Category Archives: Music

கண்ணுதற் கடவுளின் கண்மணி


அருணகிரி நாதர், முத்துசாமி தீக்ஷிதர் என கந்த அநுபூதி அடைந்த பெரியவர்கள் தாம் பெற்ற இறையனுபவத்தினை அழகான பாடல்களாக வடித்து தந்திருக்கிறார்கள் என்றால் – அவற்றில் மிளிரும் இறையனுபவத்தினை நாமும் உணரத்தான் அல்லவா!
அதிலிருது ஒருதுளி:

ஆதி சங்கரர் இயற்றிய ‘சுப்ரமணிய புஜங்கம்’ படித்திருப்பீர்கள்.
அதில் ‘அஷ்டாதசலோசன்’ என்றொரு வரி வரும்.
அதுபோலவே, முத்துசாமி தீக்ஷிதரும், ‘சுப்பிரமண்யேன’ எனத்துவங்கும் சுத்த தன்யாசி ராகப் பாடலில், முருகனை ‘அஷ்டாதசலோசனா’ என்றழைப்பார்.
அஷ்ட + தச = 8 + 10 = 18 கண்கள்!
எப்படி பதினெட்டு கண்கள் இருக்கமுடியும்?
அறுமுகம் என்றால் கூட பன்னிரண்டு கண்கள் தானே?

‘கொடிய மறலியு மவனது கடகமு…’ எனத்துவங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர்
‘அறுமுகமும் வெகு நயனமும்’ என, ‘பலவான கண்கள்’ என்கிறாரோ தவிர, குறிப்பிட்டுச் சொல்லவில்லை.


வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(கைக்கிளைப் படலம், 71).

எனக் கம்பன் சுவைக்கும் கண்ணுதற் கடவுளின் கண்மணி எப்படி இருப்பான்?
தகப்பன் சாயலில் தானே தகப்பன்சாமி!
நுதலிற் (நெற்றியில்) கண்ணினை உடைய கண்ணுதலாம்(கண்ணுதல்: ஆறாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை)முக்கண்ணனைப் போல முருகனுக்கும் மூன்று கண்கள் என்பார்!
முகத்திற்கு மூன்று என, ஆறுமுகத்திற்கு பதினெட்டானதோ, முருகய்யா!

கந்தன் சாயலில் மட்டுமல்ல, முழுக்க முழுக்க சிவனே. சிவனே கதிர்வேலன்.
‘பவளத்தன்ன மெனி’ செவ்வேளும் சிவனும் சொல்லாடலில் குறிப்பது செந்நிறத்தையேயாம். ‘சிவனை நிகர்’ முருகனின் ஆற்றுப்படை இடம்கொண்டது, பதினோராம் திருமுறைத் தொகுப்பில்.

ஸ்ரீகுருகுஹ’ எனத்துவங்கும் விருவிருப்பான கீர்த்தனையில் பல பதிகளும் சேவிக்கும் பரமனென முருகனைப் புகழ்வார் முத்துசாமி தீக்ஷிதர்.
அந்த பதிகளெல்லாம் யார் யாராம்?

சுரபதி – இந்திரன்
ஸ்ரீபதி – விஷ்ணு
ரதிபதி – மன்மதன்
வாக்பதி – பிரம்மா
க்ஷிதிபதி – அரசன்
பசுபதி – சிவன்

என சிவன் உட்பட, பல்வேறு பதிகளாலும் பூஜிக்கப்படுபவன் பாலசுப்ரமணியன் என்பார் பாடலின் பல்லவியில்.
இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:

அடுத்த பாடல், பிருந்தவன சாரங்கா இராகத்தில், பெரியசாமித் தூரன் அவர்களின் பாடல் – பாடலில் தூரன் – “கண்ணுதற் கடவுளின் கண்மணி’ எனக் குறிப்பிடுவதை கவனிக்கவும்:

எடுப்பு:
கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே

தொடுப்பு:
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்

முடிப்பு:
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, பிருந்தவன சாரங்கா, Music

சரஸ்வதி இராகத்தில் சரஸ்வதி!

