ஜனவரி 20, 2009...8:44 AM

தமிழிசை வரலாறு : எஸ்.சௌம்யா

மறுமொழிகளுக்குச் செல்க

ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008 நிகழ்ச்சியில், நேற்று, ‘சிலப்பதிகாரம் முதல் சிவன்’ வரை என்ற தலைப்பில் திருமதி.சௌம்யா அவர்கள் சங்க கால இலக்கியம் முதல் பாபநாசம் சிவன் வரை, தமிழிசை வரலாற்றின் முக்கியமான மைல்கற்களை தொட்டுப் போகும்படியானதொரு தொகுப்பினை தந்திருந்தார்கள்.

வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா
வயலின் : எம்பார் எஸ். கண்ணன்
மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்

சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:
1. அகநானூறு பாடல் : ஆடமைக் குயின்ற
இயற்றியவர் : கபிலர்

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக

2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்… (ஆய்ச்சியர் குரவை)
இயற்றியவர் : இளங்கோ அடிகள்
இராகம் : மோகனம்

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

(மோகனத்தின் சுரஸ்தானங்களை கிரகபேதம் செய்ய வரும் மத்யமாவதி, அதற்கு எடுத்துக்காட்டு போல, சிலம்பின் இன்னொரு பாடலை காட்டினார்.)
இராகம் : மத்யமாவதி

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

(மோகன இராகத்திலிருந்து கிரக பேதம் செய்து ஹிந்தோளாம் இராகத்தினை அடைவதை இன்னொரு சிலப்பதிகாரப் பாடலைப் பாடுகிறார்.)
இராகம் : ஹிந்தோளம்

கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;

சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.

கச்சேரியில் – சிலம்பில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள் – நேரடி நிகழ்சியில் “வடவரையை மத்தாக்கி” பாடலையும், “மூவலகம் ஈரடியான் பாடலையும்” பாடியுள்ளார்.
வடவரையை மத்தாக்கி (சுத்த சாவேரி – ஹிந்தோளத்தில் இருந்து கிரக பேதம்)
மூவுலகம் ஈரடியான் (சுத்த தன்யாசி – சுத்த சாவேரியில் இருந்து கிரக பேதம்.)
(இவ்விரண்டும் , ஜெயா டி.வி யின் ஒளிபரப்பில் இடம்பெறவில்லையென்பது வருத்தமானதே.)

3. தேவாரம்
நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)

“களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே”

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)
மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)
இயற்றியவர் : திருஞான சம்பந்தர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
இராகம் : நவ்ரோஜ்

மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)

ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)
இயற்றியவர் : சுந்தரர்

(விருத்தம்)

ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.

சென்ற பகுதியில் திருமதி.சௌம்யா அவர்கள், தேவாரத் திருமுறைகளில் இருந்து பாடல்களை வழங்குவதைப் பார்த்தோம். As a Sequel, இப்பகுதியில் தமிழ்மறையாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இருந்து பாடல்களை வழங்குகிறார்.


“…பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே”

என்ற சங்ககாலப் பாடலின் வழி வரும் ஆழ்வார் பாசுரங்களின் (பா + சுரம் = பாசுரம் = இசைப்பா!) திரட்டில் இருந்து, இரண்டு பாடல்கள் இசைக்கப் பார்க்க விருக்கிறோம்.
இப்பாடல்களுக்கு இசை அமைத்தது, இந்நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கும், எம்பார் எஸ்.கண்ணன் அவர்களேயாம்!.

4. திவ்யப் பிரபந்தம்

முதல் பாடல்:
இயற்றியவர் : நம்மாழ்வார்
தலம் : வானமாமலை
இராகம் : கௌளை

நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.

நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் ‘தோத்தாத்ரி நாதன்’ எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை – திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சேற்றுத்தாமரைத் தீர்த்தம். ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி, திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றானாம். இத்தலத்தின் சாத்தப்படும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

அடுத்த பாடல்:
இயற்றியவர் : குலசேகர ஆழ்வார்
இராகம் : தோடி

என்னை வருக வெனக்குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப்
பொய் அச்சம் காட்டிநீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கொருநாள்
வருதியேல் என்சினம் தீர்வன்நானே

இந்தப் பாடலுக்கு நாட்டியமாடிப் பார்க்க வேண்டும். அழகான முக பாவங்களைக் காட்டிட ஏதுவானதொரு பாடல். இயலும், இசையும், நாடகமும் – முத்தமிழும் ஒன்றே சங்கமிக்க, இனியதொரு களனாய் இப்பாடல் அமைந்திருக்கிறது!

