Tag Archives: மலைமகள்

இசையன்னை

அன்னையின்றி யாரும் அவதரிப்பாரோ? அகிலம் முழுமைக்கும் அன்னையாம், அனைவருக்கும் அன்பெனும் அருளினால் காத்தருளும் உலகத்தாயின்றி யாரும் தரணியில் தவழ்வரோ? அவள் குழந்தைகள் அவளைப் பற்றி நினைக்கா விட்டாலும், அவர்களிடம் அவள் அன்பு என்றென்றும் குறைவதில்லை.

அழும் பிள்ளையாம் திருஞான சம்பந்தனக்கு ஒடிவந்து பாலூட்டிய அன்னை அவள்! இசையால் என் பிள்ளை அம்புலி புனையும் பெருமானைப் பாடித் துதிப்பான் என அன்னை அறிவாளன்றோ! – மதுரையில் மீனாட்சியாய், காஞ்சியில் காமாட்சியாய், காசியில் விசாலாட்சியாய் – அவள் தானே இட பாகத்தே வீற்றிருக்கும் உமையன்னை!

உயர் ஞானம் வேண்டி நிற்பார்க்கு புகலிடம் ஏது? வெள்ளைத் தாமரை மீதினில் வீற்றிருக்கும் , வேத ஞானம் யாவும் வித்தாய் விளைந்திருக்கும் கலையன்னை – ஞான சரஸ்வதி அன்றோ? இசை மீட்டிடும் அவள் கையில் தான் ஆதார ஸ்ருதி இழைத்திடும் வீணையன்றோ! – அவள் தானே இசை ஞானம் அருளும் வீணா வாணி, நாத ரூபிணீ!

மங்களம் தந்திடும் மலர் மகள், மாதவன் மார்பினில் வாசம் செய்யும் நில மகள் – அவள் அருள் இருந்தால் வறுமை ஏது, வாட்டிடும் பிணிகள் ஏது? துயர் விரட்டிட, தூக்கிய அவள் கைகளைத் நாம் தொழுதிட, வந்து சேராதோ வளம் யாவும்! – அவள்தானே திருவரங்கத்திலேயும் (நமக்கு) பக்கத்திலேயே இருக்கும் ஸ்ரீதேவி!

முப்பெரும் தேவியர் புகழினை இசையால் பாடிப் புகழாதவர் உண்டா? இசைப்பாடல்களிலும் அன்னையர் துதி பாடி ஆராதனை செய்யும் பாடல்கள் இல்லாமல் போகுமா? அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டு பெறுவோமே இசை இன்பம்!

மலைமகள்:
ஜனனி ஜனனி
திரைப்படம் : தாய் மூகாம்பிகை
பாடகர் : இளையராஜா

கலைமகள்:
கை வீணையை
திரைப் படம் : வியட்நாம் காலணி
பாடகர் : பாம்பே ஜெயஸ்ரீ

Kai veenaiyai.mp3

அலைமகள்:
பாடல் : பாக்ய ஸ்ரீ
பாடகர் : எம்.எல்.வசந்தகுமாரி

Bagyatha Sri.mp3

ஒரே பாட்டில் முப்பெரும் அன்னையரை பாரதி பாடுகிறான் இவ்வாறாக:

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய் !
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழி நீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

கலையன்னை:

வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே !

அலையன்னை:

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே!

மலையன்னை:

மலையிலே தான்பிறந்தாள். சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையி லுயர்த்திடுவாள், நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கி தரணிமிசை வாழ்வோமே!

பாடலை எஸ்.சௌம்யா பாடிட இங்கு கேட்கலாம்:

Maatha Parasakthi-…

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, இசையன்னை, Music