மார்கழி : அரங்கர் வரார் பராக் பராக்!

பராக்! பராக்! என்கிற கூக்குரலைக் கேட்டு மக்கள் அனைவரும் அக்குரல் வந்த திசையினில் திரும்பிப் பார்க்கின்றனர்! கட்டியங்காரர்களின் குரல் வந்த திசையில் பார்த்தால், ஆகா, அங்கே, அழகானதொரு பரிமேல் என்ன கம்பீரத்தோடு அமர்ந்திருக்கிறார் அழகர் அரங்க நாதர்! தகிக்கும் தங்கக் குதிரையில், தனக்கே உரிய தோரணையோடு அல்லவா வீற்றிருக்கிறார்! வீதிஉலா இதமாய் இருக்க, காவிரிக் காற்று, அவருக்கு சாமரமாய் வீசுகிறது போலும்!

நாதஸ்வரம் முதலான மங்கள வாத்தியங்கள் முழங்க, அரங்கநாதர் அசைந்தாடி வரும் இந்த அழகான திருவீதி உலாக் காட்சியை, தெற்கு சித்திரை வீதியில் இருந்து, மகான் ஒருவர் கண்டு தரிசித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறாருமில்லை, சாட்சாத் தியாகராஜரே. அரங்கனின் திருபவனி வீதி வழி வர, ஒவ்வொரு வீட்டிலும் நின்று உபசாரங்களைப் பெற்றுக்கொண்டும், கற்பூர ஆரத்தியினை வழங்கிக்கொண்டும், நடந்தேறிக் கொண்டிருந்தது அவ்வுலா.

தீவட்டிகளின் ஒளியில், தியாகராஜர், தான் காணும் கண்கொளாக் காட்சியை, தித்திக்கும் இறையனுபவத்தினை, அழகான தோடி இராகக் கீர்த்தனையாய் வடிக்கிறார். அப்பாடலினின் பல்லவி ‘ராஜு வெடலெ ஜூதாமு ராரே கஸ்தூரி ரங்க’ என்பதாகும். பாடலின் சாகித்ய வரிகளுக்கு இங்கே அணுகவும்.

இப்போ, இந்தப் பாடலை தமிழில் மொழி பெயர்த்துப் பார்க்கலாமா!

பல்லவி:
கஸ்தூரி ரங்கனின் களையான பவனியைக் கண்டு களிப்போமே!

அனுபல்லவி:
திகழும் நவரத்தினங்கள் மின்ன,
திருவரங்க நாதன் பவனி கண்நிறைய,
பரிமேல் அமர்ந்த சுகந்தனை
பாருலக வேந்தரும் சேவிக்க,
(கஸ்தூரி ரங்கனின்..)

சரணம்:
காவிரிக் கரையில் புண்ணியபுரி திருவரங்கமதில்
சீரார்ந்த சித்திரை வீதிதனில் அலங்காரங்களுடன்
அரங்கனின் பவனி அற்புதக் காட்சியன்றோ!
விண்ணுலகத் தேவரும் மலர்த்தூவி வழிபட,
தியாகராஜனும் பாடிப்பரவசம் கொள்ள
(கஸ்தூரி ரங்கனின்…)

கன்னியர்கள் பலரும், தங்களை ஆண்டாளாக பாவித்துக் கொண்டு, அரங்கனை சூழ்ந்து நிற்கிறார்கள். கன்னியர்கள் மட்டுமா, இதர பெண்டிரும், அரங்கனை தங்கள் வீட்டுப்பையனாகவே தரித்துக் கொண்டு, அவனது வீதிஉலாவினை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் தொலைவில் இருந்து மட்டுமே தியாகராஜரால் காண முடிகிறது. கூட்டத்தைத் தாண்டி, அருகில் சென்று சடாரியினையும், துளசி பிரசாதத்தினையும் பெற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை. வருத்தத்துடன், அந்த இடத்திலேயெ நின்றுகொண்டு இருக்க, திடீரென வீதிஉலாவும் நின்று விடுகிறது. வாகனத்தை தூக்குபவர்களாலோ ஒரு அடிகூட மேலும் எடுத்து வைக்க இயலவில்லை. திசைதோஷம் ஏதும் உள்ளதோ என்றெண்ணி, அர்சகர்கள் கோயில் தேவதாசிகளை அழைத்து ஆகம சாஸ்திரங்களில் உள்ளபடி அந்த திசைக்கான நடனத்தினை ஆடச் சொல்கிறார்கள். அதனால் ஒரு மாற்றமும் இல்லை. திடீரென, அர்ச்சகர் ஒருவருக்கு ஆவேசம் ஏற்பட, அவர் தியாகராஜர் இருந்த இடத்தைக் காட்டி, ஸ்ரீரங்கநாதரின் சிறந்த பக்தன் ஒருவன், அருகில் வர இயலாமல் தவிப்பதை எடுத்தியம்ப, மற்றவர்கள் அவரை அருகில் அழைத்து வந்து, அவருக்கு பிரசாதங்களை வழங்கிட, பின்னரே திருபவனி தொடர்ந்ததாம். இச்சம்பவத்தினை ‘வினராதா நா மனவி…’ என்கிற தேவகாந்தாரி இராகப் பாடலில் தியாகராஜர் குறிப்பிடுவதைக் காணலம். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