பொருளைப் பாருங்களேன்!:
கண்ணா, என்னை ஒரு இடத்திற்கு வருமாறு சொன்னாய்.
நீயோ, அந்த குளிர்ந்த முல்லை மலர் பந்தலில் மறைந்தவாறு,
அங்கே நெடுநேரம் காத்திருந்த வேறோருவரை அணைத்துக் கொண்டிருந்தாய்.
என்னை நீ பார்த்தும், மெல்ல விடுவித்துக் கொண்டாய். உன் பொன்னிற ஆடையைத் தாங்கி, ஏதோ, என்னைக் கண்டு அச்சம் கொண்டு விலகுவது போல், பொய் நாடகமாடுகிறாய்.
என்றேனும் ஒருநாள், நீ என்னருகே வருவாய் அல்லவா, அன்று பார்த்துக்கொள்கிறேன்!
என் சினத்தை அப்போது, தீர்த்துக்கொள்கிறேன்!

நித்திலமான இப்பாடல்களை இங்கே கேட்கலாம்:

ஞானத்தில் முதிர்ந்த பெரியோர்கள் அருளிய அமுதம் மறைகளாம். தமிழ்மறையாய் தீந்தமிழ் சோற்களை, செந்நெல் விதையாய் விதைத்து, விளைந்தது அல்லவோ, இவ்வாழ்வார் பாசுரங்கள்!

5. கம்ப இராமாயணம்
இராகம் : நாட்டை

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.

தமிழிசை வரலாறு, இப்போது பனிரெண்டாம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது! ‘விருத்தத்திற்கு கம்பன்’ எனச் சொல்லும் அளவிற்கு, மரபுக் கவிகளின் மகுடமாம், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமகாதை வாழ்த்துப்பாடலை பாடுகிறார். ‘உலகம் யாவையும்’ எனக் கம்பர் பாடத் துவங்கி, விரிந்து, பரந்து, உயர்ந்தோங்கி நிற்கும் அவரது காவியம் போல், தமிழும், இசையும் ஒருங்கே பற்பல நூற்றாண்டுகளுக்கு பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர்.

6. திருவாசகம்
ஏற்கனவே, சமயக் குரவர் நால்வரில், மூவரைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, நான்காவது நபர் – திருவாசகம் தந்து அன்பர் மனதை உருக்கிய மணிவாசகர்! மணிவாசகரின் காலத்தைப் பற்றி முரணான கருத்துக்கள் இருப்பினும், பொதுவாக அவர், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப் படுகிறது. சமயக் குரவர் நால்வரின் காலத்தைப் பற்றி மேலும் படிக்க இந்தக் கட்டுரையை நாடவும்.

எட்டாம் திருமுறை
இயற்றியவர் : மணிவாசகர் (மாணிக்கவாசகர்)
இராகம் : மோகனம்

பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.