நவராத்ரியின் நிறைவுக்கு பக்கத்திலே வந்துட்டோமில்லையா, நவராத்ரி என்றதுமே, நமக்கு சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் தானே உடனுக்கு நினைவுக்கு வருவது!
இந்தப் பதிவில் சரஸ்வதியன்னை பற்றிய பாடல் ஒன்றைப் பார்ப்போம். அதுவும் சரஸ்வதி இராகத்தில்!
ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு ராகதேவதை உண்டெனச் சொல்வார்கள். அந்த இராகத்தை மனஉருகிப் பாடுகையில், அந்த இராகத்தின் இனிமையும், அழகும் மிளிரத் தோன்றிடும் ராகதேவதை, அந்த இராகத்தைக் கேட்போர் அனவரையும் பரவசப் படுத்துவாளாம். இந்தப் பாடலைக் கண்மூடிக் கேட்டுத் இசையமுதில் திளைத்தால், அந்த சரஸ்வதி இராகதேவதை உங்கள் மனக்கண்முன் பிரகாசிப்பாள், என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா!

இராகம் : சரஸ்வதி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலை, திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

எடுப்பு
சரஸ்வதி, தயைநிதி – நீ கதி,
தண்ணருள் தந்தருள்வாய், பாரதி!

தொடுப்பு
கரமலர் மிளிர் மணிமாலையும் வீணையும்
கருணைபொழியும் கடைக்கண்ணழகும் வளர்

(சரஸ்வதி)

முடிப்பு
நின்னருள் ஒளி இல்லையானால்
மன இருள் நீங்குமோ, சகலகலைமாதே!
வெள் அன்ன வாகினி!
வெண் கமலமலர் வளரும் வாணி!
வெள்ளைக்கலையணி, புராணி!

(சரஸ்வதி)

~~~
வெள்ளை ஆடையைத் தரித்தவளே,
வெள்ளைத்தாமரை மலரதில் அமர்பவளே,
எம் இதயக் கமலத்தில் ஒளிர்வாயே, தாயே!
வெள்ளை அன்னமதை வாகனமாய்க் கொண்டவளே,
நின் அருள் இன்றி, மன இருள் நீங்குமோ? ஞானசொரூபமானவளே, எம் அஞ்ஞானம் நீங்கிட அருள்வாய்!
நல்வாக்கிற்கு அதிபதியே, கூத்தனூரில் கொலுவீற்றிருக்கும் நாயகியே, நின் தாள் சரண்.
~~~

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
–  குமரகுருபரர் (சகலகலாவல்லி மாலை)

1 பின்னூட்டம்

Filed under இசை, குமரகுருபரர், சரஸ்வதி, Music

இசை மருந்து

மீபத்தில் சென்னை சென்றபோது திருவான்மியூர் சென்று திரிபுரசுந்தரி அன்னையை தரிசிக்க இயன்றது. அன்று ஆடிவெள்ளியாதலால், அன்னையின் தங்கரத பவனியும் காணக் கிட்டியது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நாண்மலர் தூவி வலம்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூர் ஈசனையும், அம்பிகையையும் பற்றி வாரம் ஒரு ஆலயம் நடராஜ் அவர்கள் வழங்கும் பாட்காஸ்டின் சுட்டி இங்கே.


பெரியசாமித் தூரன் அவர்கள், திருவான்மியூர் வளர் தேனார் மொழி வல்லி, என தாயார் திரிபுரசுந்தரி அன்னையைப் பாடும் சுத்த சாவேரி இராகப் பாடலை இங்கு பார்க்கலாம். பாடலில், காமதேனு, தன் சாபம் தீர, வணங்கிய தலம் என்கிற குறிப்பும் உள்ளது.

மக்கு உடலில் பிணி ஏற்பட, நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவரும் மருந்து தருகிறார். பிணியும் மறைகிறது. சில சமயம் மீண்டும் மீண்டும் வருகிறது. நிரந்தரமாக பிணி தீராதா என்பது நமது கோரிக்கை. நிரந்தரமாக மட்டுமல்ல, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தொன்று இருக்கிறதாம். கோபாலகிருஷ்ண பாரதியும் ‘பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது – பேரின்பம் அங்குள்ளே’ என்பார். பிணிகளை தீர்ப்பது மட்டுமல்ல, பேரின்பம் தர வல்லதுமாம், அம்(மா)மருந்து.