இவ்வாறாக, அரங்கநாதன், தன்னை தரிசிக்க திருவையாற்றில் இருந்து தியாகராஜர் வந்திருக்கின்றார் என்பதனை அந்த ராஜவீதியில் குழுமியிருந்த அனைவருக்கும் அறிவித்ததாகக் கொள்ளலாம். அன்று மாலை, சிறப்பு முத்தாங்கி சேவையில் கலந்துகொள்ள, கோயில் அதிகாரிகள், தியாகராஜரை அழைத்துவர, அங்கே தியாகராஜர், சந்நிதியில் பாடிய பாடல், காம்போதி இராகக் கிருதி ‘ஓ ரங்கசாயி..’, மிகவும் பிரபலமான பாடல். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

ஓ ரங்கசாயி பாடலை, எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிட, ராகா.காமில் கேட்டிட சுட்டி இங்கே. சபாஷ் சொல்லவைக்கும் சங்கதிகளில் காம்போதியின் அழகை இன்னும் இனிமையாக யாரேனும் தரக்கூடுமோ? ஓ என்ற ஒற்றைச் சொல்தான் எத்தனை விதமான ஸ்வரங்களில் வலம் வருகிறது!


இந்த பாடலை, தமிழிலும் பார்க்கலாமா?

பல்லவி:
ஓ ரங்க விமான சயனா – நான் அழைத்தால்
ஓ என நீயும் வாராயோ?

அனுபல்லவி:

சாரங்கம் தரித்தவனும் உனைக்கண்டு
கைலாயபதி ஆனானோ,
(ஓ ரங்க விமான சயனா…)

சரணம்:
பூலோக வைகுண்டமே திருவரங்கமென
பெருமிதமும் நீயே கொண்டு, ஸ்ரீதேவியுடன்
குலவிக்கொண்டிருந்தால், எம்
குறைகளைக் களைவது எப்போது?

மற்றவர் உயர்வை பொறுக்கா
மானிடரிடை துயர்பல பெற்றநான்
நின்திருஉருவினையும் முத்துமார்பினையும்
காண வந்தேனே, தியாகராஜனின்
இதயமெங்கும் அலங்கரித்தவனே,
(ஓ ரங்க விமான சயனா…)

பின்னர் மேலும் இரண்டு கிருதிகளையும் அவர் இயற்றிட, அவையானவை: சூதாமு ராரே எனும் ஆரபி இராகக் கிருதி மற்றும், கருண ஜூடவய்ய என்கிற சாரங்கா இராகப்பாடல். இந்த ஐந்து பாடல்களையும் சேர்த்து, “ஸ்ரீரங்க பஞ்சரத்தினம்” என்று வழங்குவர்.

இந்த ஸ்ரீரங்க பஞ்சரத்தின கீர்த்தனைகளை கேட்கையில், ஆதி சங்கரர் இயற்றிய ரங்கநாத அஷ்டகம் தனையும் நினைவு கூறாமல இருக்க இயலாது. பாடகர் பலரும் ரங்கநாத அஷ்டகத்தின் ஒரிரண்டு சுலோகங்களை விருத்தமாக பாடிப்பின், ஓ ரங்க சாயி பல்லவியினைத் துவங்குவார். தியகராஜரும் ‘ரங்க சாயி’ எனச்சொல்வது மட்டுமல்ல. ‘காவேரி தீரே, கருணா விலோலே…’ போன்ற அஷ்டக வரிகளையும் தியாகராஜரின் சாகித்யத்தோடு ஒப்பு நோக்கலாம்.

ரங்கநாத அஷ்டகத்தில் இருந்து சில சுலோகங்களை இங்கு விருத்தமாகப் பாடக் கேட்கலாம்:
(அருணா சாய்ராம் அவர்கள் பாடிட)

Advertisements

1 பின்னூட்டம்

Filed under இசை, தியாகராஜர்

One response to “மார்கழி : அரங்கர் வரார் பராக் பராக்!

  1. nice to see this site. Srirangam is a place where.gyana and bhakthi move shoulder to shoulder and where contributer to literature is more
    amuthanagarajan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s