ஜெயதி ஜெயதி பாரத மாதா!

ஆகஸ்ட் 15, 1947 – சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு இடையே நீங்கள் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பைக் கேட்டிருந்தால் “ஜெயதி ஜெயதி பாரத மாதா!”  எனத்தொடங்கும் கமாஸ் இராகப் பாடலைக் கேட்டிருக்க முடியும். பாரத தேசிய கீதத் தேர்வின் கடைசி சுற்று வரையிலுக் கூட இடம் பெற்ற இப்பாடலின் சொந்தக்காரர் – விஸ்வநாத சாஸ்திரி அவர்கள். ஜி.எம்.பி அவர்களின் ரெக்கார்டுகளிலும், டி.கே.பி யாலும் பெரிதும் பாடப்பட்டு பிரபலமானது இப்பாடல்.

மயூரம் விஸ்வநாத சாஸ்திரி (1893-1958) பல்வேறு இராகங்களில் பாடல்கள் புனைந்துள்ளார். இவருடைய பாடல் முத்திரை ‘வேதபுரி’ மற்றும் ‘விஸ்வநாத’ என்பதாகும். ‘முருகன் புகழ்மாலை’ மற்றும் ‘முருகன் மதுர கீர்த்தனைகள்’ போன்ற இசை நூல்களை ஸ்வரக் குறிப்புகளோடு வெளியிட்டுள்ளார்.

திருக்குறளை இசை வடிவத்தில் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும். மூன்று முதல் ஒன்பது குறட்பாக்களை இணைத்து கிருதி வடிவில் பல்லவி-அனுபல்லவி-சரணம் முறையில் வழங்கியுள்ளார்.

2009 மார்கழி மகா உற்சவத்தின் போது – சஞ்சய் சுப்ரமணியம்  மயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு பாடி இருக்கிறார். இவற்றில் இரண்டு திருக்குறள் கிருதிகளும் அடங்கும். இப்பாடல்களுக்கான சுட்டிகள் இங்கே.

பகவன் முதற்றே உலகு – ஹம்சத்வனி

இந்த ஜாலமே – கமாஸ்

மயில் வாகனா – அமிர்தவர்ஷிணி

ஒழுக்கம் உயிரினும் – குந்தலவராளி

பாரத சாம்ராஜ்ய சுகி – தேஷ்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கமாஸ்

ஆருக்கும் அடங்காத நீலிராகம் : பேகடா

தாளம்: ஆதி

இயற்றியவர்: ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

பல்லவி

ஆருக்கும் அட‌ங்காத‌ நீலி – பொன்

அம்ப‌ல‌த்தாடும் காளி

அனுபல்லவி
பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை)

பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை

சரணம்

ப‌ர‌மநாதன்த‌னைப் பாதியாய் மாற்றினாள்

ப‌ர‌ந்தாம‌ன் முக‌ம‌தில் பல்வில‌ங்கேற்றினாள்


சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றினாள்

ஹ‌ரிகேச‌ ந‌க‌ர் வாழும் எம்மைக் காப்பாற்றினாள்

சிட்டை ஸ்வரங்கள்

;நீத பமாத மகரிஸ நிதப | ஸாகரி காநித | நீதப மபதப||

ரிஸ்க்ரி க்மாக் ரிஸ்நிரி நீதப | ஸாக்ம் ப்தநீ |தபஸ்ப அமத||

பரி (ஆருக்கும்)இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடிட கேட்கலாம்:இந்தப் பாட்டின் வரிகள் பொருளை, இல்லை இல்லை கதையை – கீதாம்மா அவர்களது பதிவில் கதையையும் அதன் காரணத்தையுமாக கேட்க வேண்டுகிறேன்.

கதைகளுக்கான சுட்டிகள்:பொன் அம்பலத்தாடும் காளி (சிவனும் சக்தியும் ஒன்றே. பெயர் அளவிலேயே வேறுபாடு.  உண்மையில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.)

பாருள் பரபிரம்மத்தை அடக்கிய சாயை

பாடும் வேதங்களாலும் அறியாத மாயை

பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள்

சிரம் அது அறுபடவே ‘விதி’தனை தூற்றினாள் பகுதி 1 பகுதி 2 பகுதி 3


பின்னூட்டமொன்றை இடுக

Filed under பேகடா

ராமா நீ யாரோ, எந்த ஊரோ?