இத்திருவாசகம் தன்னில், தன்னை ஆட்கொண்டு அருளிய சிவபெருமானின் நேர்மையையும், சிறப்பினையும் நாம் ‘தெள்ளேணம்’ கொட்டுவோம் என்கிறார் அருள் மணிவாசகர்.
பாடலின் பொருளை இங்கே பார்க்கவும்.
அது என்ன ‘தெள்ளேணம்’?
கைகளால் கும்மி அடித்துப் பாடுவோம் அல்லவா, அப்படிப் பாடுவது தான் ‘தெள்ளேணம்’.
பண்டைத் தமிழர், குழல் வைத்துப் பாடினர், யாழ் வைத்து பாடினர், பறை முழக்கினர்,
ஏன் எந்த இசை வாத்தியமும் இல்லாமலும், தன் கைகளைத் தட்டியே, இசை எழுப்பினர்!
இவர், கைகள் மட்டுமல்லாமல், காலையும் தட்டுவர். அப்போது, காலில் அணிந்திருந்த கழலும் இசை எழுப்பும்!
இப்படியாக, நமது இசைக்கு, அன்றாட வாழ்வில் நிகழும் நாட்டுப்புறப் பாடலும் வளம் சேர்க்கும்.
~~~~~~~~~~~~~~~~
7. திருப்புகழ்
சந்தங்களின் இமயம் அருளாளர் அருணகிரியின் திருப்புகழில் இருந்து அடுத்த பாடல். இப்பாடலை திருமதி.சௌம்யா அவர்கள், இரண்டு வேகத்திலும் பாடுவது அருமை. சந்தத்திற்கு இசைந்து வருவது போல், எத்தனை எத்தனை அருமையான சொல்லாடல்கள். புதுமையான சொற்களும், பழமையான் சொற்களும், புகுந்து விளையாடும் இவர் பாக்களில்.
தமிழால் திருப்புகழுக்கு பெருமையா, அல்லது, திருப்புகழால் தமிழுக்குப் பெருமையா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். முன்னது தொடக்கம், பின்னது முடிபு என்பேன் நான். இந்தப் பாடலின் தான் பாருங்களேன், எத்தனை மூன்றெழுத்துச் சொற்கள்! மூன்றெழுத்துல் என் மூச்சிருக்கும்?!

இயற்றியவர் : அருணகிரி நாதர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
இராகம் : ஹமீர் கல்யாணி
தலம் : பழநி

தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் …… அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய …… எறியாதே

கமல விமல மரக தமணி
கனக மருவு …… மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு …… தரவேணும்

குமர சமர முருக பரம
குலவு பழநி …… மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி …… மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் …… தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய …… பெருமாளே.

பாடலைக் கேட்டவாறு, பொருளைப் பார்க்கலாமா?
(பாடல் 0:40 இல் தொடங்குகிறது)

அருஞ்சொற்பதம்:
தமர் : சுற்றம்
தறு : கொடுமை, வன்மை
மறலி : காலன் (யமன்)
முறுகு : கடினம்; திண்ணிய
சமர் : போர்
குலவு : ஒளிர்ந்து
பகடு : வலிமையான; ஆண் யானை
முடுகு : விரைந்து
அவுணர் : அசுரர்
அமர் : போர்
அயில் : வேல்

நம் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களுமாக சேர்ந்து வாழ்கிறோம். ஆக சுற்றத்தோடு வாழ்கிறோம். மேலும், பல பொருள் ஈட்டி, செல்வம் தனைச் சேர்த்து வாழ்கிறோம். மேலும், அவரவர், தமது தகுதிக்கேற்ப, மற்றவரை மேலாண்மை செய்து, ஆட்சியும் செய்து வருகிறோம்.

சுற்றம், செல்வம், ஆட்சி – இந்த மூன்றும், நமக்கு அயலாகப் போவது எப்போது? அதாவது, நம்மை விட்டுப் போவது – கொடுமையான கூற்றுவன், தன் பாசக்கயிற்றைக் கொண்டு, நம் தலைக்குமேல் ஏறிந்து, சுருக்கிடும் பொழுது.

அப்படிக் கூற்றுவன், அந்தக் கடினமான பாசக்கயிறை எறியாமல் இருக்க என்ன செய்ய?
தாமரை போன்று அழகானவனும், மாசற்ற, மரகதமணி மற்றும் தங்கத்தைப் போன்றவனுமான முருகனின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கான அருளினை, குமரா, நீயே தரவேண்டும். உன்னைப்பிரிந்து வாடும் என் தனிமை அகலும் படியாக அறிவினைத் தர வேண்டும்.

இங்கே கந்தனை நான்கு பெயர்களால் அழைத்து, பாடற்தலத்தினைச் சொல்லுகிறார்:
குமரா, சமரா (போர்வீரா), முருகா, பரமனே,
குலவும் – ஒளிர்ந்து, திகழ்ந்து விளங்கும் பழநிமலை தனில் உறைவோன் – என.

அச்சுறுத்தும் யானையை, (வள்ளிக்காக) உன் செயல் முடிய, விரைந்து வரச் செய்தவனே,
அமரர்(தேவர்) துன்பங்களையும், அசுரர்களின் உடலினையும் (ஆணவத்தினையும்), ஒருசேர அழிந்திடும்படி, போர் செய்து அருள்வோனே,

அறமும், நிறமும், வேலும், மயிலும், அழகும், உடைய கந்த பெருமாளே!
~~~~~~~
8. சித்தர் பாடல்கள்
பாடல் : நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே
இராகம் : புன்னாகவரளி
இயற்றியவர் : பாம்பாட்டிச் சித்தர்

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
ஆடு பாம்பே, தெளிந்தாடு பாம்பே!

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.

9. இராம நாடகம்
இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)
பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!
இராகம் : மோகனம்

அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே பார்க்கவும்.

10. மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1787)
பாடல் : காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே
இராகம் – யதுகுலகாம்போதி

11. முத்துத்தாண்டவர் (1560(?) – 1640(?))
பாடல் : இத்தனை துலாபாரமாய்
இராகம்: தன்யாசி

பாடல்: ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ!
இராகம் : மயாமாளவகௌளை

மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் அவர்கள் இருவரைப் பற்றிய பதிவினை இங்கே பார்க்கவும்.

