ஜூலை 16, 2008...2:02 AM

எங்கு நான் செல்வேன் ஐயா?: பெ.தூரன்

மறுமொழிகளுக்குச் செல்க

தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.

இந்த வருடம் பிறந்தநாள் நூற்றாண்டு காணும் அமரர் தூரன் அவர்களைப் “பல்கலைச் செம்மல்” எனவே சொல்லலாம். பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்தது முதல் – விடுதலைப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.
மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர். திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது ‘முருகா, முருகா’ பாடலும் இடம்பெற்றது.
இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:

1. இசைமணி மஞ்சரி (1970இல்)
2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)
3. கீர்த்தனை அமுதம் (1974இல்)
4. நவமணி இசைமாலை (19880இல்)

வடநாட்டினர் தமக்கு அருகிலுள்ள கர்நாடக நாட்டைப்பார்த்து அங்கும் அதற்கு தெற்கிலும் உள்ள இசைக்கு கர்நாடக இசை என்று பெயரிட்டு அழைத்தனர்.

எனத் தூரன் ஒரு சொற்பொழிவில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் இசைச்சங்கம் தூரன் அவர்களில் இசைப் பங்களிப்புகளை பெருமைப்படுத்தும் விதம், 1972இல், ‘இசைப் பேரறிஞர்’ பட்டத்தினை வழங்கியது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1970இல், ‘கலைமாமணி’ பட்டம் வழங்கியது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்(Fetna) இந்த வருடம் ஒர்லாண்டோ,ஃப்ளோரிடாவில் பெரியசாமித்தூரன் அவர்கள் பிறந்த நூற்றாண்டினை விமர்சையாக கொண்டாடுகிறது, மூன்று நாட்களுக்கு, ஜூலை நான்கு முதல்!. அந்தப் பக்கத்தில் நீங்கள் இருந்தால், விழாவில் கலந்து கொள்ளலாமே?

தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்! “தமிழ் கலைக் களஞ்சியம்” என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார். பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் ‘பாரதியின் நூல்கள் – ஒரு திறனாய்வு’ என்கிற தலைப்பில்! “கம்பனுக்கு விருத்தம் போல், பாரதிக்குச் சிந்து” எனத் தெளிவாக இனங்கண்டு சொல்கிறார்.

தூரன் அவர்கள் இயற்றிய இசைப்பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:

Thooran_Keerthanigal
Thooran_Keerthanig…
Hosted by eSnips

தூரன் அவர்கள் இயற்றிய பாடல்களில், நான் கேட்டு மெய்மறந்த பாடல்கள்:
* முருகா முருகா என்றால் உருகாதோ (சாவேரி)
* கொஞ்சிக் கொஞ்சி வா முருகா (கமாஸ்)
* கலியுகவரதன் கண்கண்ட தெய்வமாய் (ப்ருந்தாவன சாரங்கா)
* இன்னமும் அவர் மனம் (சஹானா)
* எங்கு நான் செல்வேன் ஐயா (த்வஜவந்தி)
* தொட்டு தொட்டு பேச வரான் (பேஹாக்)

இந்த எல்லாப் பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், இந்த இடுகைக்கு அவற்றில் ஒன்றினைப் பார்ப்போம்.

எங்கு நான்…

எங்கு நான் செல்வேன் ஐயா
இராகம் : த்வஜவந்தி
பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

எடுப்பு
எங்கு நான் செல்வேன் ஐயா – நீர் தள்ளினால்
எங்கு நான் செல்வேன் ஐயா?

தொடுப்பு
திங்கள் வெண் பிஞ்சினை செஞ்சடை
தாங்கிடும் சங்கராம்பிகை தாய் வளர்மேனியா!

முடிப்பு
அஞ்சினோர் இடரெல்லாம் அழிய ஓர் கையினால்
அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே!
நஞ்சினை உண்டுமே, வானுளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே!

என்ன அருமையாக, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு பாருங்க!.
வெண்மதியாம் வெண் அம்புலிதனை தன் செஞ்சடைதனில் அணிந்த சங்கரன்,
(சுருளார்ந்த செஞ்சடை என திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார்.)
தன்னைப் பணிபவர் தீவினைதனை சங்காரம் செய்யும் சங்கரனைப் பாடுகிறார் தூரனார்.
அப்படிப்பட்ட சங்கரன், தன் மேனியில் அம்பிகையை, தாயை தன்னொரு பாகத்தில் தரித்திருக்கிறானாம்.
அஞ்சியவர் இடரெல்லாம் தவிடுபொடியாய் தகர்த்திட தனது கையினால்,
அபயம் காட்டிடும் அருட்பெரும் அண்ணல் இவனாம்.
(சிவனுக்கு ‘கறை மிடறு அண்ணல்’ என்றொரு பெயரும் உண்டு)
நான்மறைகளால் போற்றப்படும் நாதன், வானுளோர் நலம்பெற
நஞ்சினை உண்ட ‘விடமுண்-கண்டனை’ நாடிடுவார்களாம்.

அப்படிப்பட்ட அண்ணல், என்னைப்பாராது புறம் தள்ளினால், நான் வேறெங்கு செல்வேன்?
எனக்கு வேறென்ன வழி? எல்லாமும் அவனாய் இருக்கும்போது?
அவன் இன்றி எதுவும் இல்லை எனப்படும் போது,
அவனே சரணம் என அவன் தாள் பணிவதன்றி வேறென்ன செய்வேன் யான்?

பெ.தூரன் பற்றி மேலும் அறிய தொடர்புடைய சுட்டிகள்:
* தூரன் வாழ்க்கைக்குறிப்புகள்
* தென்றல் இதழில் திரு.மதுசூதனன்
* சென்னை ஆன்லைன் தளம்

3 மறுமொழிகள்


மறுமொழி இடுக