முன்னவனே ஆனை முகத்தவனே!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நாந்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

ஔவைப் பாட்டி, சங்கத் தமிழ் மூன்றும் வேண்டி பாடிய பாட்டு எல்லோருக்கும்தெரிந்தது। இன்னிசை இயல் இலக்கியம் ஆரியம் தமிழ் – இப்படி எல்லாமும் கேட்டு கோடீஸ்வர ஐயரால் இயற்றப்பட்ட பாடலை இங்கு பார்ப்போம். இவர் இயற்றிய “கந்த கானாமுதம்” என்னும் இசைப்பாடல்கள் தொகுப்பில் முன்னவனாம் ஆனைமுகத்தவனை வாழ்த்திப்பாடும் பாடல் – ஹம்சத்வனி இராகத்தில் அமைந்தது.

இயற்றியவர் : கோடீஸ்வர ஐயர்
இராகம் : ஹம்சத்வனி

இப்பாடலின் ஸ்வரக் குறிப்புகளுக்கு சிவ்குமார் கல்யாணராமன் அவர்களின் தளத்தினில் இங்கு பார்க்கலாம்.

எடுப்பு

வாரண முகவா துணை
வருவாய் – அருள்வாய், தயவாய்!

தொடுப்பு

ஆரணப் பொருளான கந்த
கானாமுதத்திற்குள் உன்
கருணாமுதம் உதவியே அருள் மத (வாரண..)

முடிப்பு

இன்னிசை இயல் இலக்கியம் ஆரியம் தமிழ் அறிவேதும் இன்றி
கன்னல் அனை கந்த கானமுத நன்னூலை
உன்னும் கவிகுஞ்சரதாசன் நான்
உன்னருள் கொண்டே பண்ணத் துணிந்தேன்;
முன்னவனே நீ முன்நின்றால் முடியாதது
ஒன்றில்லை! ஆதலால் அதிவேகமாகவே… (வாரண…)

இப்பாடலை டி.எம் கிருஷ்ணா பாடிட ராகா.காம் தளத்தில் இங்கு கேட்கலாம்:

பாடலை பிரியா சகோதரிகள் பாடிட இங்கு கேட்கலாம்:

இப்படியாக வினைகள் தீர்க்கும் கணபதி கடவுள் வாழ்த்துப் பாடி துவங்கினால் – நினைத்தது முடியாதது இல்லைதான். ‘கந்த கானாமுதம்’ என்னும் இந்த இசைத்தொகுப்பில் 72 மேளகர்த்தா இராகங்களிலும் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இத்தனைக்கும் இவை அத்தனையும் தமிழ்ப்பாடல்கள். ஏற்கனவே இவற்றில் இரண்டு பாடல்களை இங்கே பார்த்திருக்கிறோம்। அண்மையில் மறைந்த கலைமேதை எஸ்.ராஜம் அவர்கள், இந்த இசைத்தொகுப்பின் கீர்த்தனைகளை ஸ்வரக்குறிப்புகளோடு பதிவு செய்திருக்கிறார், வருங்கால சந்ததியின் வளத்தினை மனத்தில் இருத்தி.

கணபதி அருள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்று எல்லா வளங்களையும் எட்டிட நமது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.

1 பின்னூட்டம்

Filed under ஹமசத்வனி

1 responses to “முன்னவனே ஆனை முகத்தவனே!

  1. வணக்கம்…

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_3.html) சென்று பார்க்கவும்… நன்றி…

பின்னூட்டமொன்றை இடுக