சரி, அப்படிப்பட்ட மருந்தினைத் தரவல்ல மருத்துவர் யார்? பெரியசாமித் தூரனார் இப்பாடலில் அந்த மருத்துவர் வேறாரும் இல்லை – அம்பிகையேதான், “பிணியெலாம் தீர்க்கும் மருந்துடையாள்” என்கிறார்! அது என்ன மருந்து என்றால், “சதாசிவம்” என்னும் மருந்தாம். தாயே, திரிபுரசுந்தரி, சிவஞானம் எனும் மாமருந்தினைத் தருவாய், பிணிகளைக் களைவாய் என வேண்டிக் கொள்வோம்.

இராகம்: சுத்தசாவேரி
இயற்றியவர்: பெரியசாமித் தூரன்

பல்லவி:
தாயே திரிபுரசுந்தரி – உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி
தாளிணை மறவேன், சரணம்!

அனுபல்லவி:
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வல்லி – ஜகமெல்லாம் படைத்த

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி…)

சரணம்
காமதேனு வணங்கும் கருணாரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
தனிமருந்துடையாய்
பிணியெலாம் களைவாய்

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி…)

~~~~
பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கு கேட்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, சுத்தசாவேரி, Music

கால்வண்ணம் கண்டு கொண்டோம்!

இந்தப் பகுதியில் ஒரு அருமையான பாடலை பார்க்கப்போகிறோம். இப்பாடலை வஞ்சகப் புகழ்ச்சி அல்லது ‘தூற்றுமறைத் துதி’ (நிந்தாஸ்துதி) என்கிற வகையில் சொல்லலாம். அதாவது, தூற்றுவது போல போற்றும் பாடல். சமீபத்தில் தான், வஞ்சகப் புகழ்ச்சி அணியினை, அகரம்.அமுதா அவர்கள், காளமேகப் புலவரின் கவியினைக் கொண்டு வெண்பா வகுப்பினில் விளக்கி இருந்தார்.

தில்லையில் ஆனந்த நடம் ஆடும் ஈசன், கூத்தன், விரிசடை விண்ணவன், எப்போதும் ஒரு காலைத் தூக்கி நின்றாடுகிறான் அல்லவா! எதனால்? அவன் ஒரு காலைத் தூக்கி நின்றாடுவதன் மறைபொருள் ஒருபுறம் இருக்க, அவன் காலைத் தூக்கி நிற்பதால், அவன் முடமாகி நிற்கிறானோ, என்பதுபோல பலவற்றைச் சுவைபடச் சொல்லுகிறார் பாடலாசிரியர் இப்பாடலில். கவி காளமேகப் புலவரின் இந்த வெண்பா போல:

வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! – ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?

சிவன் காலைத் தூக்கி நிற்க, அவருக்கு வாத நோயாம். அவர் மைத்துணர் திருமாலுக்கோ, நீரிலியே படுத்திருப்பதால், நீரிழிவு நோயாம். பிள்ளையாருக்கோ, பெருத்த வயிராம்! ஆமாங்க, இவிங்க குடும்பமே நோய்வாய்ப்பட்ட குடும்பம் போல! இவிங்க நோய்களையே தீர்த்துக்கக் காணும், எங்கே நம்ப வினையை தீர்க்கறது?!!!

வாதம் – சீதம் என வருகிற மாதிரி, ஒரு நீண்ட பாடலே இயற்றி இருக்காரு, பாபவிநாசம் முதலியார் அவர்கள். இவர், நிறைய தமிழ்ப் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இவர் இயற்றிய பெரும்பாலுமான பாடல்கள், இந்த வகையைச் சார்ந்த இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இப்பாடலில் பாருங்கள் எப்படி அருமையா எதுகை அமைச்சிருக்காரு! :
நடம் – முடம் – திடம் – சடை
எடுப்பும், தொடுப்பும் என்னமா துடிக்குது!

இராகம் : காம்போதி
இயற்றியவர் : பாபவிநாச முதலியார்
(1650-1725)

எடுப்பு
நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்
முடமானதேன் என்று சொல்லுவீரய்யா!

தொடுப்பு
திடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்த
சடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அறிய
(நடமாடித்..)

முடிப்பு
