கும், பெரும் துயர் முடிக்கும், அருஞ்சொல் தானே அரகர.)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, காம்போதி