இவர்கள் மூவரும் – தமிழ் மூவர் என தமிழ் இசை அறிஞர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்கள். தமிழில் கிருதி வடிவினை (பல்லவி – அனுபல்லவி – சரணம் என்ற பாடல் வடிவு) அறிமுகப் படுத்தியவர்கள்.

12. கோபால கிருஷ்ண பாரதி (1811 – 1896)
பாடல் : யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை
இராகம் : தேவமனோகரி
இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிரசிதம். ஆழ்ந்த தத்துவப் பொருள் நிறைந்தவை இவரது பாடல்கள். மேலும் இரண்டு நாயன்மார்கள் (நீலகண்ட நாயனார், காரைக்கால் அம்மையார்) சரித்திரங்களையும் படைத்துள்ளார்.

13. அண்ணாமலை ரெட்டியார் (1865-1891)
இவரது காவடிச் சிந்து பாடல்கள் மிகவும் பிரபலம். ‘காவடிச் சிந்தின் தந்தை’ எனவே இவரை அழைக்கலாம்!. ‘சென்னிகுளம்’ என்ற இவரது ஊர்ப்பெயரை, இவரது பாடல்களில் காணலாம். இவர், தமது, 26ஆவது, வயதிலேயே இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய இழப்பாகும்.

இசைத்தமிழின் இனிதானதொரு அங்கம் சிந்து. பாடுவதற்கு எளிதானது. இதில் ஐந்து பகுதிகள் அடங்கும் : பல்லவி, அனுபல்லவி, பின்பு மூன்று கண்ணிகள் கொண்ட சரணம். காவடிச் சிந்து, என்பது, சிந்தில் ஒருவகை. இதில் பல்லவியும், அனுபல்லவியும் இல்லாமல், சரண வரிகள் மட்டுமே.

பாடல் : பூமி மெச்சிடும் (காவடிச்சிந்து)
இப்பாடலின் இருந்து மூன்று கண்ணிகள்:

பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கோர் துணையானவன்
மயில் வாகனன், ஒரு கானவன் – எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே
தடுமாறுதே; இதழ் ஊறுதே – மெத்தத்
தீமையாம் இருளினில்
காமலாகிரியும் மீறுதே.

மார வேளினாலே கோர மனகாம் வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே! – சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடியடி கோதையே!

14. பாபநாசன் சிவன் (1890 – 1973)
‘தமிழ் தியாகராஜர்’ எனப் போற்றப் படும் பாபநாசம் சிவன் அவர்கள், நிறைய தமிழ்ப் பாடல்களை, மூம்மூர்த்திகள் போல, தமிழுக்கு இயற்றித் தந்தவர்கள். மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது. தமிழிலும் அதைப்போன்ற கீர்த்தனைகளைப் பாடிட முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியவர். கிருதி, வர்ணம், பதம், ஜவளி என பற்பல இசை வடிவங்களிலும், பற்பல இராகங்களிலும் தமிழில் இசைத்துக் காட்டிய பெருமை இவரைச் சாரும்.

பாடல் : கஜவதனா கருணாசதனா
இராகம் : ஸ்ரீரஞ்சனி

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர -
ஸ்ரீ கஜவதனா கருணா சதனா
தொடுப்பு
அஜனமரேந்திரனும் முனிவரும் பணியும்
பங்கஜ சரணா, சரணம் சரணம்!
முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா, ஓம்கார
கஜவதனா கருணா சதனா!

15. மகாகவி பாரதி (1882 – 1921)
பாடல்: வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(இதைவிடவும் இனிதாக நிறைவு செய்ய இயலுமோ!, அழகாக திருமதி.சௌம்யா அவர்கள் நிறைவு செய்தார், இவ்வாறாக, ‘சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை’ என்ற தலைப்பிட்ட இந்நிகழ்ச்சியை.)
இப்படியொரு அருமையான நிகழ்ச்சியை வழங்குவதற்கான மூல காரணம், அவருக்கு அமைந்த அருமையான குரு – டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி.முக்தா, அவர்களை இங்கே குறிப்பிடுகிறார். குறிப்பாக இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார இசை ஆராய்ச்சிகள், அவற்றில் இருந்து நாம் அறியக் கிடைக்கும் பண்டைத் தமிழரின் இசை நுணுக்கங்கள்.

மறுமொழி இடுக