1. திருநீறைச் சுமந்தீரோ! நெருப்பான மேனிதனில்
சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ!

ஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழ
உதைக்க சுளிக்கேறியுண்ட குணமோ!

பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்
பாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று

(நடமாடித்..)
2. தனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழ
சந்திலே முடி பிசகி நொந்ததுவோ?

இனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்
முள்ளேறுண்டதோ சொல்லும்? – முறிந்ததுவோ?

கனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்க
கண்ணெண்றுண்டதோ சொல்லும்?
விண்ணவர்க்கும் முதல்வன் என்று

(நடமாடித்..)
3. பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ?

சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றே
தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?

சத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்
தாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?
(நடமாடித்..)

இந்தப் பாடலை டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பாடிடக் கேட்கலாம். அவர் முடிப்பில் முதல் சரணத்தை மட்டுமே பாடுகிறார். சில புத்தகங்களில், இரண்டாவது சரணம் இடம் பெறுவதில்லை. மேலும், சில புத்தகங்களில், இப்பாடல், கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் இயற்றப்பட்டதென தவறாக குறிக்கப்படுவதும் உண்டு.
பாடலைக் கேட்டவாறு, அதன் பொருளை மேயலாமா?

நடம் – நடனம் ஆடித் திரியும்
இதர கவிகளால், இப்படியெல்லாம், சிவன் நடம் ஆடுவதைப் பாடிவார்:
* ஆனந்த நடம் ஆடுவார் தில்லை, அம்பலம் தன்னில் ஆனந்த நடம் ஆடுவார் தில்லை (நீலகண்ட சிவன் : பூர்வி கல்யாணி)
* ஞான சபையில் தில்லை, ஆனந்த நடமாடும், ஆனந்த நடராஜனே (பாபநாசம் சிவன் : சாரங்கா)
* நடனம் ஆடினார், வெகு நாகரீகமாகவே, கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார் (கோபால கிருஷ்ண பாரதி : வசந்தா)
* ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ (முத்துத்தாண்டவர் : மாயமாளவகௌளை)

இடதுகால் முடம் :
இடதுகாலைத் தூக்கி நிற்பதால், இவருக்கு கால் முடமோ?, இவரால் காலை ஊன்றி நிற்க இயலாததன் காரணம் என்னவோ என வினவுகிறார்!
இதர கவிகள் இப்படியெல்லாம் ‘காலை தூக்கி நின்றாடுவதை’ பாடுவார்கள்:
* இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே, நெஞ்சே (பாபநாசம் சிவன் – கமாஸ்)
* காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே, எனை கைதூக்கி ஆள் தெய்வமே! (மாரிமுத்தாப்பிள்ளை – காம்போதி)
இவரோ, இடது கால் தூக்கி நிற்பதை ‘முடம்’ என்கிறார்.

ஐந்தெழுத்து மந்திரமாம் ‘நமசிவாய’ தனில் தொடக்கமாம் ‘ந’ வெனும் எழுத்தும், உனைப்போல் தூக்கிய காலுடன் நிற்பதுவே!

திடமேவும் தில்லை நகர்
தில்லைத் தலம் என்று சொல்லத் தொடங்கினால், இல்லை பிறவி, பிணியும் பாவமும்! (கோபாலகிருஷ்ண பாரதி – சாமா)
அப்படிப்பட்ட தில்லைநகரில், “திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்”, சடைதனை விரித்த வண்ணம், பேரானந்தம் தரும் சத்-சித்-ஆனந்தம். எங்கெங்கும், எல்லாமுமாய் ஆகாசத்தில் பரந்து விரிந்து நிறைந்திருக்கும் பரப்பிரம்மம்.

சீதமும் வாதமும்
