Daily Archives: ஜூன் 20, 2010

கண்ணுதற் கடவுளின் கண்மணி


அருணகிரி நாதர், முத்துசாமி தீக்ஷிதர் என கந்த அநுபூதி அடைந்த பெரியவர்கள் தாம் பெற்ற இறையனுபவத்தினை அழகான பாடல்களாக வடித்து தந்திருக்கிறார்கள் என்றால் – அவற்றில் மிளிரும் இறையனுபவத்தினை நாமும் உணரத்தான் அல்லவா!
அதிலிருது ஒருதுளி:

ஆதி சங்கரர் இயற்றிய ‘சுப்ரமணிய புஜங்கம்’ படித்திருப்பீர்கள்.
அதில் ‘அஷ்டாதசலோசன்’ என்றொரு வரி வரும்.
அதுபோலவே, முத்துசாமி தீக்ஷிதரும், ‘சுப்பிரமண்யேன’ எனத்துவங்கும் சுத்த தன்யாசி ராகப் பாடலில், முருகனை ‘அஷ்டாதசலோசனா’ என்றழைப்பார்.
அஷ்ட + தச = 8 + 10 = 18 கண்கள்!
எப்படி பதினெட்டு கண்கள் இருக்கமுடியும்?
அறுமுகம் என்றால் கூட பன்னிரண்டு கண்கள் தானே?

‘கொடிய மறலியு மவனது கடகமு…’ எனத்துவங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர்
‘அறுமுகமும் வெகு நயனமும்’ என, ‘பலவான கண்கள்’ என்கிறாரோ தவிர, குறிப்பிட்டுச் சொல்லவில்லை.


வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(கைக்கிளைப் படலம், 71).

எனக் கம்பன் சுவைக்கும் கண்ணுதற் கடவுளின் கண்மணி எப்படி இருப்பான்?
தகப்பன் சாயலில் தானே தகப்பன்சாமி!
நுதலிற் (நெற்றியில்) கண்ணினை உடைய கண்ணுதலாம்(கண்ணுதல்: ஆறாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை)முக்கண்ணனைப் போல முருகனுக்கும் மூன்று கண்கள் என்பார்!
முகத்திற்கு மூன்று என, ஆறுமுகத்திற்கு பதினெட்டானதோ, முருகய்யா!

கந்தன் சாயலில் மட்டுமல்ல, முழுக்க முழுக்க சிவனே. சிவனே கதிர்வேலன்.
‘பவளத்தன்ன மெனி’ செவ்வேளும் சிவனும் சொல்லாடலில் குறிப்பது செந்நிறத்தையேயாம். ‘சிவனை நிகர்’ முருகனின் ஆற்றுப்படை இடம்கொண்டது, பதினோராம் திருமுறைத் தொகுப்பில்.

ஸ்ரீகுருகுஹ’ எனத்துவங்கும் விருவிருப்பான கீர்த்தனையில் பல பதிகளும் சேவிக்கும் பரமனென முருகனைப் புகழ்வார் முத்துசாமி தீக்ஷிதர்.
அந்த பதிகளெல்லாம் யார் யாராம்?

சுரபதி – இந்திரன்
ஸ்ரீபதி – விஷ்ணு
ரதிபதி – மன்மதன்
வாக்பதி – பிரம்மா
க்ஷிதிபதி – அரசன்
பசுபதி – சிவன்

என சிவன் உட்பட, பல்வேறு பதிகளாலும் பூஜிக்கப்படுபவன் பாலசுப்ரமணியன் என்பார் பாடலின் பல்லவியில்.
இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:

அடுத்த பாடல், பிருந்தவன சாரங்கா இராகத்தில், பெரியசாமித் தூரன் அவர்களின் பாடல் – பாடலில் தூரன் – “கண்ணுதற் கடவுளின் கண்மணி’ எனக் குறிப்பிடுவதை கவனிக்கவும்:

எடுப்பு:
கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே

தொடுப்பு:
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்

முடிப்பு:
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, பிருந்தவன சாரங்கா, Music

சரஸ்வதி இராகத்தில் சரஸ்வதி!

நவராத்ரியின் நிறைவுக்கு பக்கத்திலே வந்துட்டோமில்லையா, நவராத்ரி என்றதுமே, நமக்கு சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் தானே உடனுக்கு நினைவுக்கு வருவது!
இந்தப் பதிவில் சரஸ்வதியன்னை பற்றிய பாடல் ஒன்றைப் பார்ப்போம். அதுவும் சரஸ்வதி இராகத்தில்!
ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு ராகதேவதை உண்டெனச் சொல்வார்கள். அந்த இராகத்தை மனஉருகிப் பாடுகையில், அந்த இராகத்தின் இனிமையும், அழகும் மிளிரத் தோன்றிடும் ராகதேவதை, அந்த இராகத்தைக் கேட்போர் அனவரையும் பரவசப் படுத்துவாளாம். இந்தப் பாடலைக் கண்மூடிக் கேட்டுத் இசையமுதில் திளைத்தால், அந்த சரஸ்வதி இராகதேவதை உங்கள் மனக்கண்முன் பிரகாசிப்பாள், என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா!

இராகம் : சரஸ்வதி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலை, திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

எடுப்பு
சரஸ்வதி, தயைநிதி – நீ கதி,
தண்ணருள் தந்தருள்வாய், பாரதி!

தொடுப்பு
கரமலர் மிளிர் மணிமாலையும் வீணையும்
கருணைபொழியும் கடைக்கண்ணழகும் வளர்

(சரஸ்வதி)

முடிப்பு
நின்னருள் ஒளி இல்லையானால்
மன இருள் நீங்குமோ, சகலகலைமாதே!
வெள் அன்ன வாகினி!
வெண் கமலமலர் வளரும் வாணி!
வெள்ளைக்கலையணி, புராணி!

(சரஸ்வதி)

~~~
வெள்ளை ஆடையைத் தரித்தவளே,
வெள்ளைத்தாமரை மலரதில் அமர்பவளே,
எம் இதயக் கமலத்தில் ஒளிர்வாயே, தாயே!
வெள்ளை அன்னமதை வாகனமாய்க் கொண்டவளே,
நின் அருள் இன்றி, மன இருள் நீங்குமோ? ஞானசொரூபமானவளே, எம் அஞ்ஞானம் நீங்கிட அருள்வாய்!
நல்வாக்கிற்கு அதிபதியே, கூத்தனூரில் கொலுவீற்றிருக்கும் நாயகியே, நின் தாள் சரண்.
~~~

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
–  குமரகுருபரர் (சகலகலாவல்லி மாலை)

1 பின்னூட்டம்

Filed under இசை, குமரகுருபரர், சரஸ்வதி, Music