சமீபத்தில் சென்னை சென்றபோது திருவான்மியூர் சென்று திரிபுரசுந்தரி அன்னையை தரிசிக்க இயன்றது. அன்று ஆடிவெள்ளியாதலால், அன்னையின் தங்கரத பவனியும் காணக் கிட்டியது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நாண்மலர் தூவி வலம்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூர் ஈசனையும், அம்பிகையையும் பற்றி வாரம் ஒரு ஆலயம் நடராஜ் அவர்கள் வழங்கும் பாட்காஸ்டின் சுட்டி இங்கே.
பெரியசாமித் தூரன் அவர்கள், திருவான்மியூர் வளர் தேனார் மொழி வல்லி, என தாயார் திரிபுரசுந்தரி அன்னையைப் பாடும் சுத்த சாவேரி இராகப் பாடலை இங்கு பார்க்கலாம். பாடலில், காமதேனு, தன் சாபம் தீர, வணங்கிய தலம் என்கிற குறிப்பும் உள்ளது.
நமக்கு உடலில் பிணி ஏற்பட, நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவரும் மருந்து தருகிறார். பிணியும் மறைகிறது. சில சமயம் மீண்டும் மீண்டும் வருகிறது. நிரந்தரமாக பிணி தீராதா என்பது நமது கோரிக்கை. நிரந்தரமாக மட்டுமல்ல, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தொன்று இருக்கிறதாம். கோபாலகிருஷ்ண பாரதியும் ‘பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது – பேரின்பம் அங்குள்ளே’ என்பார். பிணிகளை தீர்ப்பது மட்டுமல்ல, பேரின்பம் தர வல்லதுமாம், அம்(மா)மருந்து.
சரி, அப்படிப்பட்ட மருந்தினைத் தரவல்ல மருத்துவர் யார்? பெரியசாமித் தூரனார் இப்பாடலில் அந்த மருத்துவர் வேறாரும் இல்லை – அம்பிகையேதான், “பிணியெலாம் தீர்க்கும் மருந்துடையாள்” என்கிறார்! அது என்ன மருந்து என்றால், “சதாசிவம்” என்னும் மருந்தாம். தாயே, திரிபுரசுந்தரி, சிவஞானம் எனும் மாமருந்தினைத் தருவாய், பிணிகளைக் களைவாய் என வேண்டிக் கொள்வோம்.
இராகம்: சுத்தசாவேரி
இயற்றியவர்: பெரியசாமித் தூரன்
பல்லவி:
தாயே திரிபுரசுந்தரி – உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி
தாளிணை மறவேன், சரணம்!
அனுபல்லவி:
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வல்லி – ஜகமெல்லாம் படைத்த
(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி…)
சரணம்
காமதேனு வணங்கும் கருணாரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
தனிமருந்துடையாய்
பிணியெலாம் களைவாய்
(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி…)
~~~~
பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கு கேட்கலாம்.