சுடலைப்பொடி பூசும், உள்ளம் கவர் கள்வனே, திரு-நீறை உடலில் பூசியதால், சீதமாகியதோ, அதனால், வாத குணமும் வந்து, இடது காலைக் கீழே வைக்க இயலாமல் தவிக்கிறீரோ? நமக்கெல்லாம், திருநீறைப் பூசினால், நமது நீர் குறையும். ஆனால், இங்கே எதிர்மறையா சொல்லுகிறாரே!. ஒருவேளை, திருநீறை நாம் பூசி, நம் சீதம் குறைந்து, அதெல்லாம் அவனுக்குப் போய்விட்டதோ! ஹ ஹா!

காலனை ஒரு காலால் உதைத்த ‘ஒரு-காலன்’:
நீரோ ஒற்றைக் காலில் ஆடுபவன்! மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, உன் காலால், காலனை உதைத்க, அப்போது, உம் காலில் தான் சுளுக்கு ஏறியதோ? அதனால் தான், ஒற்றைக் காலை எப்போதும் தூக்கியவாறே நிற்கிறீரோ?

வாசல் படி இடறிற்றோ?
ஈசனே, உமது ‘நண்பர்’ சுந்தரமூர்த்தி நாயனார், அவரது மனைவி பரவையாரை மீண்டும் சேருவதற்காக தூது போனீரோ!. அப்படி அவசர அவசரமாக அவரது வீட்டுக்குள் நுழையும்போதுதான், பரவையாரின் வீட்டு வாசற்படித் தடுக்கி கீழே விழுந்து, அதனால் முடமாகிப் போனீரோ?

எந்தன் பாவமோ?
ஒருவேளே, நான் செய்த பாவங்களால், அதனால் உனக்கு குறைவு வந்ததோ, அதனால் தான், நீர் முடமாகிப் போனீரோ?

இப்படியாக மற்ற இரண்டு சரணங்களிலும், ஒவ்வொரு கதையினைச் சொல்லி, அதில் தன் கற்பனையைப் புகுத்தி, இதனால் தான் சிவன் முடமாகிப் போனதுவோ, என்பதுபோல பாட்டினை வடிவமைத்திருக்கிறார் பாபவிநாசம் முதலியார்!

* சிவன் வேடனாக, தனஞ்செயன்(அர்ஜூனன்) உடன் போரில் நீர் அடிபட்டு விழ, அப்போது, உமது இடுப்பு எலும்பு இணைப்புகளில் வலி ஏற்பட்டு, அதனால், உம்காலைத் தூக்க இயலவில்லையோ? (சந்து: இடுப்பு; முடி:முடிச்சு:எலும்பு இணைப்புகள்; சமர்:போர்)
* தாருகா வனத்தில் பிச்சை எடுப்பவன் போல் திரிந்ததில், முள்ளும் உன்காலைத் தைத்ததுவோ?
* கனகசபை தன்னில், உமது ஆனந்த நடனம் கண்டு அதிசயத்தவர்களில் கண்பட்டுத்தான் இவ்வாறு நேரிட்டதோ?
* உன் இடது பாகத்தில் இருக்கும் சக்தி சிவகாமவல்லி, தன் பிஞ்சுப்பாதம் நோகுமென்று தரையில் கால் வைக்க தயங்கினாளோ?
* சத்தியலோக அதிபதியாம், பிரம்மனின் வேகமான தாளத்திற்கு ஏற்ப, நடமாடினீரே! அந்நடனமதில், உமக்குப் பிடித்த, அருமையான நடன முத்திரை இதுவென, ஒருகாலைத் தூக்கிக் காட்டுகிறீரோ எமக்கு!

ஏனையா, நடராஜனே, எனிப்படி ஒற்றைக் காலை தூக்கி நிற்கிறீர்?
ஆணவம், மற்றும் மாயை ஆகியவற்றில் இருந்து விடுபட, இந்தா என் அருள் என வழங்கிடும் வண்ணம்தனைக் குறிக்கத்தான், இப்படித் தூக்கிய காலுடன் நின்றீரோ, ஐயா!. பக்தி செய்பவர்களின் பாவமெல்லாம் நாசம் செய்யும், “பரமபதம் இதுவென” உன் பாதம் தனைக் காட்டும் கருணையுள்ளம் கொண்ட பெருமானே, வந்தனம் செய்வேன் உம்மை!.

பி.கு:
* அடைப்புக்குறியில் () குறிக்கப்பட்டவை பாடலை இயற்றியவர் பெயரும், பாடலின் இராகமும்.
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் சென்னை ஆன்லைன் தளத்தில் இப்பாடலைப்பற்றி, தந்துள்ளவற்றை இங்கே பார்க்கவும்.
* இப்பாடலின் வரிகளுக்கு விளக்கம் தந்துதவிய திரு.ஸ்ரீநிவாசன் சபாரத்தினம், திரு.சேதுராமன் சுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றிகள்.

2 பின்னூட்டங்கள்

Filed under இசை, காம்போதி, Music

பாலமுரளி சார் பாட்டு!

இந்த இடுகையில் நாம பார்க்கப்போகிற பாடல், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களால் பாடப்பட்டு பிரபலமான பாடல். அவரது சொந்த சாகித்யம் எனச் சொல்லப்படுகிறது(…?!).

அன்பர் ஒருவர், இந்தப் பாடலை இங்கு தரும்படி கேட்டிருந்தார். அவர் கேட்டபின்புதான், அவர் உதவியால் இந்த பாடலை அறிந்து கொண்டேன். ஆகையால், அவருக்கு முதற்கண் நன்றிகள்.

இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி

எடுப்பு
துணை நீயே, என்றும் துணை நீயே குமரா – என்
வினை தீர்த்தருள்வாயே முருகா.

தொடுப்பு
பார்தனில் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்தனையே
கார்முகில் வண்ணன் மருகோனே, கந்தனே, கருணைக் கடலே.

முடிப்பு
கன்னித்தமிழ் கண்ட ஆண்டவனே, தணிகையில் மணக்கோலம் கொண்டவனே
துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ?

பாடல் வரிகள் அழகாக இருக்கிறதல்லவா!
இப்போ பாடலை, பாலமுரளி சார் பாடிக் கேட்கலாம்:
துணை நீயே : இங்கே கேட்கலாம் : [play]
(Pop-Up window needs to be opened)

இராமா வர்மா அவர்கள் பாடிட யூ-ட்யூபில் இங்கு கேட்கலாம்.

பாலமுரளி சாரின் நடை அப்படியே பாடலில் தொனிக்கிறது. மெதுவாக பாடிடும் நடையை, இப்பாடலை வேகமாகப் பாடினால், எப்படி இருக்கும் என வியக்க வைத்தாலும், இந்நடையும் நன்றாகத் தான் இருக்கிறது. இப்போ, வரிகளைப் பார்ப்போம்.

துணை நீயே குமரா, வினை தீர்ப்பாய் முருகா – என அட்டகாசமானதொரு எடுப்பு!

தொடுப்பில் – பார்தனில் என்ற இடத்தில் – அவர் பாடுவதைக் கேட்டால், சில சமயம் – ‘பார்த்தனின்’ என்று பாடுவது போல் இருக்கிறது.
அதனால், சற்றே வரிகளை இப்படியாக மாற்றிப் பார்க்கிறேன்!:
பார்த்தனின் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்த
கார்முகில் வண்ணன் மருகோன் கந்தனே, கருணைக் கடலே.
ஏனெனில், விந்தைகள் புரிந்தது கண்ணனுக்கே மிகவும் பொருந்துவதால். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

முடிப்பில் – துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ? என்ற வரிகளுக்கு என்ன பொருள்? முரளி (குழலின்) கானத்தில் எப்போது முருகன் தன்னை மறந்தார்? நமக்குத் தெரியாமல் ஏதேனும் புராணம் இருக்குமோ. இருந்தாலும் இருக்கும், நம்ம ஊரில் புரணாக்கதைகளுக்குத் தான் பஞ்சமே இல்லையே!
அப்படி ஏதும் இல்லையென்றால், இப்படி இருக்குமோ?. ‘முரளி’ என்று, பாலமுரளியான தன்னைச் சொல்கிறாரோ?. ஏனெனில் ‘முரளி’ என்பது இவருடைய முத்திரை போல இருக்கிறது. அப்படியென்றால், இவரோட இசையைக் கேட்டு, கந்தன் தன்னை மறந்து விட்டான் என்கிறாரோ?
அல்லது தன்னடக்கமாக இப்படிச் சொல்கிறாரோ?:
குமரா, உன்னை இதுநாள் வரை கானங்களால் துதித்து வந்தேன். என் துன்பங்களும் அதனால் மறைந்து வந்தன… ஆனால் இன்று, என்ன ஆயிற்று உனக்கு?
என் கானத்தில் தான் ஒருவேளே நீ மயங்கி விட்டாயோ?
கானத்தில் மயங்கி, என் குறைகளை தீர்ப்பதையெல்லாம் மறந்துவிட்டாயோ?
இருப்பினும், என்றும் துணை நீயே, குமரா.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, Music

மார்கழி மகா உற்சவம் 2008

இந்த வருடம் ஜெயா டி.வி யில் மார்கழி மகா உற்சவம் நிகழ்ச்சியில் இடம் பெறப் போகும் கச்சேரிகளின் நிகழ்ச்சிப் பட்டியல்:

கச்சேரிகள் நிகழும் தினங்கள் இங்கே: (ஜெயா டி.வியில் இந்நிகழ்சிகள் டிசம்பர் 15க்கு மேல் ஒளிபரப்பாகும்.)

டிசம்பர் 1 : கதரி கோபால்நாத் – சேக்ஸ்
டிசம்பர் 2 : வி.சங்கரநாரயணன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 3 : எஸ். சௌம்யா – வாய்ப்பாட்டு
டிசம்பர் 4 : ரஞ்சனி & காயத்ரி – வாய்ப்பாட்டு