இது என்ன கேள்வி? இராம காதையை அறியாதவர் எவரும் உண்டோ?

இராமன் பிறந்த ஊரையும் அவன் பெற்ற பேரையும் அறியாதவர் எவரும் உண்டோ?அப்படியும் ஒருவர், யாரிந்த இராமன் என வியந்தால், அதற்காக இராம நாடக கீர்த்தனங்களில் அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடலும் உண்டு:

இராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி
 
(இவனை) யாரோ என்றெண்ணாமலே
நாளும்
இவன் அதிசயங்களை சொல்லப் போமோ(யாரோ)

 
சூராதி சூரன் ராமனெனும் பேரன்
சுகுணா தீரன் ரவிகுல குமாரன் இவன்(யாரோ)

 
துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே
துடைத்தானே அவளுடல் மாசை – இன்பப்
பெருக்கமென்ன இவன் பிறக்கவே – உலகெங்கும்
பிறந்தது மங்கள ஓசை 

 
பருத்த வில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ
பார்க்க வேணும் என்னோர் ஆசை – இங்கே
வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை


ரகுகுல திலகனாக இராமன் அயோத்தியில் பிறந்தான். சீதையை மணந்தான். பின் பிரிந்தான். காட்டில் அலைந்தான். வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று இராவண வதம் செய்து, சீதையை மீட்டான். பின் அயோத்தி மீண்டு ஆண்டான்.

ஆனால் உண்மையில் இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா?

இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன்.

அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால் ஆபத்துக்கள் வரலாம் என்று அவனிடம் மற்றவர்கள் சொன்னபோதும் அதை எடுத்தெறிந்தவன், தான் வரங்கள் பெற்றபோதும் தேவர்களால் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதிலேயே குறிப்பாக இருந்தான்.

போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

 ‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்

அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;

தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;

இவனோதான் அவ் வேத முதல் காரணன்?’ என்றான்.

(கம்பராமாயணம் – இராவணன் வதைப்படலம் 135.)

இராமன் சிவனும் அல்ல, திருமாலும் அல்ல, நான்முகனாம் பிரம்மாவும் அல்ல.  நான் பெற்ற வரங்களையெல்லாம் அழிக்கின்றான். பெரும் தவம் செய்து பெற்ற வரங்களைப் பெற்றவனோ என்றால், அப்படியும் தெரியவில்லை. இராமன் இவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். இப்பாடலில் இராவணனின் சிறிதேனும் சத்வ குணம் வெளிப்படுகிறது. ஆனால் அடுத்த பாடலில், அவனது ரஜோ குணம் வெளிப்பட, எதிரில் இருப்பவன் எவனாக இருந்தால் என்ன, எதிர் நின்றே வெற்றியை முடிப்பேன் என்றான்.

மேலே கம்பன் எழுதிய பாடலைப் போலவே, தியாகராஜரும் ஒரு பாடல் புனைந்துள்ளார்.

இராகம்: தர்பார்

தாளம் : திரிபுட தாளம்

பல்லவி

எந்துண்டி வெடலிதிவோ

ஏ ஊரோ நே தெலிய, இபுடைன தெலுபவைய ஸ்ரீராமா

அனுபல்லவி

அந்த சந்தமு வேறே நடதலெல்ல த்ரிகுணாதீ

தமையுன்னாதே கானி ஸ்ரீராமா நீவு

(இராமா, நீ எங்கிருந்து வந்தாயோ? உனக்கு எந்த ஊரோ? இப்போதாவது எனக்குத் தெரிவிப்பாயா?

மனதை மயக்கும் அழகான வதனம் இருந்தாலும், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் தெரிகிறாயே –  அப்படிப்பட நீ உண்மையில் யாரோ? எந்த ஊரோ?)

சரணம்

1. சிடுகண்டென பராத சயமுல தகிலிஞ்சே

சிவலோகமு காது

(ஒரு சில பொழுதுக்குள் அபராதங்கள் நேர்ந்துவிடுமோ என்று பயப்படும் சிவலோகத்தைச் சேர்ந்தவரில்லை)

2. வடுரூபைடு பலினி வஞ்சிஞ்சி யணத் ஸூவானி

வைகுண்டமு காது

( வாமனனாக வந்து மகாபலியை ஏமாற்றி அடக்கிய திருமால் வசிக்கும் வைகுண்டமும் உன் இருப்பிடம் இல்லை.)

