கண்ணன் அன்றி வேறில்லை

ஆற்றங்கரையோரம் சேற்றுத்தென்னை மரநிழலில் இளைப்பாறுகையில் எங்கிருந்தோ இனியதொரு கானம் தென்றல் காற்றொடு இழைந்து வருகுதே! இப்படியொரு இணையிலா இனிமை ததும்பும் இசையை இதுநாள்வரை கேட்டிலையே. கோலக்குயில் ஓசைபோல் குழலிசைத்தார் யாரோவென என்மனம் திகைக்க காரணமெதுவென கண்டிலேனே. அதைக்கேட்கக் கேட்க என் மனத்திலும் கவிதைகள் பிறக்குதே:

மருத நிலத்தின் மேன்மை மண்ணொடு வயலொடு செழுமை!

ஆற்றுநீரும் அந்தக் குழலிசையோடு சேர்ந்திசை பாடும்!

எப்படிப்பாடும்? துள்ளித்துள்ளிக் குதித்துப் பாடும்!

ததிங்கிணத்தோம் தத்திங்கணத்தோம் என ஜதி போடும்!

ஏனிப்படி அடியே, ஏனிப்படி நதியே? எனக்கேட்டால்,

கண்ணன் குழலிசையே எனச் சொல்லும்!, அது சொல்லும்!

காத்திருத்தலே நிமித்தம் முல்லை நிலத்தில் – அதுபோலே

காத்திருந்தேன் நானும் குழலிசையைக் கேட்டே.

கண்ணன் கனிமுகத்தைக் காண்பேனா மாட்டேனே அறியேனே.

அடி நீயாவது சொல்லேனடி சற்றே ஆறுதலாய்க் கண்ணே.

காத்திருந்த முல்லை மலர்களும் ஏங்கும் – எப்போது

எங்களிறைவன் முடி சேர்வோம் என ஏங்கும்.

முல்லை மலராவது பரவாயில்லை, அவன் முடிசேர முயலும்.

அடியேன் அவன் அடியாவது அடைவேனா அறியேனே.

தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்போல் வருவான்

கண்ணன் வருவான், நான் பொய்யொன்றும் சொல்ல வில்லை.

எங்கள் கண்ணன் அன்றி வேறில்லை,

கண்ணன் அன்றி வேறில்லை, வேறில்லை.

-ஜீவா

கவிதைகளில் கற்பனையை வடிப்பவர் சிலருண்டு!

கதைகளில் கற்பனையை வடிப்பவர் பலருண்டு!

ஆனால், கற்பனையும் இல்லாமல் கதையும் இல்லாமல் கண்ணனோடு தனது நேரடி அனுபவத்தினைக் கவின்மிகு கவிதைகளாக, இசைநயத்தோடு வடித்துப்போனவர் வெகு சிலரே.

அவ்விடத்தில் தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்கள் முன்னிற்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.

அப்பாடற்தொகுதியில் இன்னுமொரு பாடலை இந்தப்பதிவுல் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன்!

ராகம்: காவடிச்சிந்து

தாளம் : திஸ்ரகதி

இயற்றிவர்: ஊத்துக்காடு வேங்கடகவி

கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம்

தென்றல் கண்டுகொழித்தது பாரும் – அந்தக்

கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணை யாதென

தரமான குழலிசை கேளும் – போன ஆவி எல்லாம் கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் – தென்றல்

தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் – நல்ல

துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென

துள்ளித் துள்ளிக் குதித்தாடும் – புகழ்

சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை – என்று

கண்டதும் வண்டொன்றும் வரவில்லை

இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே – ஒரு

காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் – எங்கள்

கண்ணன் அன்றி வேறு இல்லேன்!

(கண்ணன்)

தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் – என்ன

செளக்கியமோ என்று கேட்கும் – அட

மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ – மாதவனின்

முத்து முடி தனில் சேர்வோம் – அங்கே

மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!

(கண்ணன்)

இப்பாடலை பாம்பே சகோதரிகள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, காவடிச்சிந்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s