டிசம்பர் 5 : சஞ்சய் சுப்ரமணியம் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 6 : சுதா ரகுநாதன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 7 : அருணா சாய்ராம் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 8 : நெய்வேலி சந்தானகோபாலன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 9 : விஜய் சிவா – வாய்ப்பாட்டு
டிசம்பர் 10: ஓ.எஸ். அருண் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 11: நித்யஸ்ரீ மஹாதேவன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 12: கணேஷ் & குமரேஷ் – வயலின்
டிசம்பர் 13: உன்னி கிருஷ்ணன் – வாய்ப்பாட்டு
டிசம்பர் 14: டி.எம். கிருஷ்ணா – வாய்ப்பாட்டு
டிசம்பர் 15: விசாகா ஹரி – வாய்ப்பாட்டு

இந்நிகழ்சிகள் நடைபெறும் அரங்கம் :
குமரராஜா முத்தைய்யா அரங்கம்,
செட்டிநாடு வித்யாசரமம்,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.
(நிகழ்சிகள் மாலை 5 மணிக்கு துவக்கம்)

மேலும் விவரங்களுக்கு : மேக்ஸிமா மீடியா – தொலைபேசி # : 23723336

பிற்சேர்க்கை:
சௌம்யா அவர்கள், ‘சிலப்பதிகாரம் முதல் சிவன்’ வரை என்ற தலைப்பில் இந்த வருடம் தனது நிகழ்சியினைத் தந்திருக்கிறார்.
சஞ்சய் சுப்ரமணியம் அவர்களோ, ‘M.M.தண்டாபாணி தேசிகர்’ அவர்களின் பாடல்களை பாடியிருக்கிறார்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, ஜெயா டி.வி, jaya tv, Music

குன்னக்குடி – அஞ்சலி

குன்னக்குடி, குன்னக்குடி எனச் சொல்லி, குன்றக்குடியில் பிறந்தவருக்கு, அவர் பெயரே குன்னக்குடியாகி விட்டது!

இசை மேதை குன்னக்குடி வைத்யநாதன், வயலின் வாத்தியத்தில் கோலோச்சி உயர் நிலையில் வீற்றிருந்தார் என்பது நாமெல்லாம் அறிந்திருந்தது.

அது மட்டுமல்லாமல் திரை இசையிலும் அவர் பங்கேற்று பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
இது அவர் இசை அமைத்த ஒரு பாடல்: படம்: திருமலை தேன்குமரி (1970)

அவரது பன்னிரெண்டு வயதினிலேயே, அரியக்குடி இராமானுஜ ஐய்யங்கார், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம் போன்ற புகழ்பெற்ற இசை விற்பன்னர்களுக்கு, பக்க வாத்தியமாக வயலின் வாசித்த பெருமை, இவரைச் சாரும். பின்னாளில் வயலினை முதன்மையாகக் கொண்டு, வயலின் கச்சேரிகளை பெரிதும் நடத்தி, தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். அந்த தனி இடத்தில் அவரது தனி பாணியும், தனித்தன்மையுடன் பிரகாசிக்கும். திரு.ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாயன வித்தவான்களுடன் சேர்ந்தும், திரு.வளையப்பட்டி சுப்ரமணியன் போன்ற தவில் வித்வான்களுடன் சேர்ந்தும் கச்சேரிகளை நடத்தி, இசைக் கருவிகளில் இசை மழைகளை பொழிந்திருக்கிறார். பண்டிட் ஜாகீர் ஹூசைன் போன்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுடன் இணைந்து ஜுகல்பந்தி நிகழ்சிகளையும் தந்திருக்கிறார். தர்பாரி கானடாவில், இவர் இசையமைத்த ‘மருதமலை மாமணியே முருகய்யா’ பாடல், பாரெங்கும் பிரசிதம். இசையின் மருத்துவ குணங்களில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.

இசையில் தனிப் பெருமையுடன் திகழ்ந்த பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவுக்குப் பின்னர், அவரைப்போல் அந்த வயலினை எடுத்து யார் வாசிப்பார்கள் என்று கேட்கிறார், திரு.சுப்புரத்தினம் ஐயா: துன்பம் நேர்கையில்….

திரு. குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவுக்கு நம் இதய அஞ்சலிகள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, Music