3. விடவிசன முலாடி சிரமு த்ரும்ப பட்ட

விதிலோகமு காது

(பொய் சொல்லி தலை அறுபட்ட பிரம்மா வசிக்கும் சத்தியலோகமும் உன் இருப்பிடம் இல்லை.)

4. திடவு தர்மமு சத்யமு ம்ருது பாஷலு கலுகு

த்வியரூப த்யாகராஜ நுத நீவு

(திடமும், அறமும், வாய்மையும், இன்சொல்லும் ஆழகானதொரு வடிவத்தில் ராமன் என்ற பெயரில் வந்தது, சரிதானே! தியாகராஜனுக்கு இதை தெரிவிக்க வேண்டுமய்யா!)

இராமா, அபராதம் செய்தவர்களுக்கு மன்னிப்பே அளித்திருக்கிறாய்.

ஏமாற்றுப் பேச்சும் உன்னிடம் காணப்படவில்லை.

சொன்ன சொல் வழுவாமல் நின்றிருக்கின்றாய்.

கபடநாடகமெல்லாம் உனக்குத் தெரியாது.

ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி என்பதில் எப்போதும் உறுதியாய் இருக்கிறாய்.

ஆகவே, முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாய், மும்மூர்த்திகளாம் சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர்களுக்கும் மேலான பரம்பொருள் நீ தான். இதுவே உன் தனிப்பெரும் பெருமை.

இப்பாடலை அபிஷேக் ரகுராமன் பாடிட இங்கு கேட்கலாம்:

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சங்கராபரணம், தர்பார்

தனுஷ்கோடியில் இராமன்

இராமனின் வில்லானது அவனது ஆயுதம். மானிடனாய் அவதரித்த இராம காதையில் அவனது இலக்கு இராவண வதம். அங்கே அவனுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. மானிடர் வழிபடும் இராமனுக்கு எதற்கு கோதண்டம்? மாரனின் கரும்பு வில்லுக்கு ஒரு பயனுண்டு. இராமனின் கோதண்ட வில்லிற்கு? அதன் இலக்கு தான் என்ன?

இராமனின் வில் இருக்கிறதே – அதன் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு – அதுதான் “தனுஷ்கோடி” – இராம தனுசின் இரு கோடிகள்.

பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள்.   அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய – கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.

கோதண்டம் என்பது ப்ரணவம். கோதண்ட தீட்சை அருளும் குருவாய் இராமன் விளங்குகிறான். கோதண்டத்தின் மேல்முனையில் இராம பிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில் இராமனின் “முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை” (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை.  திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் அன்றோ காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.

கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இம்மூனையில் இராமனின் பாதத்தைப் பற்றியாவறு புனித நதி என்னும் பெயர் பெற்றாள் கங்கை என்னும் நங்கை. (ஏனெனில் கங்கை நாரணரின் பாதத்தில் இருந்து தோன்றியது : ஸ்ரீமத் பாகவதம்) இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் “கால் வண்ணம்” என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலேஉன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)
கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!
இப்படியாக ஒரு முனையில் இருந்து மறு முனை வரை, தன்னைச் சரண் அடைய வந்து நின்ற எல்லோரையும் பிறவிப் பயன் என்னும் இலக்கினை அடைவதற்கான ஒரு சாதனமாம் கோதண்டத்தைத் தாங்கிய கோதண்டபாணியாய் திகழ்கிறான். அவனுக்கு கோதண்டம் ஆயுதம், நமக்கோ அது சாதனம்.
தியாகராஜ சுவாமிகளின் தோடி ராகப் பாடலான “கோடி நதுலு தனுஷ்கோடி” என்னும் பாடலில் இந்த சாரத்தினைத் தான் எடுத்தாள்கிறார்.
பல்லவி:
கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக
ஏடிகி திரிகேவே ஓ மனஸா.
அனுபல்லவி:
ஸூடிக ஷ்யாம சுந்தர மூர்த்தினி
மாடிமாடிகி ஜூசே மஹாராஜூலகு.
பல்வேறு (கோடி) புண்ணிய நதிகளும் தனுஷ்கோடியில் இருக்க, புண்ணிய நதியினை தேடிப் போவானேன்? அதுபோல, நீலமேக வண்ணனான இராமன் என்னும் பரமனைத் துதித்தால், அதுவே எல்லாக் கடவுள்களையும் துதித்தது போலவாகும்.
சரணம்:
கங்க நூபுரம் புனனு ஜனிச்செனு
ரங்குனி கனி காவேரி ராஜில்லெனு
பொங்குசு ஸ்ரீரகு நாதுனி ப்ரேமதோ
பொகடே தியாகராஜூ மனவி வினவே.
கங்கை அவன் காலில் தோன்றி புனித நதியானாள். காவிரியோ அரங்கநாதனை தரிசித்து ஒளி விடுகிறாள். அன்பன் தியாகராஜனும் பக்தியுடம் ரகுநாதனைத் துதித்திட இவனது விண்ணப்பத்தினை செவி சாய்த்துக் கேட்டிடவும்!
————————————————————
இப்பாடலை இங்கு பாடிக் கேட்கலாம்:

————————————————————

உசாத்துணை: டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் (1962-இல் வைதீக தர்ம வர்தினி என்னும் பத்திரிக்கையில் “தியாகோபனிஷத்” என்ற தலைப்பில் வெளிவந்தது. இவற்றை மின்னாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட திவா சாருக்கு நன்றிகள்.)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under தியாகராஜர், தோடி

அனுமனை அனுதினம் நினை

திரு. ஓ.எஸ். தியாகராஜன் அவர்களது கச்சேரியில் இருந்து:என்றைக்கு சிவ கிருபை வருமோ

ஓ ரங்க சாயி

போன்ற பாடல்களைப் பாடியதோடு, விருத்தமாக “ஸ்ரீராகவம்” ஸ்லோகத்தினை இராகமாலிகையாக பாடியது இனிமையாக இருந்தது.விருத்ததைத் தொடர்ந்து என்ன பாட்டு பாடுவார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், “அனுமனை அனுதினம்…” பாடினார்.

அப்பாடலைக் கேட்கையில் தான் உறைத்தது, இதுவரை அனுமன் பாடல் எதுவுமே நமது பதிவில் தரவில்லையே என்பது. இதோ இப்போதே, அக்குறை களைய:

இராகம்: இராகமாலிகை

தாளம்: கண்டசாபு

இயற்றியவர்: குரு சுரஜானந்தர்

பல்லவி:

அனுமனை அனுதினம் நினை மனமே

விதிவினை மறைந்திடும் இது நிஜமே

சரணம் 1:

தினம் தினம் தவறுகள் செய்கின்றோம்

மனம் குணம் மாறியே நடக்கின்றோம்

பணம் பணம் என்றே தவிக்கின்றோம்

குணநிதி அனுமனை மறக்கின்றோம்

சரணம் 2:

பக்திக்கு முதலிடம் தந்தவன்

சத்திய ராமனை கவர்ந்தவன்

பக்தரின் உள்ளத்தில் நிறைந்தவன்

பக்தியின் திலகமாய் உயர்ந்தவன்

சரணம் 3:

ராமா ராமா என பஜிப்பவன்

ராமன் சேவையை இரசிப்பவன்

ராம நாமத்தை புசிப்பவன்

ராமர் பாதத்தில் வசிப்பவன்

—————————————–

ஓ.எஸ். தியாகராஜன் அவர்கள் பாடியிருப்பதை இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

மேலும், இப்பாடலை பரத் சுந்தர் பாடிப் பதிவேற்றியுள்ளது இங்கே கேட்கலாம்:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இராகமாலிகை

வேலும் மயிலுமே

இராகம்: சுசரித்ரா
தாளம்: ரூபகம்
இயற்றியவர்: கோட்டீஸ்வர ஐயர்எடுப்பு

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே – வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே! 

தொடுப்பு

காலை மாலையுமே மனமே துதி  கந்தனை!

காலை மாலையுமே மனமே துதி காலன் வரினுமே – வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே!

முடிப்பு

சித்ரகவி நக்கீரன் தத்தை தவிர்த்த தீரன்

கஜபத்ர வீரபத்ர வீரபாகு சோதரன்

ஆறுபத்ர வசீகரன் சுசரித்ர சுசீகரன்

விசித்ர கவி குஞ்சரதாச மித்ர ருசீகரன் – சக்தி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே! – வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே!

———

பாடுபவர்: சஞ்சய் சுப்ரமணியம்

http://w.soundcloud.com/player/?url=http%3A%2F%2Fapi.soundcloud.com%2Ftracks%2F61431940%3Fsecret_token%3Ds-evxm5&show_artwork=true&secret_url=true

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சுசரித்ரா

ஹரியும் ஹரனும்

ஹரி என்பாருண்டு. ஹரன் என்பாருண்டு.ஹரியே ஹரன், ஹரனே ஹரி என்பாருண்டு.

ஹரிஹரன் என்பாருண்டு.சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் அரியையும் அரனையும் அன்பர்கள் தத்தம் நெஞ்சிலேற்றி, அதில் விஞ்சிய அன்பினை, அமுத கானங்களாக நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.

நிலாத்துண்டு சூடும் பெம்மானாகட்டும், அரவின் அணை அம்மானாகட்டும் – இருவருமே மெய்யன்பர்களின் பாட்டுடைத் தலைவனாய் பரிமளிக்கும் பாங்குதான் என்னே!  சில சமயம் இருவரையும் ஒரே பாடலிலே கூட பாடப் பெற்றுள்ளார்கள். அப்படிப்பட்ட சில பாடல்களை இங்கு பார்ப்போம்.

பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய “மா ரமணன் உமா ரமணன்” ஹிந்தோள இராகப் பாடல்.

எடுப்பு

மா ரமணன்

உமா ரமணன்

மலரடி பணி மனமே- தினமே

தொடுப்பு

மாற ஜனகன்

குமார ஜனகன்,

மலைமேல் உறைபவன்- பாற்கடல்

அலைமேல் உறைபவன்- பாவன

முடிப்பு

ஆயிரம் பெயரால் உரைத்திடும்

ஆயிரம் உருமாறினும்

உயர் தாயின் மிகு தயாபரன்- பதம்

தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும்

உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிட கேட்கலாம்:

அடுத்த பாடலில், நீலகண்ட சிவன் அவர்கள் கண்டேஸ்வரனையும், பத்மநாபனையும் இணைத்துப் பாடியுள்ளார்கள்.

இயற்றியவர்: நீலகண்ட சிவன்

பண்: காந்தார பஞ்சமம்

இராகம்: கேதாரகௌளை

தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு

ஸ்ரீகண்டேஸ்வரனை ஸ்ரீ பத்மநாபனைத்

தரிசனம் செய்வோமே

தொடுப்பு

நாகம் தரித்தோரவர் நாகம் மேல் படுத்தோரவர்

ஏகமாய் இருவரிப் வைபவம் சேவித்து

முடிப்பு 

அன்னபூர்ணேஸ்வர் மனையாளிவருக்குண்டு

அஷ்டலக்ஷ்மி மனையாட்டி யவருக்குண்டு

பொன்னும் கிரியும் வெள்ளி மலையுமிவரிக்குண்டு

பொங்கும் பாற்கடல் நவமணிகளிவர்க்குண்டு

உன்னத இடப வாகனமிவர்க்குண்டு

உயர்ந்த பறக்கும் கருடன் அவர்க்குமுண்டு

தன்னிய பாணன் முதல் தாசர்களிவர்க்குண்டு

சாது பிரகலாதன் முதலானோர் அவர்க்குமுண்டு

இப்பாடல் கோபாலகிருஷ்ண பாரதியாரின் “தில்லையம்பலத்தானை” பாடலை நினைவு படுத்துகிறதல்லவா! இதோ அந்த பாடலும்:

இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி

ராகம் : சஹானா

தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு

தில்லையம் பலத்தானை கோவிந்தராஜனை

தரிசித்துக் கொண்டேனே

தொடுப்பு

தொல்லுலகமும் படியளந்து மனதுக்கேற்கும்

தொண்டர் கலி தீரக் கருணை பொழியுமெங்கள்

முடிப்பு

தும்பைப்பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பதிங்கே

துளசிக்கொழுந்தெடுத்துக் தொட்டுக் கொடுப்பதங்கே

அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே

அஷ்டாக்ஷ்ரம் என்று அன்பு செய்வதுமங்கே

தேவாரம் திருவாசகம் படிப்பதிங்கே

திருவாய்மொழியோதி சேவிப்பதங்கே

அருமறைப் பொருளுக்கெட்டா வடிவமிங்கே

அறிதுயில் அணையானை ஆதரிப்பதங்கே

இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:

3 பின்னூட்டங்கள்

Filed under கேதாரகௌளை, சஹானா, ஹிந்தோளம்